கோலாலம்பூர்,நவ. 25-
அரசியலில் ஈடுபட்ட 40 ஆண்டுகளில் பல்வேறு போராட்டம், சிறை வாசம், ஏமாற்றம், அவமானங்களைத் தாங்கிய 25 ஆண்டுகளுக்குப் பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாட்டின் 10 ஆவது பிரதமராகப் பதவிப் பிரமானம் எடுத்துக்கொண்டார். மலேசிய அரசியல் வரலாற்றில் இவரின் நியமனம் புதிய முத்திரையைப் பதித்துள்ளது.
கடந்த 14 ஆவது பொதுத்தேர்தலில் இவரின் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்கு மறைமுகமாக உதவியவர் அன்வார். காரணம் அப்போது இவர் சிறையில் இருந்தார். இந்த வெற்றிக்கனிகளை அனுபவித்தவர் துன் டாக்டர் மகாதீர் முகமட்.
பிரதமர் பதவியேற்ற சில காலங்களில் அன்வாருக்கு அதை விட்டுக்கொடுப்பது என்பதுதான் மகாதீர் - அன்வார் இடையிலான ஏற்பாடு. ஆனால், பதவியில் அமர்ந்ததும் அன்வாருக்கு பிரதமராகும் தகுதியே இல்லை என்ற தோரணையில் பேசி மகாதீர் பலமுறை அந்த வாய்ப்பை அன்வாருக்குக் கொடுக்காமல் நிராகரித்திருக்கிறார்.
இது மகாதீர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தாலும், காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் என்பதற்கு ஏற்ப மகாதீரின் பதவி காலம் 22 மாதங்கள் மட்டுமே நீடித்தது. இந்த 22 மாதங்களில் அன்வாரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா துணைப்பிரதமராகப் பதவியேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. மகாதீருக்கு அடுத்து பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், அம்னோவின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இருவரும் முறையே 8 ஆவது மற்றும் 9 ஆவது பிரதமரானார்கள். அன்வாருக்கு கொடுத்த வாக்குறுதிகளில் மகாதீர் நிறைவேற்றியது அவருக்கு அரச மன்னிப்பு வாங்கிக்கொடுத்ததுதான்.
ஆனால், மொகிதீனின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியே 15 ஆவது பொதுத்தேர்தல் வரை தொடர்ந்து ஆட்சி அமைத்தது. முடிந்த தேர்தலில் வெற்றிக்கனிகள் நேரடியாக அன்வாரின் மடியில் விழுந்தது எனலாம். மொத்தம் 82 இடங்கள் அவரின் பக்காத்தான் ஹராப்பான் கட்சிக்கு கிடைத்துள்ளது. மற்றக் கூட்டணிகளை விட அதிகமான எண்ணிக்கை. அதன் பிறகும்கூட பல்வேறு இழுபறி நிலைக்குப் பிறகு அன்வார் நேற்று மாலை நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார். அன்வாரை பொறுத்த வரையில் அவரின் பொது வாழ்க்கைத் தொடக்கமே போராட்டக் களமாகத்தான் ஆரம்பனதாக அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு காட்டுகிறது. அன்வாரின் அரசியல் பின்னணி என்ன?
ரத்தத்தோடு கலந்த அரசியல்
உண்மையில் அரசியல் இவரின் ரத்தத்தோடு கலந்தது எனலாம். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், செரோக் தொக் கூன் எனுமிடத்தில் அன்வார் பிறந்தார். இவரின் தந்தை இப்ராஹிம் பின் அப்துல் ரஹ்மான் ஒரு மருத்துவமனை போர்ட்டராகப் பணியாற்றினார். பிறகு 1959 மற்றும் 1969 க்கிடையே அம்னோவை பிரதிநிதித்து செபெராங் பிறை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரானார்.
1964 முதல் 1969 வரையில் சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், 1969 பொதுத்தேர்தலில் கெராக்கான் வேட்பாளர் ஒருவரால் இவர் தோற்கடிக்கப்பட்டார். அன்வாரின் தாயார் சே யான் பிந்தி ஹுசேன் ஒரு இல்லத்தரசி என்றாலும் பினாங்கு அம்னோவில் ஆக்ககரமாகப் பங்காற்றி வந்தவர். ஆகவே, அன்வாரின் அரசியல் ஈடுபாட்டிருக்கு அவரின் பெற்றோர் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது. கல்வியில் சிறந்த ஒரு மாணவராகவே அன்வார் திகழ்ந்து வந்துள்ளார். பேரா, கோலகங்சார் மலாய்க் கல்லூரியில் இவர் தன் இடைநிலைக் கல்வியை மேற்கொண்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் மலாய்க் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பையும், பிறகு 1974 முதல் 1975 க்கிடையே சிறையில் இருந்தபோது மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் மாஸ்டர்ஸ் முடித்தார்.
முதல் முறையாக சிறையில் அன்வார்
அப்போதே சிறைவாசமா? ஒரு மாணவராக 1968 முதல் 1971 வரையில் மலேசிய முஸ்லிம் மாணவர்களின் தேசிய சங்கத்திற்கு அன்வார் தலைவராக இருந்தார். மற்ற கல்வி சார்ந்த சங்கங்களின் பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 1971 இல் அபிம் என்றழைக்கப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவரானார். இவ்வியக்கம் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இசா சட்டத்தின் கீழ் அன்வார் கைது செய்யப்பட்டார். கமுந்திங் தடுப்பு முகாமில் 20 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
1982 இல் அன்வார் அம்னோவில் இணைந்தார். அப்போது பிரதமராக இருந்தவர் துன் மகாதீர். மகாதீரின் செல்லப்பிள்ளை என்றே அன்வார் பெரும்பாலும் பார்க்கப்பட்டார். அந்த அளவிற்கு அம்னோவில் அவரின் வளர்ச்சி வேகமாக இருந்தது. 1983 இல் பண்பாட்டு, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமனம் பெற்றார். 1984 இல் விவசாயத் துறை அமைச்சராகவும், 1986 இல் கல்வி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
பஹாசா மலேசியாவா; பஹாசா மெலாயுவா?
கல்வி அமைச்சராக இருந்தபோது தேசியப் பள்ளி பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்தார். அவற்றுள் ஒன்றுதான் பஹாசா மலேசியா என்றிருந்த தேசிய மொழியை பஹாசா மெலாயு என்று மாற்றியமைத்தது. மலாய்க்காரர் அல்லாதவர்களின் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய ஒன்றாகும். மலேசியர்களாக அல்லாமல், மலாய்க்காரர்களுக்கே சொந்தமான ஒரு மொழியாக இளைய தலைமுறையினர் இதனை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தேசிய மொழி மீதிலான பற்று இல்லாமல் போய்விடக்கூடும் என்றும் அவர்கள் நினைத்ததே இதற்கு காரணமாகும். இந்நிலையில் பல்வேறு அனைத்துலக நியமனங்களையும் அன்வார் பெற்றார். 1991 இல் நிதி அமைச்சராகவும் 1993 இல் அம்னோ துணைத்தலைவர் பதவியின் வெற்றிக்குப் பிறகு துணைப்பிரதமராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
அன்வார் - மகாதீர் புகைச்சல் ஆரம்பம்
ஆசிய நிதி நெருக்கடி நிலவிய 1997 ஆம் ஆண்டு மத்தியில் தலைதூக்கியது. இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துலக ரீத்யில் இவருக்குப் பேரும் புகழும் குவியக் காரணமானது. இதுவே, மகாதீர்- அன்வார் இடையே புகைச்சலுக்கும் காரணமானது. இருவருக்கும் இடையே உறவுகள் கசந்தன. 1998 இல் ஆண்டின் சிறந்த ஆசியர் என நியூஸ்வீக் சஞ்சிகை அன்வாரை தேர்வு செய்தது. அன்வார் - மகாதீர் புகைச்சல் அந்த ஆண்டின் அம்னோ பேரவையில் வெடிக்கத் தொடங்கியது. அப்போது அம்னோவின் இளைஞர் அணிக்குத் தலைமை தாங்கியவர் அன்வாரின் சகாவான அஹ்மட் ஜாஹிட் ஹாமிடி. தங்களுக்கு வேண்டியவர் மற்றும் வாரிசு அரசியல் குறித்து பொது விவாதம் நடத்தப்போவதாக ஜாஹிட் அறிவிக்க, அதே மாநாட்டில் ஏன் அன்வார் பிரதமராக முடியாது என்பதற்கு 50 காரணங்கள் என்ற தலைப்பில் காலிட் ஜாஃப்ரி எழுதிய நூல் வெளியானது. அதில் அன்வார் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஊழல், தகாத பாலியல் உறவு சம்பவங்கள் பற்றி எழுதப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு எதிராகப் போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், அந்த நூலில் உள்ளவற்றை விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
நாடு முழுவதும் ரிஃபோர்மாசி அலை
1998 செப்டம்பர் 2 ஆம் தேதி அமைச்சரவையிலிருந்து அன்வார் வெளியேற்றப்பட்டார். மறுநாள் அம்னோவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அப்போது தொடங்கியது நாடு முழுவதும் அன்வாரின் ரிஃபோர்மாசி அலை. (மீண்டும்) இசா சட்டத்தின் கீழ் அன்வார் கைதானார். 1998 செப்டம்பர் 20 ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவம் இது. அப்போதைய பிரதமரும் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் துன் மகாதீர். 1998 இல் போலீஸ் காவலில் இருந்த சமயம் அப்போதைய போலீஸ் படைத் தலைவர் ரஹிம் நோர் அன்வாரைத் தாக்கியதாக ஒரு தகவல் வெளியானது. நீதிமன்றத்திற்கு முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டபோது அன்வாரின் ஒரு கண் கருப்பாக, வீக்கத்துதன் காணப்பட்டது இதனை நிரூபித்தது. அப்போதுகூட இது அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட காயமாக இருக்கலாம் என மகாதீர் கூறினார்.
இத்தாக்குதலுக்காக 2000 ஆம் ஆண்டில் ரஹிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அவருக்கு இரு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1999 இல் ஊழல், தகாத பாலியல் உறவு குற்றச்சாட்டுகளுக்கு ஆறு மற்றும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.
* 2004 - ஆதாரமின்மை காரணமாக அன்வாரின் தகாத பாலியல் உறவு குற்றச்சாட்டை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும் ஊழல் குற்றச்சாடு மீதிலான தண்டனையில் மாற்றம் இல்லை. இது 2008 வரையில் அவரை அரசியலில் ஈடுபடுவதிலிருந்து தடை செய்தது.
* 2008 ஏப்ரல் 14 ஆம் தேதி அரசியல் அரங்கிற்கு அன்வார் அதிகாரப்பூர்வமாகத் திரும்பினார். இவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பகுதியும் ஐந்து மாநிலங்களும் எதிர்க்கட்சி வசமானது. தேசிய முன்னணிக்கு முதல் அடி இங்குதான் ஆரம்பமானது. ஆண் உதவியாளருடன் தகாத உறவு கொண்டதாக ஜூலை மாதம் அன்வார் கைது செய்யப்பட்டார்.
* 2012 - ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து அன்வாரை விடுவித்தது. எனினும், அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது.
* 2013 பொதுத்தேர்தலில் அன்வார் வழி நடத்திய பக்காத்தான் ராக்யாட் மக்கள் தேர்வாக அமைந்தாலும் தேசிய முன்னணியை வீழ்த்தும் அளவிற்கு எண்ணிக்கை கிடைக்கவில்லை.
* 2014 - அன்வார் விடுதலையை மேல் முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது. அன்வாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
* 2015 - அன்வாரின் தகாத உறவு குற்றச்சாட்டை கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது. மற்றொரு நிலவரத்தில், பாஸ் பிரிந்ததன் காரணமாக பக்காத்தான் ராக்யாட் உடைந்தது. அதன் பிறகு, பி.கே.ஆர்., ஜ.செ.க., அமானா கட்சியுடன் புதிய கூட்டணியாக பக்காத்தான் ஹராப்பான் தோற்றுவிக்கப்பட்டது.
மகாதீர் வந்தார்; அன்வார் விடுதலையானார்
* 2017 - மகாதீர் மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். பெர்சத்து தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகாரப்பூர்வமாக பக்காத்தான் ஹராப்பானில் இணைந்தது.
* 2018 பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோற்கடிக்கப்பட்டது. அன்வாருக்கு அரசியல் மன்னிப்பு வழங்கப்பட்டது. போர்ட்டிக்சன் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
* 2022 - நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியது. வாக்களித்த மக்களுக்கு குழப்பங்கள் தீரவில்லை. தொங்கு நாடாளுமன்றம் 5 நாட்களுக்கு உறுதியற்ற ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தது. மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அன்வார்தான் 10 ஆவது பிரதமர் என அறிவிக்கப்பட்டு, அவரும் பதவிப் பிரமானம் எடுத்துக்கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்