நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 18 பைசாவும் டீசலுக்கு 2 ரூபாய் 55 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்ததும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதும்தான் இந்த விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய அரசின் கொள்கைகளின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாகவே ரூபாயின் மதிப்புக் குறைந்திருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
கச்சா எண்ணையின் விலை குறையும் அதன் முழுப் பலனையும் நுகர்வோருக்கு மத்திய அரசு அளிக்கவில்லையென்றும் சர்வதேச பெட்ரோல், டீசலின் விலையை வைத்து இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கச்சா எண்ணையின் விலையை வைத்தே விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க.தலைவர் கருணாநிதி விடுத்திருக்கும் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறையும்போது அதன் முழுப் பலனையும் நுகர்வோருக்கு அளிக்காத மத்திய அரசு, விலை உயரும்போது அதனை நுகர்வோர் தலையில் சுமத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை மீண்டும் மத்திய அரசே எடுத்துக்கொள்ள வேண்டுமென கருணாநிதி கூறியுள்ளார்.
சி.பி.எம்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.