img
img

அரசு சார்பு நிறுவனங்களில் மொகிதீன் யாசின், இஸ்மாயில் சப்ரி செய்திருந்த அரசியல் நியமனங்கள் 234 பேர் உடனடி நீக்கம்?
வெள்ளி 16 டிசம்பர் 2022 13:11:52

img

கோலாலம்பூர், டிச. 16-

அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு முதலீட்டு நிறுவனங்களில் முந்தைய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டிருந்த சுமார் 234 பேரை உடனடியாக அப்பொறுப்புகளிலிருந்து நீக்கும் அதிரடி நடவடிக்கையை ஒற்றுமை அரசாங்கம் எடுத்திருப்பதாக அறியப்படுகிறது. அவர்களின் பதவி நீக்கம் தொடர்பாக பிரதமர் துறையின் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து வெளியான கடிதம் சமூகவலைத்தளங்களில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இதனை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் (பிரசுர நேரம் வரையில்) கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஜி.எல்.சி./ஜி.எல்.ஐ.சி. நிறுவனங்களில் சுமார் 234 நியமனங்களை செய்திருப்பதாக அறியப்படுகிறது. அவர்களின் நியமனங்கள் உடனடியாக முடிவுக்கு வருவதாக  அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுக்கி அலி கையெழுத்திட்டிருந்த கடிதம் அனைத்து அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

“2022 டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவின்படி அரசு சார்பு நிறுவனங்கள்/நிதி அமைச்சைச் சார்ந்த நிறுவனங்கள்/அரசாங்க சார்பு முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் அனைவரின் நியமனங்களும் உடனடியாக முடிவுக்கு வருகின்றன” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்களான டான்ஸ்ரீ மொகிதீன் யாசினும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியும் தங்கள் பதவிக் காலங்களில் ஜி.எல்.சி./ஜி.எல்.ஐ.சி. நிறுவனங்களில் அதிகமான நியமனங்களைச் செய்துள்ளனர்.

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் 234 நியமனங்களை இஸ்மாயில் சப்ரி செய்திருப்பதாக ஐடியஸ் எனும் ஆய்வுக் கழகம் உறுதி செய்துள்ளது. அந்த எண்ணிக்கையில், 119 புதிய நியமனங்கள் ஆகும். மேலும் 115 நியமனங்கள் முன்னதாக மொகிதீன் தலைமைத்துவத்தில் செய்யப்பட்டவையாகும் என அது கடந்த அக்டோபர் மாதம் கூறியிருந்தது.
அந்நியமனங்களில் அம்னோ அதிகமான எண்ணிக்கையை கொண்டுள்ளது. அம்னோ நியமனங்கள் 52, அதே சமயம் பெர்சத்து கட்சி சார்பில் 28 நியமனங்கள் செய்யப்பட்டிருந்தன. பாஸ் கட்சி பிரதிநிதிகள் 11 பேர் அந்நிறுவனங்களில் நியமனம் பெற்றிருந்தனர். புதிய நியமனங்களில் 61 என பாதிக்கும் மேற்பட்டவை  அம்னோவை சார்ந்ததாகும். பெர்சத்து 19, பார்ட்டி பங்சா மலேசியா 15, பாஸ் 7, ம.சீ.ச. 5 என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மீன்வள இலாகா, தெனாகா நேஷனல் மலேசியா, சொக்சோ போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் ம.இ.கா. பிரதிநிதித்துவம் இருந்ததாகவும் தெரிய வருகிறது. இந்த நியமனங்கள் அனைத்தும் அரசியல் நியமனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, இந்த அரசியல் நியமனங்கள் குறித்து அமைச்சர்களுடன் நீண்ட விவாதம் நடத்தப்பட்டது.  அம்மாதிரி நியமனம் பெற்றவர்களில் சிலர் சிறந்த முறையில் செயலாற்றக் கூடியவர்கள். ஆனால் அதே வேளை, சிலர் இதற்குத் தகுதியில்லாதவர்கள்  என்பது பற்றியும் பேசப்பட்டது. எனவே, அவர்களை தரம் பிரிப்பது சிரமம் என்பதால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் கூறியுள்ளன. இத்தகவலை தி ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதையடுத்து புதிய நியமனங்களை செய்வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரத்திற்கு உட்பட்டது என சில அமைச்சர்கள் கூறியதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அரசு சார்ந்த நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் அனைத்தும் இனி ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகே ஒரு முடிவு எடுக்கப்படும் என அன்வார் தமது பதவியேற்பிற்குப் பிறகு கூறியிருந்தார்.    

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img