img
img

எச்.ஆர்.டி கோர்ப் 18 மாதங்களில் பரிணாம வளர்ச்சி
செவ்வாய் 21 டிசம்பர் 2021 16:32:31

img

(ராஜேஸ்வரி கணேசன்)

கோலாலம்பூர், டிச. 19-

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (எச்.ஆர்.டி கோர்ப்) -  பெயர் அளவில் மட்டுமின்றி கொள்கை அளவிலும் அண்மையில் மிகப்பெரிய உருமாற்றத்தைக் கண்ட இந்நிறுவனம் நாட்டின் மனிதவள மேம்பாட்டில் முக்கியமான பங்கினை ஆற்றி வருகிறது. மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இதன் செயல்பாடுகள், குறிப்பாக கடந்த 18 மாதங்களில் மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக விளங்கியது எனக் கூறுகிறார் அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீது டாவுட்.

மலேசிய நண்பனுடனான சிறப்பு நேர்காணலில் தாம் வழிநடத்தும் எச்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்தின் பயணம் குறித்து அவர் விவரித்தார். அதன் விவரங்கள்:   

எச்.ஆர்.டி கோர்ப் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றபோது  அது ஒரு சுமுகமான பயணம் என்று சொல்லிவிட முடியாது.  மிகவும் சிரமமான ஒரு நேரத்தில்தான் நான் இங்கு காலடி எடுத்து வைத்தேன்.  எச்.ஆர்.டி கோர்ப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான போதுமான நேரம் கூட எனக்கு இருந்ததில்லை. அந்த வகையில் கடந்த 18 மாதங்கள் மிகவும் சவாலான ஒரு காலகட்டமாக இது இருந்துள்ளது.

எச்.ஆர்.டி கோர்ப் பற்றி துரிதமாகத் தெரிந்துகொள்ளும் ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அது கோவிட்-19 தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்த ஒரு காலகட்டம் என்பதே இதற்கு முக்கியமான காரணமாகும். மக்கள் எல்லாம் வேலை வாய்ப்புகளை இழந்து, என்ன நடக்குமோ என்பது தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஒரு சூழ்நிலையில்தான் நானும் மற்றவர்களும் இங்கு காலடி எடுத்து வைத்தோம். அந்த நாள் தொடங்கி கடந்த 18 மாதங்கள்  எச்.ஆர்.டி கோர்ப் நிறைய மாற்றங்களைச் சந்தித்தது. ஆனால், இவை வெறும் மாற்றங்களாக இல்லாமல் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற மாற்றங்களாக இருந்தன.

இந்த ஒவ்வொரு மாற்றமும் தவிர்க்க முடியாதவை. இந்த மாற்றங்களை எச்.ஆர்.டி கோர்ப் மட்டும் கையாளத் தவறியிருந்தால் இன்று இந்தத் துறையில் நீடித்திருப்பதற்கான தகுதியையும் அடையாளத்தையும் அது இழந்திருக்கும். மக்களிடம் எதிர்பார்ப்பு என்று ஒன்றிருக்கும்போது அவர்களின் எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அந்தரத்தில் அறுந்துபோன பட்டம் போல நமக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு அறுந்துபோகும். அவர்களைப் பொறுத்த வரையில் நாம்  சம்பந்தம் இல்லாதவர்களாகி விடுவோம்.

எனவே, சரியான நேரத்தில், சரியான மாற்றங்களைச் செய்வது மிகவும் அவசியம். கடந்த 18 மாதங்களில் பெஞ்சானா எச்.ஆர்.டி.எப். கீழ் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நாங்கள் பயிற்சிகளை அளித்திருக்கிறோம். இது எங்களின் முதல் சாதனை.

இரண்டாவதாக, எச்.ஆர்.டி கோர்ப்பின் பயிற்சித் திட்டங்கள். அதுதான் எங்களின் முழுமையான ஈடுபாடு.   அதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். தொழிலாளர்களுக்கான பயிற்சிகளும் அவர்களின் திறம் மேம்பாடும்தான் எங்களின் இலக்கு.  ஆனால், காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் அவசியம் என்பதை நாங்களும் உணர்ந்தோம்.  எச்.ஆர்.டி.எப் (மனிதவள மேம்பாட்டு நிதியகம்) தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1993 இல் இது தோற்றுவிக்கப்பட்டது. இந்த 28 வருட காலப் பயணத்தில் முன்பு அதன் செயல்பாடுகள் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய சூழலுக்கு இது சாத்தியமாகாது.

வெறும் பயிற்சியை மட்டும் கொடுத்து விட்டு, அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டால், அவர்களின் நிலைமை அதன் பிறகு   என்னவாகும் என்பதில் அக்கறை இல்லாவிட்டால் அந்தப் பயிற்சிக்கு அர்த்தம் இல்லாமலும் அதனால் எந்தப் பயனும் இல்லாமலும் போய்விடும்.  

எங்களின் அடிப்படை நோக்கங்களை நாங்கள் மாற்ற வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் இது உணர்த்தியது. பயிற்சி மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தித்தரும் திட்டத்தை வகுத்தோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு  வருமானம் ஈட்டும் வழிகளையும் நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் பெஞ்சானா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.

மற்றொரு திட்டமாக எச்.பி.சி எனும் எச்.ஆர்.டி கோர்ப் வேலை வாய்ப்பு மையம் ஒன்றைத் தொடங்கினோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பையும் தேடிக் கொடுக்கின்றோம். இதுபோன்ற பயிற்சிகளை வழங்குவதில் எங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.  முதல் முக்கியமாக நாடு முழுவதும் 65,000 முதல் 70,000 நிறுவனங்கள் எங்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளன.

அந்நிறுவனங்களின் வருமானம் என்ன, எத்தனை ஊழியர்கள், அவர்களின் சம்பள விவகாரம், எம்மாதிரியான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர் போன்ற எல்லா விவரங்களுமே எங்களுக்குத் தெரியும்.

 

நாடி வருபவர்களை அரவணைப்போம்

எங்களை நாடி வருபவர்கள் பயிற்சி முடிந்ததும் வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன்தான் வருகிறார்கள். பயிற்சி முடிந்தும் அவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அவர்களுக்கும் நன்மை இல்லை, பயிற்சி அளித்த எங்களுக்கும் எந்தப் பயனும் இல்லை.

பயிற்சி பூர்த்தியானதும் ஒன்று அவர்கள் தாங்களாகவே தங்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள வேண்டும். அல்லது ஒருவரிடம் வேலை செய்ய வேண்டும். இவை இரண்டையுமே மிகப்பெரிய கருத்தாக வைத்துதான் கடந்த 18 மாதங்களாக நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். தேவைகள் உள்ளவர்களுக்கு 40,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். எங்களின் வேலை வாய்ப்பு மையத்தின் மூலமாக 6,000 பேர் படித்து முடித்து வேலையும் பார்க்கிறார்கள்.

மூன்றாவது கட்டமாக, இந்த கோவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் நேர்முகப் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு இது மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியது. ஆனால், இதுநாள் வரையில் யார் யார் இணையம் வாயிலான பயிற்சிகளைத் தவிர்த்து வந்தார்களோ அல்லது அது முடியாது என்றார்களோ இன்று அவ்வளவு பேரும் இணையம் வாயிலான பயிற்சியைத்தான் மேற்கொள்கின்றனர்.

இதனால் ஈ-லாத்தே  (e-LATiH)  அல்லது மின்னியல் பயிற்சி என்ற ஒரு பயிற்சித் தளத்தை எச்.ஆர்.டி கோர்ப் உருவாக்கியது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இதனை தொடக்கி வைத்தார்.  இதன் கீழ், அனைத்து மலேசியர்களுக்கும்  இப்பயிற்சியை இலவசமாகக் கொடுத்தோம்.

இன்று சுமார் 500,000 க்கும் மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இணையத் தளத்தில் 400 க்கும் மேற்பட்ட பயிற்சிகள் உள்ளன. பயிற்சியை மேற்கொள்பவர்கள் தங்கள் சொந்த வசதி, நேரத்திற்கு ஏற்ப இதில் கலந்து கொள்ளலாம்.

நான்காவதாக ஸ்கோப் (SCOPE) எனும் திட்டம்.  இது ஒரு பெரிய லட்சியம் என்று சொல்லலாம். காரணம், நாம் வழங்கக்கூடிய இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு  பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் சில்லறை குற்றங்களைப் புரிந்து சிறை சென்றவர்களுக்காக பயிற்சித் திட்டத்தை தொடங்கினோம். இது அவர்களுக்கான ஒரு மறுவாழ்வுத் திட்டமாக அமைந்தது.

இது பற்றி நிறையவே ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். அம்முன்னாள் கைதிகளுக்கு சரியான இலக்கில் பயிற்சிகளை வழங்கி, வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தந்துள்ளோம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வாய்ப்பு என்பது மிகவும் தேவை. அது முதலாவது வாய்ப்பாகவோ இரண்டாவது வாய்ப்பாகவோ இருக்கலாம். தவறு இழைக்கும் அனைவருக்குமே இரண்டாவது முறையாக ஒரு வாய்ப்பை நாம் கொடுக்க வேண்டும்.

 

முன்னாள் கைதிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் (SCOPE)

சிறை சென்ற இவர்கள் எல்லாமே சிறு குற்றவாளிகள். எதற்காக சிறை சென்றோம் என்பது புரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அம்மாதிரி தண்டனை அனுபவித்தவர்களை சிறைச்சாலையில் பேசி , தேர்வு செய்து, பயிற்சிகளைக் கொடுத்து இன்று 1,500 முதல் 4,000 வெள்ளி வரை சம்பளம் பெறும் வேலையில் இருக்கிறார்கள். எங்களின் 18 மாத பயணத்தில் இதுவே ஒரு மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கலாம்.

ஒரு வித மன நிம்மதி, மன திருப்தி ஏற்படுகிறது. காரணம் இவர்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சமே இருந்திருக்காது. ஓர் இருண்ட வாழ்க்கையை அனுபவித்திருப்பார்கள். அவர்களைத் தட்டி எழுப்பி, இந்த சமுதாயத்தில் ஒருவராக அவர்களை தலைநிமிர்ந்து நடக்க வைத்திருக்கிறோம். இதன் கீழ் சுமார் 1,000 பேருக்கு பயிற்சிகளைக் கொடுத்து, இன்று அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எவ்வாறு இவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்? நேரடியாக சிறைச்சாலைக்கு சென்று சில்லறை குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து, பிறகு வெளியானவர்களை அங்கேயே அடையாளம் காண்போம்.

இது எங்களின் தனிப்பட்ட உழைப்பு மட்டுமின்றி  எங்களுடன் தேசிய சிறைச்சாலை வாரியம் மற்றும் பயிற்றுநர்கள் அனைவருக்கும் பங்கு உள்ளது.  இத்திட்டத்திற்காக மேலும் பலரும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கட்டுமானம், பாதுகாவலர், சில்லறை வியாபாரம்,  உட்பட பல்வேறு துறைகளில் இன்று அவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை வேலைக்கமர்த்துவதில் முதலாளிகளின் வரவேற்பு எவ்வாறு உள்ளது? நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது. இன்று 5,000 பேரை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகள் தயாராக இருக்கின்றனர். 1,000 பேருக்கு இதுவரை உதவியிருக்கிறோம். மேலும் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு தயாராக உள்ளன.

அரசாங்கத்தின் அடைவு நிலை அவசியம் (ரிப்போர்ட் கார்டு) பற்றி வினவியபோது, இந்த 18 மாதங்களில் மனிதவள அமைச்சர், மனிதவள அமைச்சு, எச்.ஆர்.டி. கோர்ப் என மூன்றுக்குமே ஒரு சிறப்பான வருடம் என்றே சொல்லலாம். இது வரவேற்கக்கூடிய ஒன்றாகும். முன்பெல்லாம் எச்.ஆர்.டி.எப்.பில் என்ன நடக்கிறது என்பது பலருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால், இன்று எச்.ஆர்.டி. கோர்ப் என மறுஉருவாக்கம் பெற்றுள்ள இந்த அமைப்பு குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இங்கு என்ன நடக்கிறது என்பது எங்களை விட வெளியில் உள்ளவர்களுக்கு அதிகமாகத் தெரியும். அந்த அளவுக்கு நாங்கள் எச்.ஆர்.டி. கோர்ப்பை பிரபலமாக்கியுள்ளோம்.

எங்களின் அணுகுமுறையே இதற்கு காரணம். எங்களை நாடி வருபவர்களை நாங்கள் அலட்சியப்படுத்துவது கிடையாது. எங்கள் அரவணைப்புக்காக வருபவர்களை நாங்கள் எப்போதும் அனுசரித்துப் போகிறோம். அடிப்பவர்களையும் அனுசரித்துப் போகிறோம். எங்களுக்கு எல்லாமே தெரியும் என்று இறுமாப்புடன் இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. எங்களுக்கும் தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ அதை சொன்னால் அந்தத் தேவைகளையும் எங்களால் பூர்த்தி செய்ய முடியும். மக்களுக்கு உதவுவதற்காகத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்.  எச்.ஆர்.டி. கோர்ப் வெறும் பெயரளவிலான ஒரு மாற்றம் கிடையாது.

எச்.ஆர்.டி.எப். என்பது 28 ஆண்டு கால முத்திரை. அதை ஏன் நாங்கள் மாற்ற வேண்டும்? எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சி வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வந்ததும் பழசை நாம் மாற்றித்தான் ஆக வேண்டும். எச்.ஆர்.டி.எப். பில் சில பிரச்சினைகள் இருந்தன. உண்மையான பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றாலும் வெளியில் தோற்றம் அப்படித்தான் இருந்தது. இதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பலவாறாகப் பேசப்பட்டது.

எச்.ஆர்.டி.எப். முத்திரையைக் கூட பலரும் தங்களுக்குச் சாதகமாகப் பலவாறாகப் பயன்படுத்தி வந்தனர். அவர்களால் ஏற்படக்கூடிய ஊழலுக்கும் எங்களுக்கும்  சம்பந்தமே இருக்காது. ஆனால், எங்களை சம்பந்தப்படுத்துவார்கள். முத்திரையை மாற்றுவதே இவற்றிலிருந்து வெளியாவதற்கு ஒரே வழியாக இருந்தது. ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் வெறும் வெளித்தோற்ற மாற்றமாக இல்லாமல் எங்கள் பணியாளர்களின் அணுகுமுறைகள், மனப்போக்கு, செயலாக்கம், கொள்கை என எல்லா நிலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தோம்.  அந்த மாற்றங்களின் உச்சம்தான் எச்.ஆர்.டி. கோர்ப் என்ற பெயர் மாற்றம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சுகாதாரம், பாதுகாப்பு, நிர்வாகம், சந்தை தொடர்பான பயிற்சிகள் நிறைய இருந்தன. இவை பொதுவான பயிற்சிகள்.  ஆனால், கோவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிந்தி பார்த்தால் டிஜிட்டலின் ஆதிக்கம் பரவத் தொடங்கியுள்ளது. தொழில்துறையில் அதன் பயணம் படுவேகமாக உள்ளது. அதன் அடிப்படையில் இன்று இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்று உயரிய தொழில்நுட்பப் பயிற்சிகளைத அதிகாமானவர்கள் விரும்புகிறார்கள்.

எச்.ஆர்.டி. கோர்ப்பில் இன்று கிட்டதட்ட 65,000 நிறுவனங்கள் பதிந்து கொண்டுள்ளன. அவற்றில், சுமார் 10 லட்சம் பணியாளர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். இதுபோன்ற காலகட்டத்தில் அதற்கான மாற்றங்களும் கடுமையாக உள்ளன. இருவிதமான பயிற்சிகளை நாங்கள் வழங்குகின்றோம். முதலாளிகள் எங்களுக்கு மாதச்சந்தா செலுத்துகின்றனர். அந்த சந்தாவில் அவர்களின் பணியாளர்களுக்கே பயிற்சிகளை வழங்குகின்றோம்.

இதற்கு முன்னதாக 3 துறைகள் மட்டுமே சந்தா செலுத்தி வந்தன. சேவைத்துறை, சுரங்கம், தயாரிப்புத் துறைகள் அவையாகும். இவை போக மற்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பயிற்சிகளை வழங்கும் பொருட்டு எச்.ஆர்.டி. கோர்ப்பின் 2001 ஆம் ஆண்டு பி.எஸ்.எம்.பி சட்டம் 2021 மார்ச் முதல் தேதி  திருத்தம் செய்யப்பட்டது. அறிவாற்றல் என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.

2021 மார்ச் மாதம் வரை 33,000 நிறுவனங்கள் மட்டுமே எங்களிடம் பதிவு செய்திருந்தன. இன்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவற்றின் எண்ணிக்கை 2 மடங்காகியுள்ளது. இனிவரும் 4 ஆண்டுகளில் 250,000 நிறுவனங்கள் எங்களுடன் பதிந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. இதன் மூலமாக சுமார் 60 லட்சம் தொழிலாளர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுப்போம். வேலை செய்யக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு என டத்தோ ஷாகுல் ஹமீது டாவுட் மேலும் கூறினார்.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img