img
img

குரங்கிலிருந்து பிறந்தவர்கள் நாமென்று சொன்ன டார்வின் பிறந்ததினம் இன்று!
ஞாயிறு 12 பிப்ரவரி 2017 13:55:36

img

"நீயும், உன் குடும்பத்தினரும் தான் குரங்கிலிருந்து வந்தவர்கள்" இப்படி அந்த மனிதரைப் பார்த்து கூச்சலிட்டது அந்த பெருங்கூட்டம். "நல்லவேளை உங்களைப் போன்ற மனிதர்களிடமிருந்து அவர் வந்தவரில்லை" என்று பதில் சொல்லிவிட்டு அந்த மனிதரை அழைத்துச் சென்றார் அவர் நண்பர்.பின்னர் அந்த கூட்டத்தினர் நீளத் தாடியும்,புடைத்த மூக்கையும் கொண்ட அந்த இயற்கை காதலனின் தலையை, ஒரு குரங்கின் உடலில் பொருத்தியது போல் கார்ட்டூன் வரைந்தார்கள். அவர் என்ன செய்தார் ? தன் வாழ்நாளையே அர்பணித்து அவர் கண்டறிந்த ஓர் அறிவியல் உண்மையைக் கூறினார். அந்த உண்மையின் பெயர் "பரிணாமக் கொள்கை" இப்போது அவர் பெயரில் ஏராளமான கல்லூரி களும்,பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு துறைமுகத்திற்கும், ஆண்டிஸ் மலைத் தொடரின் ஒரு மலைக்கும் இவர் பெயர் சூட்டப்படிருக்கிறது. ஆம், துறைமுகம், கல்லூரிகளுக் கெல்லாம் சூட்டப்பட்ட பெயர் சார்லஸ் டார்வின். 1831 ல் இங்கிலாந்தின் டோவனிலிருந்து தென்அமெரிக்காவிற்குப் புறப்பட்ட பீகில் கப்பலுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்லித் தீரவேண்டும்.அந்த கப்பலில் தான் டார்வின் தன் நான்கு ஆண்டுகளை செலவளித்து உலகைச் சுற்றினார். உலகின் பெரும்பாலான அறிவியல் மனிதர்கள்,அவர்களின் குழந்தைப்பருவத்தில் எப்படி அழைக்கப் பட்டார்களோ, அப்படியே டார்வினும் மக்கு என்று அழைக்கப்பட்டார். பின்வந்த காலங்களில் அவர் வாயுக்களை வைத்து ஆய்வுகளை செய்து கொண்டிருந்ததால் அவர் நண்பர்கள் அவரை "Gas" என்று அழைத்தார்கள். தந்தையான ராபர்ட் டார்வின் "பட்லர்" ஸ்கூலில் படிக்கவைத்தும் டார்வின் செய்து கொண்டிருந்தவை மீன் பிடிப்பது, வேட்டையாடுவது, பூச்சிகளையும், முட்டைகளையும் சேகரிப்பது ,மிக முக்கியமாய் எலிகளை பிடித்து இம்சை செய்வது. 8 வயதிலேயே அம்மாவை இழந்த டார்வினை , ராபர்ட் கொஞ்சம் கிடுக்குப்பிடியாக வளர்த்தார்.தன்னைப் போலவே டாக்டராக்கி ஸ்டெதஸ்கோப் மாட்ட நினைத்தவருக்கு, கையில் பூச்சியை வைத்துக் கொண்டு இருக்கும் மகனைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியவில்லை.கடைசியாக மதகுருவாக மாற்ற நினைத்தார்.டார்வினும் மதகுருவாக மாறி கேம்ப்ரிட்ஜை விட்டு வெளியே வரும் போது, கேம்ப்ரிட்ஜின் தாவர வியல் பேராசிரியர் ஹென்ஸ்லோ , பீகில் கப்பலில் சம்பளமில்லாமல் இயற்கை வல்லுனராக பணியாற்ற டார்வின் பெயரைப் பரிந்துரைத்தார். ஒரு அப்பா , சம்பளமில்லாத வேலைக்கு அதுவும் நாம் ஆசைப்பட்ட வேலைக்கு இந்த காலத்திலேயே ஒத்துக் கொள்ளமாட்டார்கள் தானே..!அந்த காலத்தில் கடல்பயணம் என்பதெல்லாம் உயிருக்கு உத்தரவாதமில்லாத செயல்.பீகில் கப்பலின் கேப்டன் பிட்ஸ்ராய் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டார்."இது போன்ற மூக்கு இருப்பவர்கள் கடல்பயணத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்" என்று. எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு முழு அர்பணிப்புடன் இறங்கிய டார்வின் எப்படிப்பட்டவர் தெரியுமா? இரு வகையான பூச்சிகளை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பூச்சி கிடைத்தால் கையில் வைத்திருந்த ஒன்றை வாயில் போட்டுக் கொள்வார். அப்படி அவர் வாங்கிய கடிகள் பல. அடிமை முறையை பெரிதும் வெறுத்த டார்வின் கப்பலில் வேலை பார்த்த வேலைக்காரர்களுக்காக பிட்ஸ் ராயிடம் சண்டை போட்டுக் கொண்டே , ஒவ்வொரு தீவிலும் இறங்கி உயிரினங்களையும்,பாறைகளையும், மண்வகைகளையும் ஆய்வு செய்வார். இரண்டு ஆண்டுகளில் திரும்ப நினைத்தவர்கள் வந்து சேர நான்கு ஆண்டுகளானது. 1839 ல் "Voyage Of the Beagles" புத்தகத்தை வெளியிட்ட டார்வினின் கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டது.இந்த வருடத்தில் டார்வின் இன்னொரு சேட்டை செய்தார்.அவரின் திருமணம் திட்டமிடப்பட்ட ஜனவரி26 ல் ராயல் சொசைட்டி அவரை உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கவும், இவர் திருமணத்தைத் தள்ளிவைத்து விட்டு அந்த நிகழ்விற்குப் போய்வந்தார். மதகுரு ஒருவரை, ஒரு கப்பல் பயணம் உலக ஆன்மீகவாதிகள் எதிர்க்கும் மாபெரும் பகுத்தறிவாளர் ஆக்கியது நல்ல ட்விஸ்ட் தானே ! "ஆறு நாட்களில் ,ஆறு நிலைகளில் கடவுள் உயிரினங்களைப் படைத்தார்" "எருதுகளின் சாணங்களிலிருந்து பூச்சிகள் உருவானது" இது போன்று அன்று உலவிய ஃபேண்டசி கருத்துக்களை, உடைத்தெறிந்து, 1859 ல் டார்வின் எழுதிய "The Origin Of Species " பேசிய கருத்துக்கள் அவரின் பேராசிரியர் முதல் அனைத்து ஆன்மீகவாதிகளையும் சீற்றம் கொள்ளவைத்தது. அதன் பிறகுதான் அத்தனை எதிர்ப்புகளும் அவரை சூழ்ந்து கொண்டது. குறைந்த ஆதரவை வைத்துக் கொண்டு,மிகப் பெரிய எதிர்ப்பை சமாளித்து தான் உழைப்பு கொட்டிய கொள்கையை நிலைநாட்ட எத்தனை உறுதி தேவைப்பட்டிருக்கும்? 1882 ,ஏப்ரல் 19 ல் இதய நோயால் இறக்கும் முன் இந்த பரிணாமத் தச்சன் ,அவர் மனைவியிடம் கடைசியாய் கூறிய வார்த்தைகள், "எனக்கு இறப்பதில் பயம் சிறிதளவு கூட இல்லை.நீ எத்தனை அன்பான நல்ல மனைவி !!" அவ்வளவு அன்பான இனிய மனிதராகவும் வாழ்ந்தார் சார்லஸ் டார்வின். இன்றும் அமெரிக்காவில் எதிர்க்கப்படும் அறிவியல் உண்மையை இருநூறு ஆண்டுகளுக்கு முன் பேசிய டார்வினிடம் நாம் கற்றுக் கொள்ள ஆகச்சிறந்த ஒன்று இருக்கிறது.

பின்செல்

சிறப்புக் கட்டுரைகள்

img
அறுவடையால் திருவடையும் தைத்திருநாள்!

மனம் இனிக்க பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு

மேலும்
img
தமிழ்ப்பள்ளிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மு. வரதராசு

’திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு

மேலும்
img
குரங்கிலிருந்து பிறந்தவர்கள் நாமென்று சொன்ன டார்வின் பிறந்ததினம் இன்று!

நீயும், உன் குடும்பத்தினரும் தான் குரங்கிலிருந்து வந்தவர்கள்

மேலும்
img
சிடி விற்பனை முதல் சிஎம் பதவி வரை குஷியில் சசி!

(சாணக்கியனின் தமிழக சிறப்புக் கட்டுரை)

மேலும்
img
பாண்டுரங்கன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம்.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img