கோலாலம்பூர், ஏப். 30-
தூக்குத் தண்டனையை ரத்துச்செய்ய வேண்டும் என மலேசியாவில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அரசாங்கம் இது குறித்து உறுதியான முடிவெதையும் இன்னும் எடுக்கவில்லை. ஆனால், நமது அண்டை நாடான சிங்கப்பூரில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக மலேசியர்கள் தூக்கிலிடப்படுகின்றனர், இன்னும் சிலர் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நாகேந்திரன் தர்மலிங்கம் எனும் 34 வயது மலேசியர் கடந்த புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலகின் மிகவும் கொடுமையான ஒரு தண்டனையாக இது கருதப்படுகிறது.
இதனிடையே, நாகேந்திரனுக்கு அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படவிருந்த 36 வயது கே.தட்சணாமூர்த்தி என்ற மற்றொரு மலேசியரின் தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தட்சணாமூர்த்திக்கு நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் 2016 முதல் சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆறாவது மலேசியராக அவர் விளங்கியிருப்பார்.
தட்சணாமூர்த்தியை தவிர்த்து இன்னும் எட்டு மலேசியர்கள் தங்களின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என சிங்கப்பூரின் மனித உரிமைகள் வழக்கறிஞரான ரவி மாடசாமி கடந்த 2022 பிப்ரவரி மாதம் சிங்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த வாக்குமூல ஆவணங்கள் தெளிவாகக் காட்டின என்று மலாய் மெயில் தகவல் வெளியிட்டுள்ளது.
2010 முதல், மொத்தம் 14 மலேசியர்கள் சிங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் முக்கால்வாசியினர் இந்தியர்களே. 11 பேர் பட்டியலில் உள்ளனர். இருவர் மலாய்க்காரர்கள், ஒருவர் சீனர். அதே சமயம், மேல் முறையீட்டின் வாயிலாக தங்கள் குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகள் மாற்றப்பட்ட 37 குற்றவாளிகளில் 13 பேர் மலேசியர்கள் ஆவர். அவர்களில் எழுவர் சீனர்கள், ஐவர் இந்தியர்கள் மற்றும் ஒருவர் மலாய்க்காரர் ஆவார்.
தட்சணாமூர்த்தியின் மேல் முறையீடு வரும் மே 20 ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ஜாய்ட் மாலெக் கூறியதாக மலாய் மெயில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கான தண்டனையிலிருந்து சிங்கப்பூர் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது என்பதை ரவி நினைவூட்டினார்.
சிங்கப்பூர் இச்சட்டத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றி வருகிறது. மரண தண்டனையை விமர்சனம் செய்பவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கூறும் பதில்களே இதற்கு ஆதாரம். எனினும், இவ்வாறு நடந்து கொள்வதன் வழி, குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை அது அலட்சியம் செய்து வருகின்றது என்றார் ரவி.
போதைப்பொருள் குற்றங்களுக்காக சிங்கப்பூரில் தண்டனை பெற்றவர்களில் மலாய்க்காரர்கள் அதிகமாக இருப்பதாக ரவி தனது வாக்குமூல பதிவுகளில் கூறியிருக்கிறார். மலாய்க்காரர்கள் மொத்தம் 77 பேர் உள்ளனர். அவர்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 14 மலேசியர்கள் அடங்குவர். மொத்த எண்ணிக்கையில் 15 இந்தியர்கள், 10 சீனர்கள், இரு மற்ற நாடுகளின் பிரஜைகள் ஆவர்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 13.5 விழுக்காட்டினராக மலாய்க்காரர்கள் இருந்த போதிலும் 2021 ஜூன் மாதம் வரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சிங்கை குடியிருப்பாளர்களில் 77 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களாக உள்ளனர். இது 2010 முதலான கணக்காகும்.
போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இதுவரை நான்கு மலேசியர்களுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த மின்னியல் வழக்கு முறையின் கீழ் இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளன.:
* அப்துல் ஹெல்மி அப்துல் ஹாலிம் - இவர் 2019 நவம்பர் 21 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். 2015 ஏப்ரல் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அப்துல் ஹெல்மி, 16.56 கிராம் டயாமோர்ஃபின் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 2017 மார்ச் 24 ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
குற்றமிழைக்கும்போது அவருக்கு 32 வயது. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அவரை கைது செய்தபோது ஜொகூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் அந்த போதைப்பொருளைக் கொண்டு வந்ததையும் சிங்கை, தெக் வொய் லேனில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் ஒருவரிடம் அதனை கொடுக்கவிருந்ததாகவும் கூறினார்.
இதற்கு முன்னதாக 2015 மார்ச் வரையில் எஸ்.பி.எஸ். டிரான்சிட் பஸ் காப்டனாக அவர் சிங்கப்பூரில் பணி புரிந்துள்ளார். ஒரு விபத்து காரணமாக அந்த ஆண்டில் அவரின் வேலை பறிபோனது. அவரின் வேலை பறிபோன நாளில்தான் ரபீ என்ற நண்பரை சந்தித்தார். சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கொண்டு வர 1,000 வெள்ளி வருமானம். சுடச்சுட கையில் பணம் கிடைக்கும் என்று பேசி அந்த ரபீ இவரை போதைப்பொருள் கடத்த வைத்தார்.
* பிரபு எம்.பத்மநாதன் - 31 வயதான இவருக்கு 2018 அக்டோபர் 26 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிரபுவுடன் அவரின் நண்பர் சுதாகர் ஜே.ராமன் என்பவர் மீதும் தலா 227.82 கிராம் டயாமோர்பின் போதைப்பொருளைக் கடத்தும் ஒரே நோக்கம் இருந்ததாகவும் 227.82 கிராம் டயாமோர்பின் போதைப்பொருளை கடத்துவதற்குத் தயாரானதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
வுட்லென்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியாவில் பதிவான டொயோட்டா ஹைலெக்ஸ் ரகக் காரில் பயணித்த போது சிங்கை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினாரால் சுதாகர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அப்பிரிவின் அதிகாரிகள் துணையோடு சுதாகர் விரித்த வலையில் பிரபு பிடிபட்டார். சுதாகரின் வாகனத்தில் டிரைவர் இருக்கையின் பின்புறம் இருந்த பயணிகள் இருக்கையின் அடியில் அந்த 227.82 கிராம் எடையிலான போதைப்பொருள் அடங்கிய 20 பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிரபுதான் இந்த வேலைக்காக அமர்த்தப்பட்டவர் என்றும் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் எடுத்துச்செல்ல சுதாகரை தூண்டியவர் அவர்தான் என்றும் சிங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்து, பிரபுவுக்கு மரண தண்டனை விதித்தது.
* பிரபாகரன் ஸ்ரீவிஜயன் - 2017 ஜூலை 14 ஆம் தேதி இவருக்கு மரண தண்டனை நிறைவேறியது. இவர் ஓட்டிச்சென்ற சொனாட்டா செடன் ரகக் காரில் சிங்கை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் 2012 ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலையில் போதைப்பொருள் அடங்கிய இரு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வுட்லென்ஸ் சோதனைச் சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மொத்தம் 22.24 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் அவரிடமிருந்து சிக்கியது. தனது மோட்டார் சைக்கிளை பயன்படுத்த முடியாததால் தனது நண்பரின் காரை பயன்படுத்தி பிரபாகரன் சிங்கப்பூருக்குள் நுழைந்திருக்கிறார். மாத தவணைப் பணம் கட்டுவதில் பிரச்சினை இருந்ததால் அவர் தனது மோட்டார் சைக்கிளை பயன்படுத்தவில்லை.
இவ்வழக்கு தொடர்பில், சிங்கப்பூரை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வகை செய்யும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும்படி மலேசியாவின் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு பிரபாகரனின் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கைப் பதிவு செய்திருந்தனர். எனினும், 2017 இல் அவர் தூக்கிலிடப்பட்டார்.
* தேவேந்திரன் சுப்பிரமணியம் - இவருக்கு 31 வயது. 2016 நவம்பர் 18 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவரும் வுட்லென்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டார். தமது மோட்டார் சைக்கிளில் 83.36 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை எடுத்துச் சென்றுள்ளார். அவர் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிங்கை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அவரை தடுத்து நிறுத்தினர். அவரின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 2.7 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருள் ஆறு பொட்டலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஒரு செய்தித்தாளில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, போதைப்பொருள் குற்றங்களுக்காக சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும் மலேசியர்கள் பற்றிய தகவல்கள்:
* யூ சிங் தாய் - இவருக்கு வயது 30. 2012 மே 24 ஆம் தேதி போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். முகமட் அப்துல்லா என்ற ஓர் ஆடவரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக நான்கு பாக்கெட் போதைப்பொருளை அவர் தன் வசம் வைத்திருந்தார்.
* பன்னீர் செல்வம் பரந்தாமன் - 34 வயதான இவர் 2017 இல் ஹெரோயின் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தண்டனை விதிக்கப்பட்டார். தனது தண்டனைக்கு எதிரான இவரின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
* ரஹ்மாட் கரிமோன் - 2015 மே 27 ஆம் தேதி ஜைனால் ஹமாட் என்பவரிடம் ஒரு பச்சை நிறப் பையை ரஹ்மாட் ஒப்படைத்தார். இதற்காக அவருக்குப் பணமும் கொடுக்கப்பட்டது. அந்த பையில் 53.64 கிராம் ஹெரோயின் இருந்தது. வுட்லென்ஸ் சோதனைச் சாவடியில் ரஹ்மாட் கைது செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரஹ்மாட்டிற்கு 32 வயது.
* சாமிநாதன் செல்வராஜு - 2013 இல் மேலும் இருவருடன் 301.6 கிராம் எடை போதைப்பொருளை கடத்தியதாக சாமிநாதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. போதைப்பொருளை விநியோகித்தவர் சாமிநாதன் என தீர்ப்பளித்து உயர் நீதிமன்றம் சாமிநாதனுக்கு மரண தண்டனை விதித்தது.
* லிங்கேஸ்வரன் ராஜேந்திரன் - இவருக்கு வயது 30. 2016 மே 24 ஆம் தேதி கறுப்பு நிற டேப் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை லிங்கேஸ்வரன் புளோக் 289, யூஷுன் அவெனியூ 6 இல் ஒருவரிடம் கொடுத்தார். அதில் 52.77 கிராம் போதைப்பொருள் இருந்தது. லிங்கேஸ்வரன் 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
* தமிழ்ச்செல்வன் - 2017 இல் மேலும் இருவருடன் பிடிபட்டார். 19.42 கிராம் போதைப்பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, 2019 இல் மரண தண்டனையை எதிர்நோக்கினார். இவருக்கு வயது 35. * புனிதன் கணேசன் - 38 வயதான இவர் 2020 மே மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டார். கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இயங்கலை வாயிலாக தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே.
2011 இல் போதைப்பொருள் கடத்தலுக்காக இருவருடன் இவர் நடத்திய சந்திப்பு, மற்றும் அவர்களில் ஒருவரை இரு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூருக்குச் செல்ல பணித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை இவர் எதிர்நோக்கியிருந்தார். சிங்கப்பூர் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை கட்டாயத் தண்டனையாக விதிக்கப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்