மாயாஜாலத் துறையில் தனக்கென ஒரு பெயரை பதிக்க எண்ணம் கொண்டுள்ள மாயவித்தகன் விக்கி மலேசிய ரீதியில் யாரும் இதுவரை செய்யாத சாதனை யைப் படைத்துள்ளார். மலேசியாவிலேயே எந்தவொரு மாயவித்தகரும் செய்யாத ஓர் அதிசயத்தை இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கை புவாயா அஸ்லி கம்பத்தில் புரிந்துள்ளார்.
இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, 12 பூட்டுகள் போடப்பட்ட நிலையில் சவப்பெட்டிக்குள் விக்கி அடைக்கப்பட்டார். சவப்பெட்டியின் மீது ஆணிகளும் அடிக்கப்பட்டன. அதன் பின்னர் சவப்பெட்டியின் மேல் கற்கள் நிறைந்த மண் கொட்டப்பட்டது.
சவப்பெட்டிக்குள் 2 நிமிடம் மட்டுமே விக்கியால் இருக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்படி பல சவால்கள் நிறைந்த சாகசத்தில் இவர் வெற்றியடைவாரா என அங்கு கூடியிருந்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. விக்கியின் இந்த சாகசத்தை நேரில் காண இருள் சூழ்ந்த இடம் என்றும் பாராமல் பிள்ளைகளுடன் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். மழைக் காரணமாக அவ்விடம் சேரும் சகதியுமாக இருந்தது.
விக்கியுடன் இருந்த அவரின் மனைவி மற்றும் பெற்றோர், விக்கி இந்த சாகசத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சவப்பெட்டிக்குள் இருந்து உயிருடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் சாகசத்தை புரிவதற்கான நேரம் நெருங்க நெருங்க விக்கியின் குடும்பத்தாரின் கண்க ளில் கண்ணீர் வழியத் தொடங்கியது. இந்த காட்சியை கண்ட விக்கியும் கண் கலங்கினார்
குடும்பம், உயிரை பணயம் வைக்கும் சாகசம், மீண்டும் உயிருடன் திரும்புவேனா என்ற பல குழப்பத்துடன் விக்கி அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த 6 அடி குழியை தொட்டு வணங்கி விட்டு சாகசத்தை புரிய குழிக்குள் இறங்கினார்.
விக்கியின் உடலில் கட்டவிருந்த இரும்பு சங்கிலியையும் அதில் பொருத்தப்பட்டிருந்த பூட்டுகளும் உண்மையானவையா என்பதை சோதனை செய்ய பொதுமக்களிலிருந்து ஒரு பிரதிநிதி அழைக்கப்பட்டு அதனை சோதனை செய்து உறுதி செய்தார்.கைகளையும் கால்களையும் தாராளமாக அசைக்க முடியாத வகையில் இரும்பு சங்கிலி அவரின் உடலில் பிணைக்கப்பட்டது. உடலில் பிணைக்கப்பட்ட இரும்பு சங்கிலியுடன் அவர் சுற்றியுள்ளவர்களை வணங்கிவிட்டு சவப்பெட்டிக்குள் படுத்தார். சவப்பெட்டியின் கதவு மூடப்பட்டதுடன் ஆணிகளும் அடிக்கப்பட்டன. குழிக்கு முன்னால் பொருத்தப்பட்டிருந்த திரையில் இரண்டு நிமிடத்திலிருந்து நிமிடம் குறைக்கப்பட்டுக் கொண்டே வந்தது.
இரண்டு நிமிடமே வழங்கப்பட்ட பட்சத்தில் 14 விநாடிகளில் நேரம் நிறுத்தப்பட்டது. இருந்தபோதும் சவப்பெட்டியில் எந்தவித அசைவும் இல்லை. அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சவப்பெட்டியை உடைத்து விக்கியை அங்குள்ளவர்கள் காப்பாற்றுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், கூடுதலாக மண் குழிக்குள் கொட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவர்களின் பார்வை சவப்பெட்டியின் மீது இருந்த வேளையில் விக்கி மற்றொரு இடத்திலிருந்து வெளியே வந்ததுடன் மக்கள் மத்தியில் மண்டியிட்டு வணங்கியதை கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரமாக கோஷமிட்டனர்.
பலரும் அவரை கட்டித் தழுவி பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டனர். அதன் பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அங்கு வந்தி ருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அவரின் இந்த கற்பனைக்கும் அப்பாற்பட்ட சாகசம் அங்குள்ளவர்களை கவர்ந்ததுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தியது என்றுதான் கூற வேண்டும்.
மக்கள் மத்தியில் பேசிய விக்கி, இந்த சாகசம் ஒரு சாதனை அல்ல அடுத்தக் கட்டத்திற்கு நான் செல்வதற்கான ஒரு படிதான். இதற்காக நான் 6 மாதம் பயிற்சியை மேற்கொண்டேன். அதுமட்டுமின்றி, இந்த வெற்றி எனது வெற்றியல்ல மலேசியர்களின் வெற்றி, மலேசியர்களாலும் மாயாஜாலத் துறையில் உலகம் தரம் நிறைந்த சாகசங்களை வழங்க முடியும் என்பதனை இச்சாதனை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து நெருப்பில் சாகசம் புரிய தாம் எண்ணம் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளவுள் ளதாகவும் கூறினார்.மாயாஜாலத் துறையில் உலகப்புகழ் பெற்ற டேவிட் பிலேய்ன், டேவிட் கோபர்பீல்ட் போன்றவர்களுக்கு நிகரான சாகசங்களை புரிய விக்கி எண்ணம் கொண்டுள்ளார்.
ஐஸ் பெட்டிக்குள் 64 மணிநேரம் உணவின்றி டேவிட் பிலேய்ன் சாகசம் புரிந்தார். அவரது அந்த சாகசத்தை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 66 மணிநேரம் ஐஸ் பெட்டிக்குள் இருந்து முறியடித்தார். இந்த உலக சாதனையை முறியடிக்க விக்கி ஐஸ் பெட்டிக்குள் 69 மணிநேரம், முடிந்தால் 3 நாட்கள் உணவின்றி இருக்கவுள்ளார். இச்சாதனையை அவர் செய்து முடித்தால் உலக சாதனையாளர் புத்தகத்தில் விக்கியின் பெயரும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கியை பற்றி...
மாயவித்தகன் என அடையா ளத்தை கொண்ட விக்கியின் முழுப்பெயர் விக்னேஸ்வரன் த/பெ அழகு என்பதாகும். இவர் தன் ஆரம்பக்கல்வியை செந்தூ லிலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி தேசிய பள்ளியில் தொடங்கி இடைநிலைக்கல்வியை மெக்ஸ்வெல் இடைநிலை பள்ளியில் பயின்றுள்ளார்.
பள்ளியில் பயிலும் காலத்திலேயே மாயாஜாலத் துறையில் விக்கிக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. எஸ்.பி.எம் தேர்வை முடித்த பின்னர் கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற மாய வித்தை நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் அத்துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் விக்கிக்கு மீண்டும் தோன்றி யுள்ளது.
ஆகையால் தனது ஆசையை தன் பெற்றோரிடம் கூறிய விக்கிக்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் விக்கி மாயாஜால கல்வியை தாய்லாந்து, பெங்கோங்கிலுள்ள இண்டர்நேஷனல் மேஜிக் அகாடமியில் தொடர்ந்துள்ளார்.
அத்துறையில் மேற்கல்வியை முடித்த விக்கி அனுபவத்திற்காக மாய வித்தை நிகழ்ச்சியை நடத்த எண்ணியுள்ளார்.இருந்தபோதும் அவரின் திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.தொடர் முயற்சியில் கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர் கோமாளி (கிளாவ்ன்) வேடத்தில் வந்திருந்த மக்கள் மத்தியில் மாய வித்தைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. தனக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தியதுடன் கூடுதல் அனுபவங்களையும் அவர் பெற்றார். இத்துறையில் மேலும் சாதிக்க வேண்டுமென பல புதிய, கற்பனைக்கு அப்பாற்பட்ட வித்தைகளை இவர் கற்றுக் கொள்ள தொடங்கினார். இப்படி பல திறமைகளை கொண்டு இவருக்கு ஆஸ்ட்ரோ வானவில்லில் மாய வித்தை நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் தன் திற மைகளை வெளிக்கொணர செய்த விக்கி மலேசிய மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மாயாஜாலத் துறையில் சுமார் 11 ஆண்டு அனுபவம் கொண்ட விக்கியிடம் மறக்க முடியாத அனுபவத்தை பற்றி கேட்டபோது, ஒருமுறை தான் தலைநகரிலுள்ள பிரசித்திப் பெற்ற தங்கும் விடுதியில் நெருப்பில் மாயாஜால வித்தையை மேற்கொண்டபோது தற்செயலாக சட்டையில் தீப் பற்றிக் கொண்டது. அதனை கண்டவர்கள் நான் மாய வித்தைதான் செய்வதாக எண்ணி கரகோஷமிட்டனர்.
ரசிகர்களின் மத்தியில் அதனை பொருட்படுத்தாமல் மேடையின் திரை மூடிய பின்னரே சட்டையில் ஏற்பட்ட தீயை நான் அணைத்தேன். இதனால் என் கையில் தீக் காயங்கள் ஏற்பட்டதை இப்பொழுது வரை மறக்க முடியாது என்றார்.விக்கியைபோல் இத்துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்ய அவர் தயாராக உள்ளார். இத்துறையில் இந்தியர்களின் ஈடுபாடு மிகக் குறைவாகத்தான் உள்ளது. இத்துறையிலும் நல்ல வருமானத்தை ஈட்டலாம் என்று கூறினார் விக்கி.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்