தமிழ்நாட்டின் வல்லூரில் இருக்கும் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து கொண்டுவர போதுமான ரயில் பெட்டிகள் இல்லாததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஒரிசாவில் இருக்கும் தால்ச்சர் நிலக்கரி சுரங்கத்திலிருந்துதான் வல்லூருக்கு நிலக்கரி கொண்டுவரப்படுகிறது என்றும், ஆனால் போதுமான நிலக்கரி சரக்குப் பெட்டிகள் இல்லாத காரணத்தால் போதுமான நிலக்கரி மின் நிலையத்திற்குக் கிடைப்பதில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, அங்கிருக்கும் மூன்று மின் நிலையங்களில் ஒன்றில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திற்குக் கூடுதலாக நிலக்கரியை கொண்டுவர போதுமான சரக்குப்பெட்டிகளை ஒதுக்கீடு செய்யும்படி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அவர் கோரியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. கோடை காலத்தில் 2 ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படுகிறது.