வெள்ளி 30, அக்டோபர் 2020  
img
img

நிறுவனங்கள் மீட்சி பெற உதவும் வங்கிகள் வழியான சிறப்பு நிவாரண நிதி
ஞாயிறு 05 ஜூலை 2020 13:29:50

img

கோலாலம்பூர், ஜூலை 5-

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டின் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பெஞ்சானா எஸ்.எம்.இ. நிதியுதவி (Penjana SME Financing) திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. வங்கிகளின் பங்களிப்பைக் கொண்ட இத்திட்டத்திற்காக, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள ஆறு மாத கால அவகாசம் மட்டுமின்றி, எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக 200 கோடி வெள்ளி ஒதுக்கீட்டையும் வங்கிகள் செய்துள்ளன.

 

எஸ்.எம்.இ. நிறுவனங்கள் தொடர்ந்து நிலைத்திருக்க உதவும் பொருட்டு 3.5% என்ற வட்டி விகிதாச்சாரத்தில் கூடுதலாக 200 கோடி வெள்ளியை வங்கிகள் வழங்கும் என பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது எஸ்.எம்.இ. சிறப்பு நிவாரண நிதியாகும். ஒவ்வோர் எஸ்.எம்.இ. நிறுவனத்திற்கும் தலா 500,000 வெள்ளி வரையில் அதிகபட்சம் கடனுதவி வழங்குவதே இந்த நிதியுதவித் திட்டத்தின் நோக்கமாகும். உள்நாட்டில் பல்வேறு வங்கிகள் இச்சலுகையை வழங்குகின்றன. அந்த வகையில்,  நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஆர்.எச்.பி. வங்கி மூலமாக இந்த நிதியுதவியைப் பெற்றுள்ள நிறுவன உரிமையாளர்கள் சிலரின் கருத்துகளை கேட்டறிந்துள்ளோம்.

 

நாட்டின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பு அளப்பரியது. கடந்த மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடு அமலாக்கம் கண்டபோது எஸ்.எம்.இ. நிறுவனங்களும் தங்கள் தொழில் நடவடிக்கைகளை சிறிது காலம் நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்ட இந்நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு வங்கி மூலமாக அரசாங்கம் வழங்கியுள்ள நிதி உதவிகள் பேருதவியாக இருந்தன என்று அந்நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

காக்கிதாங்கான் டாட் காம் (kakitangan.com)எனும் இணைய அகப்பக்கத்தை தோற்றுவித்த எஃபொன் கூ கியோக் (Effon Khoo Giok Hong) மலேசிய நண்பனுடனான நேர்காணலில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மனித வளம் தொடர்பான சேவைகளை எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வழங்குவது இந்நிறுவனத்தின் பிரதான பணியாகும். அரசாங்கத்தின் சிறப்பு நிவாரண நிதியை ஆர்.எச்.பி. வங்கியின் மூலமாக தாங்கள் பெற்றதாகக் கூறுகிறார் கோஸ்ட்டல் ஹெக்டர் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தைச் சேர்ந்த எஃபொன் கூ.  காக்கிதாங்கான் டாட் கொம் என்ற மென்பொருளை எங்கள் நிறுவனம் தயாரித்துள்ளது. மலேசியாவில் உள்ள எஸ்.எம்.இ. நிறுவனங்களை ஆய்வு செய்வது தொடர்பானது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணியாளர்கள் விடுமுறைக்காக விண்ணப்பம் செய்வது, இழப்பீடுகள் பெறுவது தொடர்பான சேவைகள் இதில் அடங்கும். முக்கியமாக, சம்பள பட்டியலை தயார் செய்வது இதில் உள்ளடங்கும். சம்பள மென்பொருள் இதில் பிரதானமானது. மலேசியாவில் ஆயிரக்கணக்கான எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு எங்களின் சேவைகள் சென்றடைகின்றன.

 

நடமாட்டக் கட்டுப்பாடு அமலாக்கத்தில் இருந்த போது எங்கள் வாடிக்கையாளர்கள் பலரும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கினர். சிலர் சம்பளக் குறைப்பைச் செய்தனர், சிலர் நிறுவனங்களை மூட வேண்டிய சிரமமான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு எங்கள் நிறுவனம் வாயிலாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம். இதன் காரணமாக இவ்வாண்டு மட்டும் எங்கள் நிறுவனத்திற்குச் சேர வேண்டிய மூன்று மாதங்களுக்கான வருமானத்தை நாங்கள் தள்ளுபடி செய்ய வேண்டியிருந்தது.

 

இந்த வேளையில் அரசாங்கத்தின் சிறப்பு நிவாரண நிதி எங்களுக்கு கிடைப்பதில் உதவிய ஆர்.எச்.பி. வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்நிதிக்காக விண்ணப்பம் செய்து, அதை முறையாக செயல்படுத்துவதில் அவ்வங்கிப் பணியாளர்கள் உதவிகளைச் செய்துள்ளனர். தற்போது நாங்கள் மீண்டும் எங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள முடிகிறது என எஃபொன் கூ மேலும் கூறினார். இந்நிறுவனம் தற்போது 25 பணியாளர்களைக் கொண்டுள்ளது. பிரிஹாத்தின் கீழ் இந்த பணியாளர்களுக்கு சம்பள உதவித் திட்டத்திற்கு தாம் விண்ணப்பம் செய்ததாகவும் அவர் சொன்னார். அரசாங்கத்தின் சிறப்பு நிவாரண திட்டம் மற்றும் பிரிஹாத்தின் வாயிலாக இவரின் நிறுவனம் நிதி உதவிகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

  டிரெவல் படி ஹொலிடேய்ஸ் நிறுவனம் அரசாங்கத்தின் சிறப்பு நிவாரண நிதியின் கீழ் நன்மைகளைப் பெற்ற மற்றொரு நிறுவனம் டிரெவல் படி ஹொலிடேய்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் ஆகும். இதன் இயக்குநர் பரமேஸ்வரி கிருஷ்ணன் தனது நிறுவனம் எவ்வாறு மீட்சிப்பெறுகிறது என்பதை விளக்குகிறார்.  நாட்டில் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கிய நிறுவனங்கள் சுற்றுலா சம்பந்தப்பட்டவை என்றால் மிகையாகாது. எங்கள் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக சுற்றுலா துறையில் ஈடுபட்டு வருகிறது. நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்குவதற்கு முன்னதாக எங்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முட்டுக்கட்டை நிலையை அடைந்தது. அதன் பிறகு, உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 

நிறைய வகையில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். எங்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பித்த நிலையில் மாற்று வழி என்ன, எப்படி இதிலிருந்து மீள்வது, செலவுகளைக் குறைத்து எவ்வாறு சமாளிப்பது என்பன போன்ற கேள்விகள்தான் தொக்கி நின்றன. அப்போதுதான் அரசாங்கம் அதன் முதலாவது பொருளாதார மீட்சித் திட்டத்தை அறிவித்திருந்தது. உடனே ஆர்.எச்.பி. வங்கியின் வாயிலாக அத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தோம். ஆர்.எச்.பி. வங்கி எங்களுக்கு அதிகமான உதவிகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் அதிகாரிகள் நேரடியாக எங்கள் அலுவலகத்திற்கு வந்து இந்த சிறப்பு நிவாரண உதவித்திட்டம் பற்றி விளக்கம் அளித்து, பாரங்களை பூர்த்தி செய்வது முதல் அனைத்து உதவிகளையும் நல்கினர். ஒரே மாதத்தில் உதவியும் கிடைத்தது என பரமேஸ்வரி கூறினார். எங்கள் நிறுவனம் மொத்தம் 25 பணியாளர்களைக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் 5 விற்பனை முகவர்களை வைத்திருக்கிறோம். அங்கும் அலுவலகங்கள் உள்ளன. மலேசியாவில் மொத்தமாக 20 பணியாளர்கள் உள்ளனர்.

 

மொத்தம் 18 பேர் அமரக்கூடிய வேன்கள் உட்பட 8 வேன்கள், 44 பேர் அமரக்கூடிய பஸ் வசதிகள் எங்களிடம் உள்ளன. நாடு முழுவதும் மிகச் சிறந்த சலுகைகளுடன்  சுற்றுலா திட்டங்களை வெளிநாட்டினருக்கும் உள்நாட்டினருக்கும் வழங்கி வருகிறோம். பல்வேறு சுற்றுலா தலங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை மொத்தமாக வாங்கி அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இந்த இழப்புகளை எவ்வாறு ஈடு செய்வது? எங்கள் பணியாளர்களை எப்படி தக்க வைப்பது என்பதையெல்லாம் யோசிக்க வேண்டியிருந்தது.

அரசாங்கம் கொடுக்கும் சம்பள உதவித் திட்டம் வாயிலாக பணியாளர்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து விட்டு அவர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று. எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தேவையில்லாத செலவுகளையும் குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடன்களை திருப்பிச் செலுத்துவதில் வங்கிகள் ஆறு மாதம் அவகாசம் வழங்கின. அந்த வகையில் இரண்டு வேன்களைப் பற்றி கவலை இல்லாமல் போனது.

 

ஆனால், மற்ற வாகனங்கள் அனைத்தும் நிதி நிறுவனங்களின் பிடியில் இருந்தன. எங்களுக்கு வழங்கப்பட்டதோ நான்கு மாத அவகாசம், கூடுதல் வட்டி. எப்படி சமாளிப்பது? அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பரமேஸ்வரி வலியுறுத்தினார். அரசாங்கத்தின் இரண்டாவது பொருளாதார மீட்சித் திட்டத்தில் பணியாளர்களை மீண்டும் வேலைக்கமர்த்தும் ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், 5 டிரைவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்து சொக்சோவில் அவர்களுக்கான சம்பளத்திற்காக விண்ணப்பம் செய்து, விரைவு அஞ்சல் (கூரியர்) சேவைகளைத் தொடங்கினேன். தற்போது உள்ளூர் சுற்றுப்பயணங்களுக்காக சிறப்பான சலுகைகளைத் தாங்கள் அறிமுகம் செய்திருப்பதாக அவர் சொன்னார்.

இதர பல்வேறு நிகழ்ச்சிகளையும் இவரின் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரிஹாத்தின், பெஞ்சானா ரூபத்தில் அரசாங்கம் வழங்கும் உதவிகளுக்கு இவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
எளிமையான வழிகள் பெஞ்சானா வேலைக்கமர்த்தும் சலுகைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு

எளிமையான வழிகள் பெஞ்சானா வேலைக்கமர்த்தும் சலுகைகளுக்கு விண்ணப்பம்

மேலும்
img
டிஜி பிஸ்னஸ் திட்டம் 40% வரை வர்த்தக வளர்ச்சிக்கு உதவுகிறது

சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து வகையான வணிகங்களுக்கும்

மேலும்
img
எஸ்எஸ்பிஎன் மலேசியர்களுக்கான மிகச் சிறந்த கல்வி சேமிப்புத் திட்டம்!

எஸ்எஸ்பிஎன் மலேசியர்களுக்கான மிகச் சிறந்த கல்வி சேமிப்புத் திட்டம்

மேலும்
img
16 ஆவது LAKSANA அறிக்கை

பந்துவான் சாரா ஹீடுப் (ஆகுஏ) திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறும் அங்கீகாரம்

மேலும்
img
பிரிஹாத்தின் பெஞ்சானா

கோவிட்-19 தொற்று உலக நாடுகளை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. எனினும்,

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img