புத்ராஜெயா, ஜூன் 15-
வேகம், விவேகம், துரிதம், புத்தாக்கம் - தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமமாகத் திகழும் 5ஜி கொண்டிருக்கும் தன்மைகள் இவை. இப்போது நாட்டில் இதைப்பற்றிய பேச்சாகவே இருக்கின்றது. மக்களுக்கு சிறந்தவற்றை பெற வேண்டும் என்று அரசாங்கமும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கொண்டிருக்கும் இலக்கை நோக்கி தற்போது 5ஜி யுகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 5ஜி குறித்த விரிவான விளக்கத்தை அளிக்கின்றார் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் துறை அமைச்சின் (தொலைத்தொடர்பு அடிப்படை வசதிகள், டிஜிட்டல் பொருளாதாரப் பிரிவு) துணைத் தலைமைச் செயலாளர் மா. சிவநேசன். அவருடன் நடத்தப்பட்ட நேர்காணல் விவரங்கள்:
கே: இரட்டை நெட்வோர்க் அணுகுமுறையை அரசாங்கம் மேற்கொண்டதற்கான முக்கிய காரணம் என்ன?
ப: ஒற்றை நெட்வோர்க் தொடர்பு முறை மற்றும் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) உருவாக்கப்பட்டதன் முதல் முக்கிய நோக்கமே கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தாமதமான நாட்டின் 5ஜி அமலாக்கத்தை துரிதப்படுத்துவதே ஆகும். டி.என்.பி. தற்போது வெற்றிகரமாக நாடு முழுவதும், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் 5ஜி நெட்வோர்க் முறையை 62.1 விழுக்காடு அடையும் அளவிற்கு மேம்படுத்தியுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் 80 விழுக்காட்டு மக்களை அது சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரட்டை நெட்வோர்க் மாதிரியின் அமலாக்கமானது மற்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளுக்கு இணையானவை என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் மக்களுக்காக மட்டுமின்றி, தொழில்துறைகளுக்கும் பெரும் நன்மைகளைக் கொண்டுள்ளது. 5ஜி தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு தொழில்துறைகளே இலக்காக கருதப்படுகின்றன. மலேசியாவில் ஒரு நீண்ட கால அடிப்படையில் தொலைத்தொடர்பு தொழில்துறை சூழ்மண்டலத்தின் நிலைத்தன்மையையும் இது கவனத்தில் கொள்ளும்.
மலேசியாவில் இரட்டை 5ஜி இணையத் தொடர்பை மேம்படுத்தும் இரு தரப்பினருக்கும் இடையே இது போட்டா போட்டியினை உருவாக்கும். இதன் வாயிலாக திறமையான இயக்க ஆற்றல் பெற்ற நெட்வோர்க், அதிகரித்த புத்தாக்கம், அமலாக்கச் செலவுகளின் திறமையான பயன்பாடு ஆகியவற்றின் உருவாக்கத்தை மேம்படுத்த முடியும். ஒரு நியாயமான விலையில் தரமான சேவைகளின் வழி வாடிக்கையாளர்கள் என்ற வகையில் மக்கள் நன்மை அடைவார்கள்.
கே: 5ஜி நெட்வோர்க் அமலாக்கத்திலான இந்த மாற்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆதரவைப் பெறுமா?
ப: அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை சேவை வழங்குநர்கள் இதுவரை வரவேற்றுள்ளனர். இரட்டை நெட்வோர்க் முறைக்கு மாறுவதிலும், அதே சமயம், 2023 இறுதிக்குள் 80 விழுக்காடு 5ஜி சேவையை வழங்க முடியும் என்பதை உறுதி செய்வதிலும் ஆக்ககரமான பங்கை ஆற்றுவதற்கு சேவை வழங்குநர்கள் முன்வந்துள்ளனர்.இக்கொள்கை மாற்றம் வெற்றியடைவதற்கு அரசாங்கம் மற்றும் இதர தரப்பினரின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
கே: 5ஜி சேவை 80 விழுக்காடு மக்களைச் சென்றடையும் என்பதையும் அதே வேளை, இந்த இரட்டை நெட்வோர்க் முறை சுமுகமாக நடைபெறுவதையும் அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்தும்?
ப: இதன் தொடர்பில் பணிக்குழு ஒன்றை தொலைத்தொடர்பு, டிஜிட்டல் துறை அமைச்சு அமைத்துள்ளது. இதன் முக்கியமான நோக்கங்களில்:
அ) டி.என்.பி.யின் கீழ் 5ஜி நெட்வோர்க்கின் அமலாக்கம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் 80 விழுக்காடு சென்றடைவதை உறுதிப்படுத்துவது; மற்றும்
ஆ) 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரட்டை நெட்வோர்க் முறைக்கான மாற்றம் சுமுகமாக இருப்பதை உறுதிப்படுத்துவது ஆகியனவாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இருவரும் கூட்டாக இந்த பணிக்குழுவிற்கு தலைமை தாங்குவர். கூடுதலாக, டி.என்.பி. மற்றும் செல்கோம் டிஜி, மெக்சிஸ், டெலிகோம் மலேசியா (டி.எம்.), ஒய்.டி.எல். கம்யூனிகேஷன் மற்று யூ-மொபைல் உள்ளிட்ட சேவை வழங்குநர்களும் இதில் இடம்பெற்றிருப்பர். மலேசியா முழுவதும் 5ஜியின் சேவைகள் 80 விழுக்காடு சென்றடைவதை இப்பணிக்குழு நிர்வகிக்க முடியும் என தொலைத்தொடர்பு, டிஜிட்டல் துறை அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது. சட்டம், தொழில்நுட்பம், நிதி ரீதியாக இதன் முறையான அமலாக்கத்தை இது கண்காணிக்கும்.
கே: பணிக்குழு அமைக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இதுவரை காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?
ப: முதலாவதாக, சேவை வழங்குநர்கள் மற்றும் டி.என்.பி. இடையே 5ஜி நுழைவு உடன்பாடு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இப்பணிக்குழுவின் தலையாய கடமையாகும். டி.என்.பி. யில் சமபங்கு பங்கேற்பு குறித்தும் கவனம் செலுத்தப்படும். இவை இரண்டுமே முக்கியமான பிரச்சினைகள். இம்மாத இறுதிக்குள் இவை பற்றி விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி நுழைவு உடன்பாட்டு விவகாரத்தில் உடனடியாக முடிவெடுப்பது 5ஜி உள்ளிட்ட சேவை வழங்குநர்கள் தங்கள் பயனர்களுக்கு 5ஜி சேவை தொகுப்புகளை வழங்குவதை வகை செய்யும். மேலும், சேவை வழங்குநர்களின் சமபங்கு பங்கேற்பானது 2023 ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை நிரம்பிய பகுதிகளில் 80 விழுக்காடு வரையிலான 5ஜி சேவையை வழங்குவதற்கான ஆதரவை வழங்கும்.
கே: இரண்டாவது நெட்வோர்க் எப்போது அமலாக்கம் காணும். டி.என்.பி. மேம்படுத்தியுள்ள நடப்பு 5ஜி நெட்வோர்க் நிலை என்னவாகும்?
ப: நடப்பில் உள்ள 5ஜி நெட்வோர்க் முறை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். நாட்டின் இரு 5ஜி நெட்வோர்க் முறைகளில் ஒன்றாக அது செயல்படும். டி.என்.பி. கையெழுத்திட்டுள்ள நடைமுறையில் உள்ள குத்தகைகள் தொடரும் என்பதே இதன் அர்த்தமாகும். எனினும், மலேசியாவில் 5ஜி நெட்வோர்க் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களுக்கு ஏற்ப அதன் நிபந்தனைகளும் விதிமுறைகளும் அமைந்திருப்பதை உறுதி செய்வதற்கு அவற்றில் சிலவற்றைக் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் அவசியம் உள்ளது.
கே: நாட்டின் 5ஜி குறிக்கோள் நிறைவேறுவதில் அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ப: எந்த திசையை நோக்கி 5ஜி அமலாக்கம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்துள்ளது. இதுதான் இங்கு அடிப்படையான விஷயமும் கூட. இதற்கு கூடுதலாக இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் இந்த திசையை நோக்கியே செயல்படுதல் அவசியம். அவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கடந்த மாதம் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலையாய பணியும் இதுதான்.
இப்போதைக்கு 4ஜி பயன்பாட்டை அரசாங்கம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. மக்கள் தொடர்ந்து 4ஜி சேவையினை பெறுவதை உறுதி செய்வதுடன், அவற்றின் தரமும் வலியுறுத்தப்படும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் அகண்ட அலைவரிசை ஓர் அம்சமாகிவிட்டது. இதனை நாம் புரிந்துகொள்வது முக்கியம். அரசாங்கத்திற்கும் இது சிறப்பு அம்சம் பொருந்திய, முக்கியமான ஒன்றாகும். நிலையான தொடர்புகள், கைப்பேசி 4ஜி, 5ஜி எதுவாக இருந்தாலும் அகண்ட அலைவரிசை சேவையை தொடர்ந்து மேம்படுத்துவதில் தொலைத்தொடர்பு டிஜிட்டல் துறை அமைச்சு கவனம் செலுத்தி வரும் என மா.சிவநேசன் மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்