டோஹா, டிச. 17-
கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா, மொரோக்கோ அணிகள் மோதவுள்ளன. 22ஆவது உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி கட்டாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டி தற்போது இறுதியாட்டத்தை எட்டியுள்ளது.
இம்மாபெரும் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் அணியினர் அர்ஜெண்டினா அணியை சந்தித்து விளையாடவுள்ளனர். இரு முன்னணி அணிகள் மோதுவதால் இந்த இறுதியாட்டத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கட்டார் உலகக் கிண்ண போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக குரோஷியாவும் மொரோக்கோ அணிகள் மோதவுள்ளன. இவ்வாட்டம் இன்று இரவு 11 மணிக்கு கலிபா அனைத்துலக அரங்கில் நடைபெறவுள்ளது.
குரோஷியா அணியினர் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியிடம் தோல்வி கண்டனர். கடந்த உலகக் கிண்ண போட்டியில் இறுதியாட்டம் வரை முன்னேறிய குரோஷியா அணியினர் இறுதி ஆட்ட வாய்ப்பை இழந்து விட்டனர். இதனால் கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா அணியினர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷியா அணியினர் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் குரோஷியா அணியினர் வெற்றி பெறுவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் குரோஷியா அணியினருக்கு மொரோக்கோ ஆட்டக்காரர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற ஜாம்பவான்களை வீழ்த்தி மொரோக்கோ அணியினர் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர். உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வரலாற்றில் ஆப்பிரிக்க அணி ஒன்று அரையிறுதிக்கு முன்னேறியது இது தான் முதல் முறை. அச்சாதனையை மொரோக்கோ அணியினர் பெற்றிருந்தனர். ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் மொரோக்கோ அணியினர் பிரான்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு இறுதியாட்ட வாய்ப்பை இழந்து விட்டனர். ஆகையால் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தை வெற்றி பெற்று உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிக்க மொரோக்கோ ஆட்டக்காரர்கள் இறுதிவரை போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மொரோக்கோ அணியினர் லீக் சுற்றுடன் தோல்வி கண்டு வெளியேறியது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனிடையே கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்சியும் பிரான்ஸ் வீரர் கிளையன் எம்பாப்பேவும் தலா 5 கோல்களை அடித்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். அர்ஜெண்டினாவின் ஜுலியன் அல்வாரெஸ், பிரான்ஸ் அணியின் ஓலிவர் ஜிராவ்ட் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.
இவ்விரு வீரர்களும் தலா 4 கோல்களை அடித்துள்ளனர்.
குரோஷியா - மொரோக்கோ
இரவு 11 மணிக்கு, 17 Dec, 2022
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்