கோலாலம்பூர், மார்ச் 23-
தொழிலாளர் கொத்தடிமையை துடைத்தொழிக்கும் புரோட்டோகால் 29 (பி29) என்ற விதிமுறையை அனுசரிக்க மலேசியா அதிகாரப்பூர்வமாக தனது ஒப்புதலை வழங்கியது. ஐஎல்ஓ எனப்படும் அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்தின் இந்த விதிமுறைக்கு மலேசியா தனது அங்கீகாரத்தை வழங்கியது ஒரு வரலாற்று நிகழ்வாகும் என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
இதன்மூலம் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இந்த விதியை ஏற்றுக்கொள்ளும் ஆசிய பசிபிக் நாடுகளில் 5 ஆவது நாடாகவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாமுக்கு அடுத்து மலேசியா 2 ஆவதாகவும் விளங்குகிறது என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார். தற்போது சுவிட்சர்லாந்து , ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் சரவணன் தொலைபேசி மூலம் இந்த தகவலை தெரிவித்தார்.
சமூக நீதி நிலைநாட்டப்படும்
தொழிலாளர்களுக்கு மலேசியா ஒரு பாதுகாப்பான நாடு. நாகரீகமான பணி சூழலை வழங்கும் நாடு என்ற சமூக நீதியை மேம்படுத்தும் வகையில் இந்த விதிமுறைக்கான ஒப்புதல் வழி வகுக்கும் என்று அவர் சொன்னார். இந்த பி29 விதிமுறைக்கான மலேசியாவின் ஒப்புதல் அனைத்துலக அளவில் கொத்தடிமை கொடுமைக்கு எதிராக மலேசியா போராடவும் குரல் கொடுக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.
மலேசியாவில் மட்டுமல்ல, வேறு எங்கும் கொத்தடிமை கொடுமை நடக்காமல் தடுக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும் மலேசியா பாடுபடும் என்றார் அவர். ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமைக்கு புறம்பாக அவரை கசக்கி பிழிந்து அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது உடல் உழைப்பை வாங்கும் நடைமுறையை ஐஎல்ஓ கடுமையாக எதிர்த்து வருகிறது.
மலேசியாவை பொறுத்தவரை கொத்தடிமை கொடுமையை ஒரு மனித உரிமை அத்துமீறல் என்றும் மலேசியா வகைப்படுத்த விரும்புகிறது. தனி மனிதர்கள் படுகின்ற துன்பங்களை, அவர்கள் அடையும் கொடூர இன்னல்களை சகித்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற விஷயங்களில் சமரசத்திற்கு இடமில்லை என்பதுதான் மலேசியாவின் நிலை என்றார் அவர்.
பல்வேறு நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம்
மலேசியாவில் பல நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வந்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்கான பாதுகாப்பான ஏற்பாடுகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி மலேசியா ஏற்படுத்தி வருகிறது. வங்காளதேசம், இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அங்கிருந்து வருகின்ற தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளும் சலுகைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
இதற்கு முன்னர் தொழிலாளர்களுக்கான குறைந்த அடிப்படை சம்பளம்தொடர்பான ஐஎல்ஓ தீர்மானத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியா தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பின்னர் குறைந்த பட்ச அடிப்படை சம்பள விஷயத்தில் மலேசியா பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட குறைந்த பட்ச அடிப்படை சம்பளத்தில் மலேசியா 25 விழுக்காட்டு உயர்வை வழங்கியிருக்கிறது என்பதை இங்கே பெருமையுடன் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம் என்றார் அவர்.
தலைவர்களுடன் தொடர் சந்திப்பு
ஜெனிவாவுக்கு மேற்கொண்ட வருகையில் ஐஎல்ஓ தலைமை இயக்குநர் கை ரய்டர் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான ஐஎல்ஓ இயக்குநர் சிஹாகோ அஸாடா மியக்காவா ஆகியோரை சந்தித்து தொழிலாளர்கள் விவகாரம் குறித்து தாம் விவாதித்ததாக அவர் சொன்னார். கொத்தடிமை கொடுமைக்கு எதிரான அம்சங்கள் இந்த பேச்சுகளில் முன்னுரிமை பெற்றன. ஒரு தொழிலாளிக்கு வழங்கவேண்டிய அடிப்படை உரிமைகள், தொழிலாளர்கள் நலன் சம்பந்தப்பட்ட அடிப்படை கொள்கைகள் குறித்தும் தாங்கள் பேசியதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
பி29 என்ற கொத்தடிமைக்கு எதிரான இந்த விதிமுறைக்கு அங்கீகாரம் வழங்கிய மலேசியா உலகளாவிய நிலையில் நடக்கும் இந்த கொடுமைகளையும் நவீன அடிமைத்தனங்களையும் குழந்தை தொழிலாளர் கொடுமையையும் முறியடிக்கவும் எஸ்டிஜி அலையன்ஸ் 8.7 என்ற வரிசையிலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.
மலேசியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களில் கொத்தடிமை கொடுமை நடப்பதாக புகார் எழுந்தது. இதனால் அத்தகைய நிறுவனங்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக சந்தையிலும் அமெரிக்க சுங்கத்துறையிலும் தடை விதிக்கப்பட்டதால் பெரும் பிரச்சினைகள் நேர்ந்தன. இதனால் கடந்த நவம்பர் மாதம் கொத்தடிமைக்கு எதிரான தேசிய நடவடிக்கை திட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்