செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

15 ஆவது தேர்தல் பிரச்சாரங்கள் காரசார குறையலாம் சுவாரஸ்யம் குறையாது
வியாழன் 17 நவம்பர் 2022 14:38:16

img

கோலாலம்பூர், நவ. 7-

நாடு முழுவதும் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 945 வேட்பாளர்கள் போட்டியிடும் மிகவும் நெரிசல் மிகுந்த ஒன்றாக 15 ஆவது பொதுத்தேர்தல் விளங்குகின்றது. அத்தொகுதிகளில் ஒன்பது இடங்களைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றிலும் பல்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 2018 தேர்தலில் அதே 222 தொகுதிகளில் 687 வேட்பாளர்கள் மட்டுமே களம் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து 166 தொகுதிகளிலும் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி, கெராக்கான் தானா ஆயர் ஆகியவற்றுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

சபாவில் கினாபாத்தாங்கான் தொகுதியிலும் சரவாவில் எட்டு தொகுதிகளான பத்தாங் சாடோங், சரிக்கி, கோத்தா சமாராஹான், இகான், முக்கா, உலு ராஜாங், லிம்பாங், தஞ்சோங் மானிஸ் ஆகியவற்றில் மட்டுமே நேரடிப் போட்டி நிலவுகிறது. 1999 முதல் ஐந்து தவணைகள் தேசிய முன்னணியின் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின் வசம் இருந்த சபாவின் கினாபாத்தாங்கான் தொகுதியில் வாரிசானின் மஸ்லிவாத்தி அல்துல் மாலேக் சுவா போட்டியிடுகிறார். சரவா மாநிலத்தில் நேரடி போட்டி என்பது காபுங்கான் பார்ட்டி சரவா (ஜி.பி.எஸ்.) மற்றும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் இடையே நிலவுகிறது.

கவனிக்கப்பட வேண்டிய இடங்கள்

தீபகற்ப மலேசியாவில் கோம்பாக், சிம்பாங் ரெங்காம், பாகான் டத்தோ, சுங்கை பூலோ, கோலசிலாங்கூர், தித்திவங்சா ஆகியன கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ள இடங்களாகக் கருதப்படுகின்றன. இந்த இடங்களில் அரசியல் ஜாம்பவான்கள் மற்றும் பழம்பெரும் அரசியல்வாதிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் அவரின் முன்னாள் சகாவான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அதே சமயம், சிம்பாங் ரெங்காமில் ஜொகூரின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் முன்னாள் கல்வி அமைச்சரான டாக்டர் மஸ்லீ மாலிக்கை சந்திக்கின்றார்.

சுங்கை பூலோவில் தேசிய முன்னணி வேட்பாளரான கைரி ஜமாலுடின் கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ளார். இடைக்கால சுகாதார அமைச்சரான அவர் தமது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை எதிர்நோக்கும் தேர்தலாக இது அமையும். கடந்த 2018 இல் பி.கே.ஆர். கட்சிக்குக் கிடைத்த 26,634 வாக்குகள் பெரும்பான்மையை முறியடிக்கும் மிகப்பெரிய கடமை இவருக்கு உள்ளது. மொத்தம் எழுவர் இம்முறை இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப்போட்டியை இவர் எதிர்நோக்கியுள்ளார். கடந்த 2008 முதல் அமானா கட்சியின் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹாமிடியின் கோட்டை பாகான் டத்தோ. பி.கே.ஆர். கட்சியின் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகாமட் அக்கின் இவரை முறியடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜாஹிட் ஹாமிடி 27 ஆண்டுகளாக இந்த பேரா நாடாளுமன்றத் தொகுதியை தன் வசம் வைத்துள்ளார். தித்திவங்சா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மற்றொரு நாடாளுமன்றத் தொகுதியாகும். முன்னாள் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் முயற்சியில் இறங்கியுள்ளார். அமானாவின் காலிட் அப்துல் சாமாட், தேசியக் கூட்டணியின் டாக்டர் ரொஸ்லி அடாம், பெர்ஜுவாங் கட்சியின் டத்தோ கைருடின் அபு ஹசான் உட்பட நான்கு முனைப்போட்டி இங்கு நிலவுகிறது.

தொகுதி கிடைக்காதவர்கள்

சிலருக்கு தொகுதிகள் வழங்கப்படவில்லை. இருந்தாலும் சுயேச்சையாக அல்லது மற்ற கட்சிகளின் கீழ் போட்டியிடுகின்றனர். ஆராவ், பெந்தோங், பத்து ஆகியன அவற்றுள் அடங்கும். பகாங், பெந்தோங்கில் ம.சீ.ச. முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கியாவ் தியோன் லாய் போட்டியிடுகிறார். இங்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஜ.செ.க.வின் யாங் சாய்ஃபுரா ஒஸ்மான், தேசியக் கூட்டணியின் டத்தோ ரொஸ்லான் ஹசான் மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்களான முகமட் காலில் அப்துல் ஹாமிட், வோங் தாக் ஆகியோர். பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு தவணை இருந்துள்ள வோங் இந்த முறை ஜ.செ.க.வினால் தேர்வு செய்யப்படவில்லை. எனவே அவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

பத்துவில் 10 பேர் களம் இறங்கியுள்ளனர். 15 ஆவது பொதுத்தேர்தலில் அதிகமான வேட்பாளர்களைக் கொண்ட ஒரு தொகுதி இதுவாகும். இதன் நடப்பு உறுப்பினர் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த பி.பிரபாகரன், தேசிய முன்னணி, பெஜுவாங், பெரிக்காத்தான், வாரிசான், பார்ட்டி ராக்யாட் ஹராப்பான் மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தியான் சுவா சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி பிரபாகரனை நேரடியாக சந்திக்கின்றார். இது பிரபாகரனுக்கு சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முன்னணி சார்பில் ம.இ.கா. தேசிய உதவித்தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை போட்டியிடுகிறார்.

இதனிடையே, ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதன் நடப்பு உறுப்பினரான டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் இம்முறை அம்னோவால் தேர்வு செய்யப்படாததால் பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிடுகிறார். பக்காத்தான், பாரிசான்,  பெரிக்காத்தான் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். பல்முனை போட்டியின் காரணமாக தேசிய முன்னணிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வாக்குகள் பிளவுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என நுசாந்தாரா அக்காடாமி ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த அஸ்மி ஹசான் கூறினார். பத்து தொகுதியைப் பொறுத்த வரையில் இது மிகவும் அபாயகரமான போட்டி. பத்து பேர் போட்டியிடுகின்றனர். ஆயிரக்கணக்கில் வாக்குகள் பிரியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சுங்கை பூலோவில் கைரி ஜமாலுடின், கோல சிலாங்கூரில் தெங்கு ஸஃப்ருலை தேசிய முன்னணி நிறுத்தியிருப்பது எதையும் சந்திக்க அது தயார் என்பதைக் காட்டுகிறது. ஸஃப்ருல், கைரி இருவரும் வெற்றி பெற்றால் பக்காத்தான் வசமுள்ள மாநில அரசாங்கம் தேசிய முன்னணியிடம் வீழலாம் என்று அவர் கருத்துரைத்தார். எனினும், இந்த முறை தேர்தல் பிரச்சாரம் அவ்வளவு காரசாரமாக இருக்காது என்று அஸ்மி கூறினார். காரணம்? எதிர்க்கட்சிகள் எட்டிப்பிடிப்பதற்கு 1எம்.டி.பி. போன்ற முக்கியமான பிரச்சினைகள் எதுவும் இப்போது இல்லை. எல்.சி.எஸ். போர்க்கப்பல் விவகாரம் இருக்கிறதே என்று கூறலாம். ஆனால், அது பாதையைத் தவறவிட்ட விவகாரம் போல்தான். எதையும் வடிகட்டி எடுக்க முடியாது. எனவே, பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைச் சுற்றியே பிரச்சாரங்கள் இருக்கும் என்றார் ஆய்வாளர் அஸ்மி.

சுயேச்சை வேட்பாளர்கள் படையெடுப்பு

இதற்கிடையே, இதுவரை இல்லாத அளவிற்கு இம்முறை சுயேச்சை வேட்பாளர்கள் அதிகமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். மொத்தம் 108 சுயேச்சை வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்ரனர். 2013 தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட 79 பேர் மற்றும் 2018 இல் போட்டியிட்ட 24 பேரை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் எம்.ரவீந்திரன், முகாமட் ஷாபிக் முகமட் யூனுஸ், டான் ஹுவா மெங், கோத்தா ராஜாவில் களம் இறங்கியுள்ள கே.குமார், பி.ரவீந்திரன், எஸ்.சுரேந்தர், பத்துவில் தியான் சுவா, வழக்கறிஞர் சித்தி சபேடா காசிம், பாங்கியில் எம்.சுதன், தைப்பிங்கில் எம்.மோகனன், டாக்டர் ஏ.ராமமூர்த்தி, சுங்கை சிப்புட் தொகுதியில் என்.ராஜா, ஆர்.இந்திராணி ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மொத்தம் 443 பேர் 50 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள். 352 பேர் 60 வயதுக்கும் மேலானவர்கள், 350 பேர் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள், 205 பேர் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள், 36 வேட்பாளர்கள் 21 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்த வரையில் 82 இடங்களில் 4 முனைப் போட்டியும், சட்டமன்றத் தொகுதிகளில் 51 இடங்களில் மும்முனைப் போட்டியும் நிலவுகிறது என அது தெரிவித்தது.     

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img