கோலாலம்பூர், டிச. 11-
அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலிருந்து பெரும் பகுதியாக மொத்தம் 820 கோடி வெள்ளி மலேசியக் குடும்பங்களுக்கான உதவிக்காக (பந்துவான் கெலுவார்கா மலேசியா) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் இதில் உதவிகள் வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 5,000 வெள்ளிக்கும் குறைவான மாதாந்திர வருமானம் பெறும் சுமார் 96 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 40 லட்சம் பேர் கீழ்க்கண்ட வகையில் உதவிகளைப் பெறுவார்கள்:
* அவர்களின் மாத வருமானம் 2,500 வெள்ளிக்கும் குறைவாக இருந்து, பிள்ளைகள் எவரும் இல்லை என்றால் உதவித்தொகையாக 1,000 வெள்ளி பெறுவார்கள்;
* இரு பிள்ளைகள் வரை இருந்தால் 1,500 வெள்ளி வரையில் வழங்கப்படும்;
* மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் 2,000 வெள்ளி வழங்கப்படும்;
* மாதம் ஒன்றுக்கு 2,501 முதல் 5,000 வெள்ளி வரைக்குமான வருமானம் பெறுபவர்கள் பிள்ளைகள் இல்லையென்றால் 400 வெள்ளியும், இரு பிள்ளைகள் வரை 600 வெள்ளியும், மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் 800 வெள்ளியும் பெறுவார்கள்.
தகுதியுள்ள தனித்து வாழும் தாய் அல்லது தந்தைக்கும் கூட உதவிகள் வழங்கப்படும். பிள்ளைகள் உள்ள சுமார் 500,000 தனித்து வாழும் தாய் அல்லது தந்தையர்கள் இதன் வழி பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நிலவரம் கீழ்வருமாறு:
* மூன்று பிள்ளைகள் இருந்து, அதே சமயம் மாதம் ஒன்றுக்கு 2,500 வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெறும் தனித்து வாழும் தாய்/தந்தைக்கு ரொக்க உதவியாக 2,500 வெள்ளி வழங்கப்படும்;
* ஜாமின்கெர்ஜா (வேலை உத்தரவாதம்) என்ற திட்டத்தின் கீழ் தனித்து வாழும் தாய்மார்கள் கூடுதல் உதவிகளைப் பெறுவார்கள். பாரம்பரிய வேலை நேரமாக இல்லாமல் பெண்களுக்கு அவர்களின் வசதிக்கு ஏற்ற வேலை நேரத்தை வழங்குவதன் அடிப்படையில் தனித்து வாழும் தாய்மார்கள், வேலையில்லாத பெண்கள், இல்லத்தரசிகள் மற்றும் மொத்தமாக பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முதலாளிகளுக்கு சம்பள உதவித்தொகை ரூபத்தில் இச்சலுகை வழங்கப்படும்.
இப்பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு முதலாளிகள் வேலை வாய்ப்பை வழங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளத்தில் 30 விழுக்காட்டையும் அடுத்த ஆறு மாதங்களுக்கு 40 விழுக்காட்டையும் உதவித் தொகையாக அரசாங்கம் வழங்கும். கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக வேலை இழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது.
மொத்தத்தில், 480 கோடி வெள்ளி செலவிலான ஜாமின்கெர்ஜா திட்டத்தின் வாயிலாக சுமார் 600,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 220,000 பேருக்கான தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாகவும் மைஸ்டெப் எனும் மலேசிய குறுகிய கால வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழும் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் குறைந்தது ஒரு பெண்ணையாவது தங்கள் நிறுவனத்தில் இயக்குநராக கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. மேலும்:
* பி.எஸ்.என்., அக்ரோ வங்கி, டானானித்தா (மாரா), தெக்குனித்தா (தெக்குன்) திட்டங்களின் வாயிலாக பெண் தொழில் முனைவர்களுக்கு 23 கோடி வெள்ளி செலவிடப்படும்.
* சுமார் 5,000 பேருக்கு இணையம் வாயிலான வணிகத்தை ஊக்குவிப்பதற்காக உதவிகள், வழிகாட்டிகள், பயிற்சிகளை வழங்குவதற்காக மைகாசே மூலதன திட்டத்திற்கு 62 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வேலை செய்யும் தாய்மார்களுக்கு உதவுவதற்காக அரசாங்க பணியிடங்கள், குறிப்பாக பொது மருத்துவமனைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்காக 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வசதிக்கேற்ப வேலை நேரத்தை அமைத்துக்கொள்ளும் சலுகைகளையும் அரசாங்கம் ஊக்குவிக்கின்றது.
* குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், பாலர் பள்ளிகளுக்கான கட்டணங்களுக்கு 3,000 வெள்ளி வரை தனிநபர் வருமான வரி விலக்கு வழங்கும் சலுகையை அரசாங்கம் 2023 வரை நீட்டித்துள்ளது.
* பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, போலீஸ் துறையின் பாலியல், மகளிர், சிறார் புலன் விசாரணை பிரிவுக்கு 1 கோடியே 30 லட்சம் வெள்ளி அதிகமாக வழங்கப்படும். இப்படைப் பிரிவை வலுப்படுத்தும் வகையில் 100 புதிய நியமனங்களுக்கு இது வகை செய்யும்.
* பெண்களுக்கு அதிகமான சிறப்பு தங்குமிடங்களை நிர்மாணிப்பதற்காக கூடுதலாக 1 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும்.
* பி40 பிரிவைச் சேர்ந்த சுமார் 130,000 பதின்ம வயது பெண்களுக்கு அடிப்படை சுகாதாரத்திற்குத் தேவையான உதவிகள் நல்கப்படும்.
* குடும்ப வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு ஆதரவளிக்கும் மையங்களுக்கு 45 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படும்.
* மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகளுக்கான உதவி நிதியாக 1 கோடியே 15 லட்சம் வெள்ளியை அரசாங்கம் செலவிடும்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மலேசியக் குடும்பம் என்ற அடிப்படையில் மகளிருக்கு குறிப்பாக சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்