img
img

நிலையான தொழிலுக்கு கைகொடுக்கும் தொழில் திறன் பயிற்சிகள்
வெள்ளி 20 ஆகஸ்ட் 2021 13:19:00

img

 

கோலாலம்பூர், ஆக. 14-

 

தொழில்நுட்ப மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகளுக்கு நாட்டில் முக்கியத்துவம் செலுத்தப்படும் நிலையில், ஒவ்வொரு மாணவரும் எதிர்காலத்தில் தாங்கள் ஈடுபட நினைக்கும் தொழில்துறைக்குத் தங்களை தயார் செய்வதற்கு இப்பயிற்சிகள் வகை செய்கின்றன.

 

பள்ளிகளில் மாணவர்கள் பெறும் கல்வியுடன் பல்வேறு துறைகளில் தொழில் தொடர்பான  தொழில்நுட்பம், அறிவியல், திறன் பயிற்சி, அணுகுமுறை, புரிந்துணர்வு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை பெறுவதற்கு இந்த தொழில் பயிற்சிகள் பேருதவியாக இருக்கின்றன என்று யுனெஸ்கோ கூறியிருக்கிறது. மலேசியாவில் இத்தொழில் திறன் பயிற்சிகள் மிகவும் பரந்த ஒரு துறையாகும். இதனை மூன்று (3) பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று,  வேலைக்கு முந்தைய தொழில் பயிற்சியாகும். வேலை செய்யும் சூழலுக்குள் நுழைவதற்கு முன்னதாக தகுதியையும் திறனையும் பெறுவதற்கு இது மாணவர்களைத் தயார் செய்கிறது.

 

இரண்டாவது, பணியில் ஈடுபட்டிருக்கு  சமயத்திலான தொழில் திறன் பயிற்சியாகும். மறு-பயிற்சி மற்றும் திறன் மேம்படுதல் ஆகிய இரு கட்டங்களில் இது மேற்கொள்ளப்படும். மூன்றாவதாக, இலக்கிடப்பட்ட ஒரு குழுவிற்காக திறன் பயிற்சியை திட்டமிடுவதுடன் வாழ்நாள் கல்வியை மேற்கொள்வது. இது சம்பந்தபட்டவர்களின் திறனையும் வருமானத்தையும் அதிகரிக்க உதவும். தொழில், சமூகம், அரசாங்க நிறுவனம், சட்ட ரீதியிலான அமைப்பு மற்றும்  அரசு சார்பு நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இப்பிரிவில் அடங்குவர். இத்தொழில் திறன் பயிற்சிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம் என உயர் கல்வி துணை அமைச்சர் டத்தோ மன்சோர் ஹாஜி ஒஸ்மான் கூறுகிறார்.

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப எட்டாவது (8) மலேசியத் திட்டத்தில் தொடங்கி இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில் திறன் பயிற்சிக்கழகங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. ஆசியான் நாடுகளுக்கு இடையே ஒப்பிடுகையில் நம் நாட்டின் பொருளாதார போட்டித்தன்மை பணியாளர்களின் திறனையே அதிகம் சார்ந்துள்ளன. குறிப்பாக டிஜிட்டல் சகாப்தத்தில் இளைஞர் அணியே இதனை வழிநடத்துகின்றது என துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

 

தொழில் திறன் பயிற்சிகளை நிறைவு செய்யும் பட்டதாரிகளின் விகிதாச்சாரமும் மிகவும் சிறப்பாக உள்ளது. 2017 முதல் 2019 வரையில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு இலக்கிடப்பட்ட அளவை விட இது அதிகரித்துள்ளது. இது 90 விழுக்காட்டிற்கும் மேலாகும். தொழில் துறைகளைச் சார்ந்தவர்களுடன் பல்வேறு வியூகங்களை அமல்படுத்துவதன் வாயிலாக இந்த வெற்றியை அடைய முடிந்தது.கட்டமைக்கப்பட்ட கல்வி கால பயிற்சி, மறு பயிற்சி, மேம்படுத்தப்பட்ட பயிற்சி, பன்முனை பயிற்சிகள், பள்ளி முடிதல் என அவ்வியூகங்கள் வகை பிரிக்கப்பட்டுள்ளன என்று டத்தோ மன்சோர் மேலும் கூறினார்.

 

நேற்று, இன்று, இனி எதிர்காலத்திற்கும் உகந்த ஒன்றாக இத்தொழில்திறன் பயிற்சிகள் விளங்குவதை உறுதி செய்வதற்கு இதன் முக்கிய நீரோட்டத்தில் எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவை அதிகாரம் பெற்றதும் தங்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான ஒரு வழியாக அதிகமான இளைஞர்களை இது ஈர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

வேலை மட்டுமின்றி, தொழில் முனைவர் துறையிலும் அவர்கள் காலடி வைக்கலாம். இதன் அடிப்படையில், இத்தொழில் திறன் பயிற்சிகள் ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்ட உதவுவது மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிக்கும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றது என்றார் அவர். இதுவரை சாதித்துள்ள, தொழில் திறன் பயிற்சிகளைப் பெற்ற பட்டதாரிகளை எடுத்துக்கொண்டால், ஜே.வி. ஆட்டோலூப் செண்டிரியான் பெர்ஹாட்டின் நிறுவனத்தின் உரிமையாளரும் பக்கார்கியர்பாக்ஸ்.காம் நிறுவனருமான முகமட் சைடி முகமட் சுவாடி என்பவரைக் குறிப்பிடலாம்.

 

இப்பயிற்சிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதே புத்தாக்கம்தான்.  ஏதாவது புதிதாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மனதில் பிறப்பதை கை பார்த்து செய்து முடிப்பதே இதன் வெற்றிக்கு அடையாளம். மனதிலிருந்து எழுந்து, சிந்தனையில் உருவாகி, கைகளால் செய்து முடிப்பதே அதன் மூன்று கூறுகளாகும். மலேசியாவில் வாகன தொழில்துறை நாளுக்கு நாள் செழிப்படைந்து வருகிறது. உலகமே கோவிட்-19 தொற்றுப் பரவலில் சிக்கியிருக்கும் போதிலும் இத்தொழில்துறையில் போட்டி நிலவவே செய்கிறது.

 

சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையை பார்க்கும்போதும், பணியிடங்களுக்குச் செல்வது போன்ற மக்களின் அன்றாட தேவைகளுக்கு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதும் அவ்வப்போது பராமரிப்பும் அவசியமாகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. வாகன ஓட்டுநர் மற்றும் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன பராமரிப்பு பணிகள் மிகவும் அவசியமாகும். வாகனங்களில் பயணிக்கும் போது சுமுகமான பயணத்திற்கும் இது அத்தியாவசியமாகிறது என்று முகமட் சாய்டி முகமட் சுவாடி சுட்டிக்காட்டுகிறார்.

 

காஜாங் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும்போது அவர் வாகன தொழில்துறையில் முறையாகக் கல்வி கற்றார். அதன் பிறகு, உங்கு ஒமார் போலிடெக்னிக் கல்லூரியில் இயந்திர பொறியியல் துறையில் சான்றிதழ் பெற்றார். இதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து ஷா ஆலம் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா கல்வியை மேற்கொண்டார். மேலும், வெப்பர் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் ஜோன் கெலியுடன் இணையம் வாயிலாக ஆட்டோமோட்டிவ் டிரான்ஸ்மிஷன் துறையில் தமது கல்வியைத் தொடர்ந்தார்.

 

வாகன தொழில்துறையில் இவருக்குள்ள ஆர்வம் சொந்தமாக ஒரு பட்டறையைத் திறக்க இவரை ஊக்குவித்தது. கடந்த 10 ஆண்டுகளாக இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவராக இவர் திகழ்கிறார். தொழில் திறன் பயிற்சியில் இதுவும் மிகவும் முக்கியமான ஒரு துறையாக விளங்கி வருகிறது.

 

வாகன தொழில்நுட்பம், வாகன பட்டறை பயிற்சி, இயந்திர பராமரிப்பு பட்டறை, மொபைல் ஹைட்ரோலிக், தரக் கட்டுப்பாடு ஆகியன இங்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் அடங்கும். ஷா ஆலம், செக்ஷன் 7, புக்கிட் ராஜா தொழிற்பேட்டை பகுதியில் ஜே.வி. ஆட்டோலூப் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தையும் முகமட் சாய்டி நிர்வகித்து வருகின்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது. தொழில் திறன் படைத்த மொத்தம் 30 பணியாளர்களை இவர் அமர்த்தியுள்ளார்.

 

வாகன இயந்திரங்களுக்குத் தேவையான எண்ணெய் தயாரிப்பிலும் ஜே.வி.ஆட்டோலூப் செண்டிரியான் பெர்ஹாட் ஈடுபட்டு வருகிறது. ஜேவிஆட்டோலூப் என்ற முத்திரையின் கீழ் இவை விற்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 மாதிரியான பொருட்கள் சந்தையில் உள்ளன. JV Transmission Treatment, JV Engine Treatment, JV Engine Carbon Cleaner, JV Fuel Injector Treatment, JV Autolube Synthetic  ஆகியன அவற்றுள் அடங்கும்.

 

நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் JV  Autolube Trans mission Treatment தற்போது சந்தையில் மிகவும் விறுவிறுப்பாக விற்பனையாகும் பொருளாக கருதப்படுகிறது. வாகனத்தின் கியர் பெட்டியில் உள்ள ரப்பரை மீண்டும்  சுமுகமாக இயங்க வைக்க இது உதவுகிறது. இப்பொருளுக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

2019 ஆசிய ஆட்டோமோட்டிவ் விருது, 2019 சிறந்த முத்திரை விருது ஆகியன அவற்றுள் அடங்கும். அதற்கடுத்த ஆண்டில் உலகிற்காக தயாரிக்கப்பட்டது என்ற பிரிவில் 2020 சிறந்த விருதை இந்நிறுவனம் பெற்றது. இந்த தயாரிப்பின் தரத்தை உறுதி செய்வதற்காக விற்பனைக்கு வரும் முன்னதாக மூன்று ஆண்டுகள் இது ஆய்வுக்கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த 5 ஆண்டுகளில் சந்தையில் பயனீட்டாளர்கள் மத்தியில் இது அபார வரவேற்பை பெற்று வருகிறது. தனது தொழில்திறன் பயிற்சிகளை முகமட் சாய்டி சிறப்பான, பயனுள்ள வகையில் பயன்படுத்தியுள்ளார் என்பதை இது காட்டுகிறது. இந்நிறுவனம் இதுவரை 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு இத்துறையில் பயிற்சிகளை வழங்கியுள்ளது. 

 

தமது சவால்கள் குறித்து இவரிடம் கேட்கப்பட்டபோது, தொழிலில் நாம் ஒரு கட்டத்தை அடைவதற்கு முன்னதாக ஏற்றத் தாழ்வுகளும் சவால்களும் நிச்சயமாக இருக்கும். நடவடிக்கை மற்றும் உபரி பாகங்களின்  செலவினங்களின் அதிகரிப்பு ஒரு காலத்தில் தொழிலை மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், எனினும், அதனையும் எதிர்கொண்டு, இன்று வரையில் தம்மால் நிலைத்திருக்க முடிகிறது என்றும் அவர் சொன்னார்.                

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img