img
img

நாட்டை புரட்டிப் போட்ட வெள்ளம்: அரசின் அலட்சியமே காரணம்!
வியாழன் 23 டிசம்பர் 2021 14:30:24

img

கோலாலம்பூர், டிச. 23-

இடைவிடாமல் பெய்த கனத்த மழையினால் நாட்டை புரட்டிப் போட்ட வெள்ளத்தில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 64 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட வேளையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. யாரும் எதிர்பார்க்காத வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் இம்முறை மிகவும் மோசமான அளவில் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகளும் வாகனங்களும் பொருட்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த காட்சி நாட்டை மீண்டும் சுனாமி தாக்கியதுபோல் இருந்தது.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மூன்று முக்கிய ஆறுகளான சிலாங்கூர் ஆறு, கிள்ளான் ஆறு, லங்காட் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள 9 மாவட்டங்கள் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டன. இந்த மோசமான வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூழ்கியதைத் தொடர்ந்து மேற் குறிப்பிட்ட 9 மாவட்டங்களும் வெள்ளக்காடாகக் காணப் பட்டன.

கடந்த 1971ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிகவும் மோசமான அளவில் ஏற்பட்ட இந்த வெள்ளம் பல மாநிலத்திலுள்ள மக்களை குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதி மக்களை பெரிதும் பாதித்துள்ளது. வேலை முடிந்து தங்களின் சொந்த வாகனங்களிலும் பேருந்து களிலும் வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் வாகனங்களுடன் வெள்ளத்தில் சிக்கிய வேளையில், பல வீடமைப்புத் திட்டங்களில் திடீரென வெள்ளம் ஏறியதில் பலர்  மேல்மாடிகளிலும் வீட்டின் கூரைகளின் மீது ஏறியும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஸ்ரீ மூடா வீடமைப்புப் பகுதிகளில் இரண்டு மாடிகள் வரை வெள்ளம் ஏறியதில் அங்குள்ள மக்கள் கூரைப் பகுதியில் ஏறி தங்களை காப்பாற்றிக் கொண்ட வேளையில், அவர்கள் அனைவரும் பட்டினியால் வாடிக் கிடந்தனர்.

கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் பல நூறு கோடி வெள்ளி மதிப்புள்ள வீடுகள், வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகளை அழித்தது. கடந்த சனிக்கிழமை முதல், ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் சிக்கிய வேளையில், பலரின் வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் படி மட்டுமே அப்படியே இருக்கும் நிலையில், அதன் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி பலருக்கு கண்ணீரை வரவழைத்தது. இலட்சக்கணக்கான மக்கள் மின்சாரம், தண்ணீர் இன்றி இரவைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல நெடுஞ்சாலைகளில் மக்கள் வாகனங்களுடன் சிக்கித் தவித்தனர்.

பலர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தங்களின் நோய்களுக்கான  மருந்து ஏதும் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வந்துள்ளனர். திடீர் வெள்ளம் ஏற்பட்டபோது, பல அரசாங்கத் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்களைச் சந்திக்காமல் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும் துயர் துடைப்பு மையங்களில் சேர்க்கப்பட்ட மக்களை நலம் விசாரிப்பதாகக் கூறி அவற்றை படம் பிடித்து போட்டுக் கொண்டது மக்களிடையே பெரும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதை சமூக வலைத் தளங்களில் அவர்களின் மனக் குமுறலைக் காண முடிந்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், காரிலிருந்து இறங்காமல் மக்களுடன் பேசுவதைக் கண்ட மக்கள்  தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளையில், வெள்ளம் ஏற்பட்ட அன்றிரவே தலைநகரில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நேரில் சென்று பார்வையிட்டார். அதேவேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் உட்பட தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் அவர் கண்டறிந்தார்.

நாட்டின் 16ஆவது மாமன்னரான அவர், முழங்கால் அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் இறங்கிச் சென்று வெள்ள நிலைமையை பார்வையிட்ட படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்களின் பாராட்டைப் பெற்றது. பிரதமர் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் அவ்வாறு செய்யாத நிலையில் குளிர்சாதன வசதிகளுடன் அரண்மனையில் ஓய்வெடுத்து கொள்ள வேண்டிய மாமன்னரே களத்தில் இறங்கியதைக் கண்டு  பலர் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர். அதேவேளையில், பிரதமர் உட்பட நாட்டிலுள்ள இதர அரசியல் தலைவர்கள் எங்கே என மக்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், உள்கட்டமைப்புகளை சீரமைக்க 10 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என  பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருந்த வேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஓராயிரம் வெள்ளி உதவி நிதியாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதேவேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குவதில் அரசாங்கம் குறிப்பாக சமூக நல இலாகாவும் தேசிய பேரிடர் நிர்வாக மையமும் தோல்வி கண்டுள்ளது மக்களிடையே பெரும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் அவசர உதவிக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினரை தொடர்பு கொள்ளும் வகையில் சிறப்பு அலைபேசி எண்கள்  உட்பட புலனத்தில் தொடர்பு கொள்வதற்கான சிறப்பு எண்களையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்படும்போது அவர்கள் எங்கே உள்ளனர் என்பதை எளிதில் அடையாளம் காணும் அதேவேளையில், அவர்களுக்கு உடனடியாக உதவிகளை கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு இவை மிகவும் துணை புரியும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

பகாங், கிளந்தான், திரெங்கானு போன்ற கிழக்குக் கரை மாநிலங்களில் கடல் பெருக்கெடுப்பால் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான ஒன்றானாலும் கூட, பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்ட சிலாங்கூர் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சில மணி நேரங்களுக்கு இடைவிடாத கனத்த மழை பெய்யும்போது ஏற்படும் திடீர் வெள்ளத்திற்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண்பது அவசியமாகும்.

பருவ மழையால் நாடு முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ள வேளையில், 6 மாநிலங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புற்றதைத் தொடர்ந்து வெள்ளத்தை எதிர்கொள் வதற்கான விவேகமிக்க வரைவுத் திட்டத்தை அரசாங்கம் வரையறுக்க வேண்டும். கடந்த 1971ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிகவும் மோசமான அளவில் ஏற்பட்ட இந்த வெள்ளம் பல மாநிலத்திலுள்ள மக்களை குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதி மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் இதுபோன்ற மோசமான வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் இப்போதே அதனை எதிர்கொள்வதற்கான வியூக திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் நாட்டில் மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கு நேர்த்தியான வரைவுத் திட்டம், ஆறுகளை ஆழமாக்குவது, அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஆற்றிலிருந்து நீர் வழிவதைத் தடுக்கும் வகையில் ஆறுகளுக்கு அருகில் அணைக்கட்டு கட்டுவது, வடிகால் முறைகளை மறுசீரமைப்பு செய்வது, பூமிக்கடியில் நீர்பாசன வழிகளை ஏற்படுத்துவது உட்பட வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் நேர்த்தியான திட்டங்களில் அரசாங்கம் ஈடுபடுவது அவசியமாகும்.

அதேவேளையில், சுனாமி எச்சரிக்கையைப் போன்று வெள்ளம் ஏற்படுவதற்கு முன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளைப் பொருத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட வேண்டும். சுனாமி அபாயம் குறித்து மலேசிய வானிலை ஆய்வுத்துறை அவ்வப்போது முன் அறிவிப்பை வெளியிடும் வேளையில், திடீர் வெள்ளம் குறித்தும் முன் எச்சரிக்கையை விடுப்பதற்கான முயற்சியிலும் இறங்க வேண்டும். அதேவேளையில், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடருக்கு எதிராக மக்களும் விழிப்பு நிலையில் இருப்பது அவசியமாகும். தங்களின் வீடுகளில் வெள்ளம் கொஞ்சமாக ஏறியதும் பாதுகாப்பான இடத்தில் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் மக்கள் இறங்குவது அவசியமாகும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவும் வகையில் நாட்டில் வெள்ள நிவாரணக் குழு அல்லது வெள்ளப் பேரிடர் குழு ஒன்றை அரசாங்கம் அமைப்பது அவசியமாகும். குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படப் போவதாக முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் மேற்குறிப்பிட்ட குழு உடனடியாக களத்தில் இறங்குவதற்கான நடவடிக்கையில் இறங்குவது அவசியமாகும். இதன்வழி மட்டுமே வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவதையும் உயிருடற சேதம் ஏற்படுவதையும் அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியும்!

மாமன்னர் வெள்ளத்தில் இறங்கிய வேளையில் நாட்டின் ,இதர அரசியல் தலைவர்கள் எங்கே? -மக்கள் கேள்வி

 

 

 

 

 

Ž சுனாமி எச்சரிக்கை போன்று வெள்ள அபாய

 

எச்சரிக்கையை அறிமுகப்படுத்த  வேண்டும்!

 

 

 

 

 

Ž வெள்ளத்தை தடுப்பதற்கான

 

விவேக வரைவுத் திட்டம் தேவை

 

 

 

 

 

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img