SAVE 3.0 திட்டம் : மீட்டு, பணத்தைச் சேமி, ஆற்றலைச் சேமி, சுற்றுச்சூழலைப் பேண்
“அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அல்லது 5 நட்சத்திர ஆற்றல் திறன் கொண்ட மின் சாதனங்களை வாங்குவதற்கு தள்ளுபடிகளை (e-rebate) வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் மேலும் உங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?”
ஆற்றல் திறன் திட்டத்தின் மூலம் அடையப்படும் நிலைத்தன்மை அல்லது SAVE 3.0 என அழைக்கப்படும் இத்திட்டம் எரிசக்தி ஆணையத்தால் (Suruhanjaya Tenaga) 2022ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இத்திட்டம் 4 அல்லது 5 நட்சத்திர ஆற்றல் திறன் கொண்ட மின் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகளை (e-rebate) வழங்கும் நோக்கத்தைக் கொண்டது. இந்தத் திட்டம் 2021இல் செயல்படுத்தப்பட்ட SAVE 2.0 திட்டத்தின் தொடர்ச்சியாகும். SAVE 2.0 திட்டம் 134,000 தள்ளுபடி (e-rebate) பதிவுகளைச் செய்துள்ளது. இதன் மூலம் 26.8 மில்லியன் ரிங்கிட் சேமிக்கப்பட்டுள்ளது.
SAVE 3.0 திட்டம் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சின் (keTSA) கீழ் ஒரு முயற்சியாகும். இத்திட்டம் மலேசியாவின் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் (SEDA) எரிசக்தி ஆணையத்துடன் (Suruhanjaya Tenaga ) இணைந்து செயல்படுத்தப்பட்டதாகும். தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB), சரவாக் எனர்ஜி பெர்ஹாட் (BERHAD), சபா எலக்ட்ரிசிட்டி செண்டிரியான் பெர்ஹாட் (SESB), நூர் பவர் செண்டிரியான் பெர்ஹாட் போன்ற கூட்டாளர்களாலும் மற்றும் மின் வணிகத் தளங்களான ஷோப்பி (Shopee), லசாடா (Lazada), பிஜி மோல் (PG Mall) மற்றும் யுபேலியும் (Youbeli) இத்திட்டத்தை ஆதரிக்கின்றன.
SAVE 3.0 திட்டத்தின் முக்கிய நோக்கம் சந்தையில் உள்ள 4 அல்லது 5 நட்சத்திர ஆற்றல் திறன் கொண்ட மின் சாதனங்களின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பதாகும். அத்துடன் மின்சார பயன்பாட்டை மிச்சப்படுத்தும் ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களை வாங்குவதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்திட்டம் செயல்படுகிறது.
SAVE 3.0 திட்டத்தின் கீழ் இரண்டு வகை விண்ணப்பங்கள் உள்ளன. அவ்வகையின் அடிப்படையில் மீட்டெடுக்கக்கூடிய மின்சார உபகரணங்களைக் கீழ்காண்க :
முதல் வகை :
குளிர்சாதனப்பெட்டி (RM200)
குளிரூட்டி (Air Conditioner) (RM200)
இரண்டாம் வகை :
தொலைக்காட்சி (RM200)
சலவை இயந்திரம் (RM200)
நுண்ணலை அடுப்பு (Microwave Oven) (RM100)
அரிசி பானை (RM50)
பணத்தைச் சேமி, ஆற்றலைச் சேமி, சுற்றுச்சூழலைப் பேண் என்ற முழக்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மூன்று முக்கிய நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது. அதாவது :
1. குறைக்கப்பட்ட மாதாந்திர மின் கட்டணங்கள் மூலம் பணத்தைச் சேமிக்கவும்;
2. குறைக்கப்பட்ட ஆற்றல் உற்பத்தி செலவுகள் மூலம் ஆற்றலை சேமிக்கவும் மற்றும்;
3. கார்பன் தடம் (Carbon Footprint) மற்றும் பசுமை இல்ல (Green House) வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலைக் காப்பாற்றவும்.
இந்தத் திட்டத்தினால் நாடு முழுவதும் 140,000 குடும்பங்கள் வரை பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் ஒதுக்கீடு சற்று குறைவாகத்தான் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆற்றல் சேமிப்பை RM60.45 மில்லியன் வரை குறைக்கவும் மற்றும் கார்பன் தடத்தை ஆண்டுக்கு 130,000 டன் பெருமளவு கரியமிலவாயு வரை குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
SAVE 3.0 திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கும் ஆற்றல் திறன் கொண்ட மின் சாதனங்கள் மற்றும் கடைக்காரர்களின் பட்டியலை தெரிந்து கொள்வதற்கும் இணையதளத்தில் எனும் அதிகாரப்பூர்வ இணைப்பை அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மின் வணிக வலைத்தளங்களை வலம் வாருங்கள்.