தமிழகத்தை இனி ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியாது. இதுதான் இன்று தமிழகமெங்கும் எழுகின்ற ஒருமித்த பெரும்குரல்! அளவு கடந்த போராட்டங்களுக்கும், கலகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும், வன்முறைகளுக்கும், துயரங்களுக்கும் முகம்கொடுத்து ஓய்ந்து முற்றுப்பெறாத அரசியல் அவஸ்தையில் தவிக்கின்ற தமிழக மக்களின் தலைவிதியை என்னவென்று சொல்வது? டிசம்பர் மாதம் என்றாலே ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு பிரளயத்தை இயற்கையோ அல்லது செயற்கையோ வந்து தமிழ்நாட்டை உலுக்கி விட்டுச் சென்றாலும் இம்முறை மாறி மாறி மக்களின் மனங்களில் சோகத்தை மட்டும் விதைத்து விடுகின்ற சம்பவங்களின் நீட்சி தமிழகத்தை வேறு ஒரு பாதையில் திசைதிருப்பி பயணிக்கச் செய்துள்ளது. ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் காத்திருந்த கொக்கின் கதைபோல, ஒரு முதல்வருடன் கூட இருந்து அவர் மறைவிற்காக காத்திருந்து அவரின் அரியணையை அமைதியாகக் கைப்பற்றிக்கொண்ட ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமுதாயத்தின் இதயங்களில் கோபத்தை விதைத்து வந்த தமிழக அரசியலின் நகர்வுகள் இன்று பெரும் சீற்றமாகி கொடும்நெருப்பாகி தீச்சுவாலை கிளர்ந்தெழுந்து உலகையே உலுக்கி வைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் உள்ளே சசிகலாவின் அரசியல் நுழைவின் அதிருப்தியும்தான் புதைந்திருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஜெயாவின் மரணத்தின் விளைவாக 570 தொண்டர்களின் இறப்பின் பின்னரும் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து மீண்டிடாத மக்களின் முன்னே, தினமும் சசிகலா தரப்பால் நடத்தப்படும் அரசியல் நாடகங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் மக்கள் மீதான ஆரோக்கியமற்ற அரசியல் அடக்குமுறையையும் இது வெளிப்படுத்தியுள்ளது. எம்ஜிஆருக்குப் பின்னர் ஜெயா என்ற இரும்புப் பெண்மணியை மட்டும் மனத்தில் இருத்தி அதிமுக அரசையும், இரட்டை இலையையும் மட்டும் விசுவாசித்து ஓட்டுப் போட்ட அத்தனை கரங்களும், இன்று மை வைத்த விரல் நுனியையே அருவருப்பாக பார்க்கின்ற அரசியல் அவலட்சண நிலை தமிழகத்தில் எழுந்துவிட்டது. மக்களால் தெரிவு செய்யப்படாத, தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தெடுக்கப்படாத , எந்த மேடையிலும் அரசியல் பிரச்சாரம் செய்யாத, அதிமுகவில் நிரந்தர அங்கத்துவம் பெறாத, வெறும் 10ஆம் வகுப்பு வரை படித்த அரசியல் ஞானம் இல்லாத ஒருவரை இன்று விரும்பியோ விரும்பாமலோ முதல்வராக ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. டீ க்கடை வைத்திருந்த மோடி பாரதப் பிரதமர், டீக்கடை வைத்திருந்த பன்னீர்செல்வம் தற்காலிக தமிழக முதல்வர் என்ற வரிசையில் சிடி க்கடை வைத்திருந்த சசிகலாதான் இன்று சிஎம் என்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்திய அரசியலை ஏளனம் செய்கின்ற நிலைமை இன்று உருவாகிவிட்டது. தமிழக அரசியலை காமெடியாக சொல்வதானால் நடிகர் ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் அவரின் உதவியாளர் முருகன் எனவும், விராட் கோஹ்லிக்கு அடுத்த நட்சத்திர வீரர் அவரின் காதலி அனுஷ்கா சர்மா எனவும் தான் சொல்ல வேண்டும். காரணம் அவர்கள்தான் கூடவே இருந்து எப்போதும் கவனித்துக் கொள்கிறார்களே! இதைக் கூட ஒரு காலம் தமிழகம் ஏற்கத் தயாராகவே இருக்க வேண்டும். எப்பேற்பட்ட அரசியல் வரலாறுகள் கொண்ட, அரசியல் சித்தாந்தங்கள் பதிந்த முதலமைச்சர் நாற்காலி இன்று எப்படி கேலிக்கூத்தாக்கப்படுகின்றது என்பதை நினைத்து இளைய சமுதாயம் பொங்கி எழுந்துகொண்டிருக்கிறது. தனது மகனின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க செல்லாமல் அரசுப் பணியாற்றிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பதவியில் இருந்த போது தனது தாயைக் கூட தன்னுடன் தங்க அனுமதிக்காக காமராஜர், சட்டை கிழிந்திருப்பது தெரிந்து விடக் கூடாது என்பதற்காக தோளில் துண்டு போட்டு மறைத்த அறிஞர் அண்ணா ஆகியோர் அமர்ந்திருந்த அரசியல் சாசனம் பதித்த நாற்காலி அது. ஆனால் இன்று நிரந்தரமாக ஒருவர் அமர்வதற்கும், அமர்பவரை அகற்றுவதற்கும், ஆளுக்குஆள் சண்டையும் சூழ்ச்சியும் போட்டுக்கொள்கின்ற கேலிக்கூத்தாக மாறி மக்களுக்கு பிடிக்காத, மக்கள் ஏற்காத, மக்கள் அருவருக்கத்தக்க ஒருவரின் ஆளுமைக்குள் சிக்கியிருக்கிறது அந்த நாற்காலி. இதை சினிமா பாணியில் சொல்வதெனில் எப்படி இருந்த நாற்காலி இப்படி ஆயிட்டுது என்றுதான் சொல்லவேண்டும். ஏராளமான அமலாக்கப்பிரிவு வழக்குகளையும், சோத்துக்குவிப்பு வழக்குகளையும் எதிர்கொண்டு வரும் சசிகலா அந்த நாற்காலியில் அமரப் போகிறார் என்பதிலிருந்து தமிழ்நாட்டின் எதிர்காலம் தெளிவாகப் புலப்படுகிறது. உங்களுக்காக நான், உங்களால் நான் என மக்கள் மத்தியில் வலம் வந்த ஜெயாவின் கூட இருந்து இன்று அம்மாவுக்காக நான், அம்மாவால் நான் என்ற நிலையில் முதல்வர் பதவியை கவர்ந்திருக்கும் சசிகலாவுக்கு ஜெயாவின் தோழி என்பதை விட எந்த அடையாளமும் இதுவரை இல்லாதபோதும், அதிமுக செயலவைத் தலைவர், தமிழக முதல்வர் எனும் அடையாளங்கள் எப்படி வந்தடைந்தது என்பதில் பல குளறுபடிகள் நடந்தேறிவிட்டன. எந்த நிலையிலும் ஜெயா, சசிகலாவை எந்த அரசியலிலும் முன்னிறுத்தியதில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பரப்புரை செய்த ஜெயா, 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து போட்டியிடுங்கள் என்று வேட்பாளர்களை கூறியே வாக்கு சேகரித்தார். அதிமுகவின் சாதாரணத் தொண்டனைக் கூட வேட்பாளராக நிறுத்திய ஜெயா, எந்த தொகுதியிலும் சசிகலாவை வேட்பாளராக நிறுத்தவில்லை. எனினும் சசிகலாவினுள் எரிந்துகொண்டிருந்த அரசியல் பேரவாவும், முதல்வர் கனவும், அவசரமும்தான் இன்று ஜெயாவின் மெரினா உறக்கமாகியிருக்குமோ என்பதே மக்களின் எண்ணமாக விருக்கிறது. ஏனெனில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்வது தான் ஜனநாயக நெறிமுறைகளை மதிக்கும் செயலாகும் என்பது சசிகலா உட்பட அனைவருக்கும் தெரியும். 1973இல் நடராஜனுக்கும் சசிகலாவுக்கும் தனது தலைமையில் திருமணத்தை நடத்திவைத்த கலைஞர்கூட இதை ஒருபோதும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார். கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலில் டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். ஆனாலும், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாமலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், உடனே பதவி விலக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதுமட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரை முதலமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா கருத்து தெரிவித்திருந்தார். சினிமா கலாச்சாரம் அற்ற, தமிழர் பின்னணியைக் கொண்ட ஒருவர் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என வரிந்துகட்டிப் பிரச்சாரமிட்ட பல கட்சிகளின் வாய்களை மௌனிக்கச் செய்தாற்போல் தற்காலிக முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வத்தின் பதவித் துறப்பும் சசிகலாவின் முதல்வர் தேர்வும் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளை மட்டுமல்ல மத்திய அரசையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. டிசம்பர் 5இல் ஜெயாவின் உடல் அடக்கம் செய்வதற்குள் அமைக்கப்பட்ட அமைச்சரவை, டிசம்பர் 29இல் அவசரமாக கைப்பற்றப்பட்ட அதிமுக செயலாளர் பதவி, பிப். 5 இல் பறிக்கப்பட்ட முதல்வர் பதவி என சசிகலாவின் அத்தனை அவசரமும் நிச்சயம் அதிமுகவை சிதறடிக்கச் செய்யும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் தமிழகத்தில் எந்த முதலமைச்சருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. அதாவது குடியரசு தினத்தில் தனது மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் கலந்துகொண்ட பன்னீர்செல்வம் தேசியக் கொடியேற்றினார். வழக்கமாக, குடியரசுத் தின விழாவில் கவர்னர்தான் கொடியேற்றுவார். தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநர் என்பதால், அவர் மகாராஷ்டிரா மாநில குடியரசுத் தின விழாவில் இருந்ததால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கானச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம், தமிழக மக்களிடையே ஒருவித நன்மதிப்பைப் பெறத்தொடங்கினார் பன்னீர்செல்வம். இது சசிகலாவின் குடும்பத்துக்கு தாங்கிக் கொள்ளமுடியாத கோபத்தை உண்டாக்கியது. இதுவே சசிகலாவின் முதல்வர் நாற்காலி மீதான அவசரத்தை வேகப்படுத்தியது. அதிகாரத்தை தம் வசம் கொண்ட அதிமுக தலைமையின் கீழ் மக்கள் அறவழிப் போராட்டத்தை நடத்துவதை விட வேறு என்னதான் செய்ய முடியும். போலீஸ் அராஜகத்தை தம் கண்ணூடாக பார்த்துணர்ந்த மாணவர் போராட்டத்தில் சசிகலாவால் சொல்லப்பட்ட செய்தியும் அதுதான். மக்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இடைத் தேர்தல்தான். 6 மாதத்திற்குள் சசிகலா இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். அப்போது பாடம் கற்பிப்போம் என்ற வெறியில் மக்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதை எப்படி அதிமுகவின் கைப்பாவைகளும், பதவிக்காக தலைமையின் காலடியில் காத்துக் கிடப்பவர்களும், சசிகலாவும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு மத்திய அரசின் அழுத்தத்தின் நடுவே எப்படி நகரப்போகிறது என்பதிலும் தீபாவின் அரசியல் ஆளுமை எவ்வாறு வலுப்பெறப்போகிறது என்பதிலும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான திமுகவின் அரசியல் சாணக்கியம் இந்த இக்கட்டான நிலையில் எவ்வாறு நகர்த்தப்படப்போகிறது என்பதிலும் கூட அதிமுக ஆட்சியின் இருப்பு தங்கியிருக்கின்றது. பாவம் ஓ.பன்னீர்செல்வம் சிரித்த முகத்துடன் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார் என கூறி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, சசிகலா முதலமைச்சர் பொறுப்பேற்று கொள்வதற்கும் முன்மொழிந்துள்ளமை ஏளனத்துக்குரியது. அதாவது சினிமாவில் வடிவேலு அத்தனை அடியையும் வாங்கிவிட்டு வலியையும் பொறுத்துக் கொண்டு புன்சிரிப்போடு வெளியே வரும் காமெடியையும் இது மிஞ்சிவிடுகிறது. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாண்டா இவன் ரொம்ப நல்லவண்டா என்பதை ஓபிஎஸ் க்கு அன்றே சினிமா பாடம் கற்றுக் கொடுத்துவிட்டது. அதிமுக அரசு இராணுவ ஆட்சியைப் போன்றது என இதுவரை வர்ணிக்கப்பட்டுவந்த ஜெயாவின் ஆட்சி இப்போது திசைமாறியிருக்கிறது. இராணுவ ஆட்சி என்பதை தவறாகப் புரிந்துகொண்ட அவரது தோழி சசிகலா பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்களையும், தொண்டர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் இராணுவ அதிகார பாணியில் பணிய வைத்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை இனங்கண்டு இராணுவ பாணியில் வேறுவிதமாக கையாண்டு தன்னுடன் இணைய வைத்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் கட்சியினுள் ஒரு துரும்பு கூட தன்னை எதிர்த்து நிற்கக் கூடாது என்பதில் இராணுவ கட்டுக்கோப்புடன் நடந்து ஒருமித்த குரலில் தன்னை முதல்வராக்கினார். இதுதான் அதிமுகவின் தற்போதைய இராணுவ கட்டுக்கோப்பு. ஆனால் வரும் தேர்தலில் மக்கள் இராணுவமாக திரண்டு வாக்களிக்கப் போகிறார்கள். அப்போதுதான் அதிமுக ஆட்சியின் ஸ்திரத்தன்மை வெளிப்படப்போகிறது. என்னை பன்னீர்செல்வம் தான் முதல்வராகும்படி கூறினார். நானும் ஏற்றுக் கொண்டேன் என கொஞ்சம் கூட பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கும் சசிகலாவை, அண்மையில் இந்தியா டுடே யின் பேட்டியின்போது தப்புத் தப்பாக பதிலளித்த சசிகலாவை, கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றும்போது எழுதியதை படிப்பதற்கே தடுமாறிய சசிகலாவை முதல்வராக ஏற்று எப்படித் தமிழகம் பயணிக்கப் போகிறது என்பதே மிகப் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது.
மனம் இனிக்க பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு
மேலும்’திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு
மேலும்நீயும், உன் குடும்பத்தினரும் தான் குரங்கிலிருந்து வந்தவர்கள்
மேலும்கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம்.
மேலும்