img
img

வருமானம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தக்க நேரத்தில் கைகொடுக்கும் பிரிஹாத்தின் திட்டம்
ஞாயிறு 28 ஜூன் 2020 13:17:47

img

வருமானம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தக்க நேரத்தில் கைகொடுக்கும்

பிரிஹாத்தின் திட்டம்

 

வருமானத்தை இழந்து, சிரமத்தில் சிக்கித் தவித்த தொழில் நிறுவனங்களுக்கு தக்க தருணத்தில் கைகொடுத்திருக்கும் அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் நன்றி

* சொக்சோ பிரிஹாத்தின் சம்பள உதவித் தொகைக்கு சுமார் 53.2 விழுக்காட்டு நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 33 விழுக்காட்டினருக்கு அங்கீகாரம் கிடைத்தது

* பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது உட்பட பணப்புழக்கம் அவ்வளவாக பாதிக்கப்படாமலிருக்க இத்திட்டம் உதவுகிறது

 டத்தோ இராமநாதன் வரவேற்றார்

கோலாலம்பூர், ஜூன் 28-

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக நாட்டிலுள்ள ஏராளமான சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் (SME) மைக்ரோ (MICRO) தொழில்களும் பெருமளவு பாதிக்கப்பட்டன. தங்களின் வழக்கமான வருமானம் தடைபட்டு, பணியாளர்களையும் தக்க வைக்க முடியாமல் தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பிரிஹாத்தின் உதவித் திட்டம் பேருதவியாக அமைந்துள்ளது.

சரியான நேரத்தில் வழங்கப்படும் இந்த உதவிகளுக்காக அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் நன்றி கூறுகிறார் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்தியர் வர்த்தகத் தொழில்துறை சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.இராமநாதன். இச்சங்கம் சுமார் 800 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சேவைகள், தயாரிப்புத் துறை உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த எஸ்.எம்.இ. நிறுவனங்கள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன. நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட வேளையில், சங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வின்வழி சுமார் 81.7 விழுக்காட்டு நிறுவனங்கள் 1 முதல் 3 மாதங்கள் வரைக்கும் கையிலிருக்கும் பணப்புழக்கத்தைக் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியும் என்பது கண்டறியப்பட்டது.

மூன்று முதல் 6 மாதங்களுக்கு தங்களால் சமாளிக்க முடியும் என 15.6 விழுக்காட்டு நிறுவனங்களும் ஓராண்டுக்கும் மேலாக தங்களால் சமாளிக்க முடியும் என 2.8 விழுக்காட்டு நிறுவனங்களும் கூறியுள்ளன. அதே சமயம், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் சுமார் 79.8 விழுக்காட்டு நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன என்றும் இராமநாதன் தெரிவித்தார். சொக்சோ பிரிஹாத்தின் சம்பள உதவித் தொகைக்கு சுமார் 53.2 விழுக்காட்டு நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில்33 விழுக்காட்டினருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

பி.எஸ்.என். மைக்ரோ / ஐ - கிரெடிட் பிரிஹாத்தின் திட்டத்திற்கு 37.6 விழுக்காட்டு நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. ஆனால், 0.9 விழுக்காட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைத்தது. இதன் விண்னப்ப முறைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என இராமநாதன் வலியுறுத்தினார். வர்த்தக வங்கிகள் அல்லது சி.ஜி.சி. நிறுவனத்துடன் கோவிட்-19 சிறப்பு நிவாரண நிதிக்காக (SRF) சங்கத்தின் உறுப்பினர்களில் சுமார் 41.3 விழுக்காட்டினர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

 

கோவிட்-19 தாக்கத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் அறிவித்துள்ள பிரிஹாத்தின் திட்டத்திற்காக சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் நன்றி தெரிவித்ததை அவர் கோடி காட்டினார். கோவிட்-19 தாக்கத்திலிருந்து விரைந்து நிவாரணம் பெற்று வரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இதற்கான ஒட்டுமொத்த பெருமையும் மலேசிய அரசாங்கம், பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்,  சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம், உயர்நிலை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரைச்  சேரும்.

 

பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய இக்கட்டான நிலையில், ஒரு புறம் வருமானம் இல்லை என்றாலும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. எவ்வாறு சமாளிப்பது என்ற சிக்கலில் இருந்த சமயத்தில்தான் அரசாங்கத்தின் வெ.1,200 பிரிஹாத்தின் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது உண்மையில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பேருதவியாக இருந்தது. எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இதனை வரவேற்றனர். பெஞ்சானா திட்டத்தின் கீழ் இது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது உட்பட பணப்புழக்கம் அவ்வளவாகப் பாதிக்கப்படாமலிருக்க இத்திட்டம் உதவுகிறது என அவர் தொடர்ந்து கூறினார்.

 

 

தக்க நேரத்தில் கிடைத்த உதவி

 

 இதனிடையே, அரசாங்கம் தக்க நேரத்தில் வழங்கிய நிதியுதவி தனது நிறுவனத்தின் தொடர் நடவடிக்கைகளுக்குப் பேருதவியாக இருந்தது என கூறுகிறார் ஹெவி லாஜிஸ்டிக் செர்விசஸ் செண்டிரியான் பெர்ஹாட் (Hevi Logistics Services Sdn. Bhd.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்வராஜு (47). இவரின் மனைவி மோகனா தேவியும் இந்நிறுவனத்தின் மற்றோர் இயக்குநராவார். இருவரும் வெற்றிகரமாக இந்நிறுவனத்தை வழி நடத்தி வருகின்றனர். தனது நிறுவனத்திற்கு கிடைத்த அரசாங்கத்தின் பிரிஹாத்தின் உதவித் திட்டம் குறித்து செல்வராஜுடன் பேசுகையில் பயனுள்ள பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

எங்கள் நிறுவனத்தின் 10 பணியாளர்களுக்காக இந்த உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்திருந்தோம். கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக தொழில் நடவடிக்கைகள் 50 விழுக்காடு வீழ்ச்சி கண்டிருந்தாலும் எஸ்.எம்.இ. கடனுதவிக்கான எங்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. அதை வைத்து தொடர்ந்து நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நாங்கள் சம்பந்தப்பட்டது மருந்து தொடர்பான சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி சேவைகள் (Freight Forwarding)  என்பதால் இந்த நிதி உதவியை வைத்து பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது உட்பட நிறுவனத்தின் மற்ற வழக்கமான செயல்பாடுகளை கவனிக்க முடிந்தது.

 

சுமார் 15 ஆண்டுகளாக நாங்கள் இத்துறையில் ஈடுபட்டு வருகிறோம். எந்த ஒரு தொழில் புரிந்தாலும் ஆவணங்கள் மற்றும் கணக்கு விவரங்களை நாம் சரியாக வைத்திருந்தால், முறையாக வரி செலுத்தினால் இதுபோன்ற அரசாங்க உதவிகள் நமக்கு எளிதாகக் கிடைப்பதற்கு வகை செய்யும். இவற்றையெல்லாம் நாம் சரியாக வைத்திராமல், அரசாங்கத்தையே குறை கூறுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதையும் செல்வராஜு தெரிவித்தார்.

 

நாம் மிகவும் சிரமப்பட்டு உழைப்பைப் போட்டு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறோம். ஆனால், இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். வணிகத்துறையில் ஈடுபட்டிருக்கும் நம்மில் பலரும் இதுபோன்ற தவற்றைச் செய்கின்றனர். வருமானத்தை இழந்து, சிரமத்தில் சிக்கித் தவித்த தொழில் நிறுவனங்களுக்கு உதவி தேவைப்பட்ட தருணத்தில் கைகொடுத்திருக்கும் அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் தாம் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார். விமானம், கப்பல்கள் வழி சரக்குகளை அனுப்பி வைத்தல், கிடங்கு, சரக்கு பணியகம், சுங்க அனுமதி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. சிலாங்கூர் சுபாங் ஜெயா, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கிள்ளான் துறைமுகம் ஆகிய இடங்களில் இந்நிறுவனம் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.      

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img