img
img

ஒரு நூற்றாண்டின் மாமனிதர் விடை பெறுகிறார் ஒபாமா.....!
வியாழன் 19 ஜனவரி 2017 09:25:21

img

தனது எட்டு ஆண்டு அதிபர் பதவிக் காலம் முடிவடைந்து நாளை 20-1-2017 வெள்ளிக்கிழமை பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக விடை பெறுகிறார். அமெரிக்க அதிபர் ஒருவர் உச்சப் புகழுடன் பதவியிலிருந்து விலகிச் செல்வது இதுவே முதல் முறையாகும். இவ்வுலகில் வாழ தற்போதைய காலகட்டத்தைவிட சிறப்பான காலகட்டம் வேறெதுவும் இல்லை என்று தனது பதவி காலம் முடிவடையும் இவ்வேளையில் ஒபாமா உலக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். உலக வல்லரசான அமெரிக்காவின் 44ஆவது அதிபராக கடந்த 2009 ஜனவரி 20ஆம் தேதி ஒபாமா பொறுப்பேற்றார். கறுப்பினத்தைச் சேர்ந்த முதலாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் ஒபாமா பெறுகிறார். முன்னாள் அதிபர் புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக ஒபாமா திகழ்ந்ததால் அதுவே அமெரிக்க அதிபர் பதவி அவரின் கைவசமானது. அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றபோது, உலகிற்கு அவர் அறிவித்த முதலாவது செய்தி, பில்லியன் கணக்கில் அரசு செலவு செய்யும் ஆயுதப் படையை அமெரிக்கா குறைக்கும் என்பதாகும். அதேபோல் உலகம் முழுவதிலும் அணு ஆயுதங்கள் தடை செய்யப்படுவதற்குஒபாமா முழுமையான ஆதரவை தெரிவித்தார். அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கியூபாவுடன் பகைமை காத்து வந்த அமெரிக்காவின் நிரந்தர முட்டுக்கட்டையை தகர்த்தெறிந்த பெருமையும் ஒபாமாவையே சாரும். 2013 ஆம் ஆண்டு ஜோகனஸ்பெர்க்கில் நடந்த முன்னாள் தென்னாபிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் ஒபாமா, கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன்வந்து கைகுலுக்கியது அவரின் பெருந்தன்மையை காட்டியது. கருப்பின அரசியல்வாதியை வெள்ளையர்கள் ஆதரித்தால் ஏதோ ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்ற அமெரிக்கர்கள் கொண்டிருந்த எண்ணத்தையே தவிடுபொடி யாக்கிக் காட்டினார் ஒபாமா, அமெரிக்காவைத் தாண்டியும் உலக மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அவரின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காகவே உலகின் கவனத்தை ஈர்த்த அதிபர் ஆவார். ஒபாமா பதவியிலிருந்து எட்டு ஆண்டு காலத்தில் முந்திய நிர்வாகம் போல், வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடும் ஓர் இக்கட்டான நிலைக்கு ஒபாமா கொண்டு செல்லவில்லை. ஆனால், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் பட்ட விவகாரத்தில் ஒசாமா பின் லேடன் மரணம் மூலம் அவர் நிறைவுரை எழுதியுள்ளார். அதேவேளையில் பகைமை நாடுகளான ரஷ்யா, சீனாவை எதிர்கொள்வதில் அவர் குறைவான திறன் கொண்டிருந்தார்.அவரது மென்மையான அணுகு முறையால் அந்த நாடுகள் பல விவகாரங்களில் அமெரிக்காவுக்குச் சவால் விடுத்துவிட்டுத் தப்பித்தன. அமெரிக்க அரசியலில் தாக்கம் செலுத்துகின்ற பணத்தின் திருவிளையாடல்களைக் குறைக்க வேண்டும். அதன் மூலம் ஜனநாயக அமைப்புகளை மறு கட்டுமானம் செய்ய வேண்டும் என்பதையும் அமரிக்கர்களுக்கு அவர் அழுத்தந் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். தமது ஆட்சியில் அமெரிக்க நிறுவனங்களை பாதுகாப்பதற்கு நிறைய சட்டங்களை உருவாக்கி பெருமையும் ஒபாமாவையே சேரும். புஷ் நிர்வாகத்தில் அமெரிக்காவிற்கு பெரும் மிரட்டலாக இருந்தது அல் - கயிடா தீவிரவாத அமைப்பாகும். ஒபாமா காலத்தில் பெரும் மிரட்டலை ஏற்படுத்தியது isis என்று சொல்லக்கூடிய பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பை வேரறுப்பதில் ஒபாமா தோல்வி சற்று கண்டுள்ளார். அனைத்துலக அரங்கில் இலங்கை, பர்மா போன்ற நாடுகளின் இன படுகொலை களை ஒபாமா கண்டிக்காதது, அவரின் வீரியத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகும். இவரின் காலத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியம் உடைந்து சிதைந்துள்ளது. ரஷ்யா உத்வேகம் பெற்றது. லிபியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளின் ஆட்சி கவிழ்ப்பும், அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும் இவரின் காலத்தில்தான் நிகழ்ந்துள்ளது. தன்னுடைய பேச்சாற்றலை கொண்டு அமெரிக்காவின் உச்சப் பதவியை அடைந்த 55 வயதான ஒபாமா, அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை முற்றாக நிராகரித்தவர். டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறாமல் இருந்திருப்பாரேயானால் ஒபாமா கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருப்பார். மக்கள் ஒற்றுமையால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிகழும் என்று அடிக்கடி வலியுறுத்தும் ஒபாமா, அமெரிக்கா வல்லரசு என்று சொல்லலாம். ஆனால், நாம் வளர இன்னும் நிறைய உயரம் இருக்கிறது என்று அவர் கூறிய கருத்து அமெரிக்கர்களை சிந்திக்க வைத்துள்ளது. இனவாத அமெரிக்க சமூகத்தில் இன்னமும் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு சக்தி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வேரறுக்கப்பட வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தான் அதிபராக பொறுப்பேற்றபோது இருந்ததைவிட தற்போது வலுவான நிலையில் அமெரிக்கா இருப்பதாகவும் அதுதான் அமெரிக்காவிற்கு தாம் விட்டுச் செல்லும் செல்வமாகும் என்று ஒபாமா உணர்ச்சிப் பொங்க கூறியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக தனது பிள்ளைகளுக்கு தாயாகவும் தனக்கு மனைவியாகவும் மட்டுமல்ல, தன்னுடைய சிறந்த தோழியாக இருந்த மனைவி மிச்செல்லின் தியாகத்தையும் நினைவு கூர்ந்து அமெரிக்க அதிபர் என்ற முறையில் தனது இறுதி உரையை ஒபாமா முடித்துள்ளார். ஒபாமாவின் சாதனைகள், தோல்விகளுக்கான வெகுமதியை அவர் பெறாவிட்டாலும் ஒரு மனிதன் என்ற முறையில் அவரை மக்கள் எப்போதும் நினைவுகூர்வார்கள். ஆழமான சிந்தனையோடு செயல்பட்ட தலைமை அதிகாரியாக, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் காலத்தால் போற்றப்படுவார். சமூக ஊடகங்களோடும் மக்களின் பண்பாட்டோடும் நல்ல உறவுகளைப் பேணிய 21 ஆம் நூற்றாண்டு மனிதராக அவர் திகழ்வார். துப்பாக்கிக் கலாச்சாரத்தாலும் இன வெறுப்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்தவராக அவர் இருந்துள்ளார். மக்களின் நினைவில் எப்போதும் அவர் இருப்பார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img