img
img

பெஞ்சானா திட்டங்கள்! மக்கள் வாட்டத்தை போக்கிய மகத்தான உதவித் திட்டம்
புதன் 01 ஜூலை 2020 13:22:25

img

 

பெஞ்சானா திட்டங்கள்! 

மக்கள் வாட்டத்தை போக்கிய மகத்தான உதவித் திட்டம்

 

பெஞ்சானாவின் 4 நோக்கம்

1.   வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதுடன் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது.

2.   மக்கள் ரொக்கத் தொகையுடன் செலவுகளை மேற்கொள்வதுடன் அவர்களின் வாங்கும் சக்தியையும் அதிகரிப்பது

3.   புதிய சூழ்நிலையில் டிஜிட்டல் பயனீட்டை அதிகரிப்பது

4.   முதலீட்டாளர்கள், பயனீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது

 

 கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் உலகமே நிலை குலைந்து போன நிலையில் மலேசிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தேசிய கூட்டணி அரசு பல புதிய திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தது.

 

குறிப்பாக பெஞ்சானா எனப்படும் தேசிய பொருளாதார மறுமலர்ச்சி நிதித் திட்டம் மக்களை தவிர்த்து சிறுதொழில் வணிகர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் பயனை அளித்துள்ளது. இத்திட்டங்கள் மலேசியர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது உட்பட பல கேள்விகளுக்கு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நேற்று விளக்கமளித்தார். அவை பின்வருமாறு:-

 

 

கேள்வி 1. பெஞ்சானா எனும் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அண்மையில் அறிவித்திருந்தார். கோவிட்-19 தாக்கத்தால் பாதிப்படைந்த வர்த்தகர்கள், தொழில் துறைகளுக்கு இந்த பெஞ்சானா திட்டம் எவ்வாறு உதவுகிறது?

 

பதில்: சொக்சோ

கோவிட்-19 தொற்றின் தாக்கத்தின் போது தொழில்துறைகள் பெரிதும் பாதிப்படைந்தன. இதனால் பலர் வேலையிழக்க நேரிட்டது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மனிதவள அமைச்சின் கீழ் சம்பள உதவித் தொகை திட்டத்தை (பெஞ்சானா கெர்ஜாயா) அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதே வேளையில் சொக்சோவின் வாயிலாக தகுதியுள்ள மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்து வருகிறது. அந்நியத் தொழிலாளர்களுக்குப் பதிலாக அத்துறைகளில் வேலை செய்ய மலேசியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு சில தொழில்துறைகளில் வேலை செய்வதற்கு மலேசியர்களுக்கு அனுபவம் இல்லாமல் உள்ளது. இருந்த போதிலும் அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்களும் அத்துறையில் அனுபவம் பெற்றவர்களாக உருவாகின்றனர். அதே வேளையில் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

 

சம்பள உதவித் தொகை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. வேலையாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் மலேசியர்கள் யாரும் வேலையை இழக்க வேண்டியது இல்லை. அதே வேளையில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் மறுமலர்ச்சி பெறுவதற்கு இந்த உதவித் திட்டம் பேருதவியாக உள்ளது.

 

 கேள்வி 2 - வேலைக்கு உத்தர வாதம் எவ்வாறு வழங்கப்படுகிறது. இதற்கு அரசுத் திட்டங்கள் எவ்வாறு உதவுகிறது?

 

 பதில் - சொக்சோ

 

பணியமர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1.5 பில்லியன் வெள்ளி மானியத்தின் வாயிலாக 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் வாயிலாக பணியாளர்களுக்கு குறைந்தது ஓராண்டு ஒப்பந்தத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதே வேளையில் நிறுவனங்களுக்கு ஒரு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இரு தரப்பினரும் பயன் பெறுகின்றனர்.

 

கடந்த ஜூன் 15ஆம் தேதி இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சொக்சோவின் www.myfuturejobs.gov.my எனும் அகப்பக்கத்தில் அடுத்த 10 நாட்களில் 3 ஆயிரம் பேர் வேலைக்காக விண்ணப்பம் செய்தனர். குறைந்தது 2,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று பெஞ்சானா கெர்ஜாயா திட்டம் முழுமையாக அமலுக்கு வருகிறது. அதன் பின் இன்னும் வேலை வாய்ப்புகள் மலேசியர்களை தேடி வரும்.

கேள்வி 3 - தொழிலாளர்களின் சம்பளத்தில் இபிஎப், சொக்சோ பிடித்தம் செய்யப்படுகிறது. இதுபோன்ற காலகட்டத்தில் அவ்விரு நிறுவனங்களும் மக்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?

 

 பதில் – சொக்சோ பெஞ்சானா கெர்ஜாயா எனப்படும் பணியமர்த்துதல் திட்டம் சொக்சோவின் முயற்சியில் தொடங்கப்பட்ட திட்டமாகும். சொக்சோ மனிதவள அமைச்சின் கீழ் செயல்படுகிறது. சொக்சோவில் பதிவு செய்திருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை சொக்சோ வழங்கி வருகிறது. வேலையிடங்களில் காயமடையும் தொழிலாளர்களுக்கு, தொழில் துறைகள் சார்ந்த இழப்புகளை எதிர்நோக்கும் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகளை சொக்சோ வழங்கி வருகிறது. தற்போது வேலை வாய்ப்புகளை அந்நிறுவனம் மலேசியர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது.

 

 கேள்வி 4 - சிறுதொழில் வணிகர்கள் பொருளாதார மறுமலர்ச்சி பெற பெஞ்சானா திட்டம் எவ்வாறு உதவுகிறது?

 

 பதில் - சொக்சோ

 

பெஞ்சானாவின் கீழ் 40 திட்டங்கள் உள்ளன. கோவிட்-19 தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்கள், சிறு வணிகர்கள் என அனைவரும் மீட்சி பெறுவதற்கு இத்திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கும். இந்த 40 திட்டங்களும் மனிதவள அமைச்சின் கீழ் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சம்பள உதவித் தொகை, தேசிய வேலை வாய்ப்பு அகப்பக்கம், பணியமர்த்துதல் திட்டம் ஆகியவை அடங்கும். சம்பள உதவித் தொகை திட்டம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் சம்பள இழப்பில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். மேலும் நிறுவனங்கள் எந்தவொரு பண நெருக்கடியையும் எதிர்நோக்காமல் தங்களின் தொழில் துறைகளை கவனிக்கலாம். குறைந்த பட்ச தொழிலாளர்களை கொண்டிருக்கும் சிறுதொழில் வணிகர்களும் இதில் பயன டைவார்கள்.

 கேள்வி 5 -  பொது நடமாட்டத் தடையின்போது  பல வர்த்தகங்கள்  பாதிக்கப்பட்டன தற்போது மீட்சியை நோக்கி  அவை செல்கின்றன. பெஞ்சானாவின் மூலம் பயனடையும்  துறைகள் யாவை? உதாரணம்: சுற்றுலாத் துறை, கட்டுமானத்துறை உட்பட பல துறைகள்.

 

 பதில் - சொக்சோ

 

பொதுவாக  கோவிட்-19 பெருந்தொற்றினால்  மோசமாக பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகள் பெஞ்சானா உதவித்  திட்டத்தின் மூலம் பயன்பெற்றன. மலேசிய மனித வள அமைச்சின் கீழ் அமலாக்கப்பட்ட திட்டங்களும் இதில் அடங்கும். உதாரணமாக,  பெஞ்சானா திட்டத்திற்கு  முன்பாக அறிவிக்கப்பட்ட  பொருளாதார மீட்சித் திட்டத்தின் கீழ்  ஊழியர்களை நிலை நிறுத்தும் திட்டம் (இஆர்பி) மற்றும் சம்பள உதவித் திட்டம் ஆகியன பெஞ்சானா திட்டத்திலும் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

 பெஞ்சானாவின் முக்கிய 3 இலக்குகள்

 

1.   மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது

2.   வணிக ஆற்றலைத் தூண்டுவது

3.   பொருளாதாரத்தை மேம்படுத்துவது

 

 எச்ஆர்டிஎப்

 

பெஞ்சானா எச்ஆர்டிஎப் வாயிலாக சிறு தொழில் வணிகர்களுக்கு பயிற்சித் திட்டங்களுடன் இதர உதவிகளும் வழங்கப்படுகின்றன. இதற்கும் சிறுதொழில் வணிகர்கள் விண்ணப்பம் செய்யலாம். தங்களின் தொழில் திறனை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் உரிய பயிற்சிகளை பெறலாம். அதே வேளையில் தங்களின் வேலையாட்களுக்கு அந்த பயிற்சிகளை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் வெளியில் நடமாடும் கட்டுப்பாட்டு விதிகள் நிறைவடைந்த பின் விண்ணப்பங்கள் வாயிலாக அப்பயிற்சித் திட்டங்கள் கட்டங்கட்டமாக அமலுக்கு வரும்.

 

 1. மீட்சிக்கான பொது நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடையின் போது செயல்படத் தடை  விதிக்கப்பட்ட சுற்றுலா தொடர்பான துறைகளும் இதர வர்த்தகங்களும் நீங்கலாக மற்ற துறைகளுக்கான இஆர்பி படிப்படியாக மேற்கொள்ளப் படுகிறது.

 

2. சம்பள உதவித் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும்  கூடுதலாக 3 மாதங்களுக்கு நிதி அனுகூலத் தொகைகள் வழங்கப்படுகின்றன.  மாதமொன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 600 வெள்ளி வழங்கப்படுகிறது.

3.  ஒரு தொழிலாளியின் சம்மதத்தோடு சம்பள உதவித் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வாராந்திர வேலை குறைப்பு தளர்வு நிலையும்  சம்பள குறைப்பு நிலையும்அமல்படுத்துதல்.

4. முதலாளிகள் (மீட்சிக்கான பொது நடமாட்டத்  தடையின் போது செயல்பட தடை விதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையும் இதர துறையும் நீங்கலாக) மற்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு சம்பளம் இல்லா  விடுமுறை வழங்க வேண்டும்.  தங்கள் தொழிலாளர்களுக்கு நேரடியான உதவிகளை அவர்கள் வழங்க வேண்டும்.

 கேள்வி 6 - பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவுவதற்கான திட்டங்கள், யுக்திகள் என்ன?

 

 பதில் - சொக்சோ

 

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவ சொக்சோ பல்வேறான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக உதவிகள் யாவும் நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களையே சென்று சேருகின்றன. மனிதவள அமைச்சும் பெர்கெசோவும் தொடர்ந்து பொருளாதார மேம்பாட்டு மன்றத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. குறிப்பாக தொழில்துறைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதுடன் பொருளாதார மேம்பாட்டிற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 எச்ஆர்டிஎப்

 

மனிதவள அமைச்சு எச்ஆர்டிஎப் வாயிலாக கடந்த ஜூன் 22ஆம் தேதி பல திட்டங்களை அறிமுகம் செய்தது. கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் தொழில் துறையில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் இத்திட்டங்கள் பயனளிக்கும்.

பெஞ்சானாவும் எச்ஆர்டிஎப் 5ம் வெவ்வேறு அம்சங்களை கொண்ட திட்டங்களாகும். அவை பின்வருமாறு:

 அ. வேலையமர்த்துதல் மற்றும் பயிற்சித் திட்டங்கள்

 

ஆ. திறனை மேம்படுத்துதல் மற்றும் மறு பயிற்சிகளின் வாயிலாக திறன் பெறுவது

இ. விவசாயம், உணவு, வீட்டில் இருந்து வியாபாரம் செய்வது, இணைய வியாபாரம் உட்பட பல பயிற்சித் திட்டங்களை பி40 மக்களுக்கு கொடுப்பது. இதன் மூலம் அவர்களும் மேம்பாடு அடைவர்.

ஈ. வியாபாரத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை

சிறுதொழில் வணிகர்களுக்கு வழங்குவது.

உ. கெராக் இன்சான் கெமிலாங் (ஜிஐஜி) - மலேசியர்கள் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவது.

 கேள்வி 7 - கோவிட்-19 தொற்றின் தாக்கத்தில் இருந்து விடுபட தொழில் துறைகளுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?

 

 பதில் -

 

தற்போதைய நிலவரப்படி கோவிட்-19 தொற்றின் தாக்கம் பெருமளவில் குறைந்து விட்டது. இது மலேசியர்களின் கட்டொழுங்கு, ஒத்துழைப்பு உட்பட  அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது அத்தொற்றின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு தொழில் துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இருந்த போதிலும் அத்தாக்கத்தில் இருந்து விடுபட சிறிது காலம் தேவைப்படும். ஆனால் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அத்தொழில் துறைகளின் மறுமலர்ச்சி பெரும் பங்கை அளிக்கும்.

 

இதன் அடிப்படையில் மனிதவள அமைச்சும் இதர துணை நிறுவனங்களும் தொழில் துறைகள் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கும் தொழில் துறைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அமைச்சு கவனமாக உள்ளது.

 கேள்வி 8 - தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கும் அவர்களின் மறுமலர்ச்சிக்கும் எவ்வாறான திட்டங்கள் உதவுகின்றன.

 

 பதில் – சொக்சோ கோவிட்-19 தொற்றின் தாக்கம் கிட்டத்தட்ட 4 மாதங்களைக் கடந்துள்ளது. இதனால் அரசாங்கம் பல்வேறான கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறான ஊக்குவிப்புத் திட்டங்கள் தொழிலாளர்களுக்கும் தொழில் மறுமலர்ச்சிக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

 

 அ. தொழிலாளர்கள் தக்கவைப்புத் திட்டம் இத்திட்டம் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு 37,906 நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைத்தன. இதில் 24,807 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சுமார் 252, 268 தொழிலாளர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். மொத்தம் 151.36 மில்லியன் வெள்ளியை அரசு செலுத்தி உள்ளது. தொழிலாளர் தக்கவைப்புத் திட்டம் ஜூன் 15ஆம் தேதி அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 ஆ.  சம்பள உதவித் தொகை திட்டம்

 

 கோவிட்-19 தொற்றின் தாக்கம் முதலாளிமார்களுக்கு சுமையை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக 2.59 மில்லியன் தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். இது முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரும் பயனை அளித்துள்ளது.

 

 இ. பெஞ்சானா கெர்ஜாயா

 

இத்திட்டம் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்நோக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் பயனை அளித்துள்ளது.மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் சொக்சோவின் முயற்சியில் இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 15ஆம் தேதி வரை வேலை தேடும் மலேசியர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இன்று முதல் தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.penjanakerjaya.perkeso.gov.my எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்து கொண்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.அதே வேளையில் நிபுணத்துவம் இல்லாத தொழிலாளர்களுக்கு எச்ஆர்டிஎப் வாயிலாக பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img