உலகம் முழுவதும் புதிய இணைய வைரஸ் கம்ப்யூட்டர்களை தாக்கி வருவதாக ஐரோப்பிய யூனியனின் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ள னர். மின்னஞ்சல் மூலம் ஊடுருவி, கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டை முடக்கும் ரான்சம்வேர் வைரஸ் கடந்த மாதம் உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் பல்கலைகழகங்கள், இங்கிலாந்து அரசு மருத்துவமனைகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் கம்ப்யூட்டர்கள் செயல்பாடுகள் இந்த வைரஸால் முடக்கப்பட்டன. வைரஸிலிருந்து கணினியை விடுவிக்க பிணைத் தொகை செலுத்த வேண்டும் எனவும் விஷமிகள் மிரட்டினார்கள். இந் நிலையில் ரான்சம்வேரை விட சக்தி வாய்ந்த வைரஸ் கணினிகளை தாக்கி வருவதாக ஐரோப்பிய யூனியன் காவல்துறையான யூரோபோல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதன் இயக்குனர் ராபர்ட் வெயின்ரைட் கூறுகையில், பெட்யா என்கிற ரான்சம்வேரை விட சக்தி வாய்ந்த வைரஸ் கணினிகளை தாக்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனமான மேர்ஸ்க், கூரியர் நிறுவனமான பெடரல் எக்ஸ்பிரஸ், மருந்து நிறுவனமான மெர்க் ஆகியவற்றில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வகையான வைரஸிலிருந்து கணினியை மீட்பது முடியாத காரியம் எனவும், கணினி மீண்டும் செயல்பட தொடங்கினாலும் தகவல்களை மீண்டும் மீட்க முடியாது எனவும் ராபர்ட் கூறியுள்ளார். பெட்யா வைரஸ் ஏற்கனவே கடந்த ஆண்டும் கணினிகளை தாக்கியது. தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட வகை பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை எத்தனை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என ராபர்ட் கூறியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதில் தங்கள் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் காவல் துறையை உடனடியாக அணுக வேண்டும் எனவும் ராபர்ட் தெரிவித்துள்ளார்.