img
img

அல்தான் துயா கொலை: அந்த 13 ஆண்டுகள்
வெள்ளி 20 டிசம்பர் 2019 14:35:09

img

கடந்த 2006 ஆம் ஆண்டு மங்கோலிய மாடல் அழகியும் ஒரு தேர்ச்சி பெற்ற மொழி பெயர்ப்பாளருமான அல்தான்துயா ஷரிபு ஒரு காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் சிதறடிக்கப்பட்ட சம்பவம் பற்றிய செய்திகள் வெளிவந்தபோது நாடே அதிர்ந்தது. இந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகளாகிவிட்டன. சம்பவத்தின் ஒரு நிகழ்வுக் கோர்வையைக் காண்போம்                 

*  2006- அல்தான்துயா காணாமல் போனதாக அவரின் உறவினர் ஒருவர் புகார் தெரிவிக்கிறார். விசாரணையில் இறங்கிய காவல்துறை அவர் தலையில் சுடப்பட்டு மாண்ட பின்னர் அவரது உடலில் கட்டப்பட்ட சக்தி மிக்க வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டு அவர்  உடல் சிதறி மாண்டிருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதிரடி காவல் பிரிவைச் சேர்ந்த அஸிலா, சிருள் ஆகிய இருவர் நவம்பர் மாத தொடக்கத்தில் கைது செய்யப்படுகிறார்கள். அதன் பின்னர் முன்னாள் பிரதமர் நஜீப்பின் தனிப்பட்ட செயலாளர் அப்துல் ரசாக் பகிண்டா இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்யப்படுகிறார்.

இரண்டு வாரங்களுக்கு  பிறகு அஸிலா, சிருள் இருவரும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். புக்கிட் ராஜாவிலுள்ள ஒரு வனப்பகுதியில் அக்டோபர் 19 ஆம் தேதி இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

* 2007- ஜூன் மாதத்தில் அஸிலா, சிருள், ரசாக் பகிண்டா ஆகியோர் மீது விசாரணை நடக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு, 2005 ஆம் ஆண்டுகளில் அல்தான்துயா பிரான்ஸ், லண்டன் நகர்களில் ரசாக் பகிண்டாவையும் முன்னாள் பிரதமர் நஜீப்பையும் சந்தித்ததாக சாட்சிகள் கூறுகின்றன.

இதே மாதத்தில் அல்தான் துயாவின் தந்தை ஷரிபு ஸ்டீவ் அவரின் மனைவி அல்தான்செட்செக் சஞ்சா, அவர்களின் இரண்டு பேரப்பிள்ளைகள் ஆகியோர், அஸிலா, சிருள் , ரசாக் பகிண்டா மற்றும் மலேசிய அரசாங்கத்தின் மீது வழக்குப்போடுகிறார்கள்.

அல்தான்துயா மரணத்திற்கு 100 மில்லியன் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டுமென அந்த சிவில் வழக்கில் கூறப்படுகிறது.

* 2008- ஜூலை மாதத்தில் ஒரு தனியார் உளவு பேதாவான பி.பாலசுப்பிரமணியம் என்பவர் நஜீப்புக்கும் ரசாக் பகிண்டாவுக்கும் அல்தான் துயாவுக்கும் இடையில் தனிப்பட்ட தொடர்பு இருந்தது என்று ஒரு சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் மூலம் பரபரப்பை  ஏற்படுத்துகிறார்.

எனினும் மறுநாளே அதை மாற்றிக் கொள்கிறார். இரண்டாவது சத்தியப்பிரமாணம் வெளியிட்டு அவர்களுக்கு இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்.

 அக்டோபர் மாதத்தில் ஷாஆலம் நீதிமன்றத்தில் ரசாக் பகிண்டா எந்த தவறும் இழைக்கவில்லை என்றுகூறி விடுதலை செய்யப்படுகிறார். எனினும்  அஸிலா, சிருள் இருவரும் எதிர்வாதம் புரிய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்கை அரசுத்தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது.

ரசாக் பகிண்டாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரது விடுதலையை எதிர்த்து அரசுத்தரப்பு மேல்முறையீடு செய்வதில்லை என்று முடிவு செய்தது.

* 2009-  ஜனவரி மாதத்தில் அஸிலாவும் சிருளும் நீதிமன்றத்தில் தங்களை தற்காத்து வாதாடுகிறார்கள்.

 ஏப்ரல் மாதத்தில் 159 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு சிருள் , அஸிலா இருவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.  அடுத்த சில தினங்களில் அவர்கள் இருவரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்கள்.

* 2013 - மார்ச் மாதத்தில் உளவு பேதா  பாலசுப்பிரமணியம் மாரடைப்பால்  காலமாகிறார்.

ஆகஸ்ட் மாதத்தில் அஸிலா ,சிருள் இருவர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவர்கள் தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள். அரசுத்தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது.

* 2014 -  ஜூன்  மாதத்தில் கூட்டரசு நீதிமன்றத்தில்  மூன்று நாட்கள் வரை மேல்முறையீட்டு விசாரணை நடக்கிறது.

* 2015- ஜனவரி  மாதத்தில் அஸிலா, சிருள் ஆகிய இருவரின் விடுதலை செல்லாது. அவர்கள் மீதான மரண தண்டைனையை உறுதி செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  தீர்ப்பின்  போது  அஸிலா நீதிமன்றத்தில் இருந்தார். ஆனால் சிருள் நீதிமன்றம் வரவில்லை என்று கூறப்பட்டது.

 ஜாமீனில் இருக்கும்போது சிருள் 2014 ஆம் ஆண்டு  ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடிவிட்டதாகவும் அவர் கைது செய்யப்பட்டு சிட்னி வில்லாவூட் தடுப்பு முகாமில் இருப்பதாக கூறப்பட்டது. அவர் அங்கு அரசியல் அடைக்கலம் தேட முயன்றதாகவும் கூறப்பட்டது. மரண தண்டனை கைதிகளை ஆஸ்திரேலியா  நாடு கடத்த சட்டமில்லை என்பதால் அவரை நாட்டுக்கு திரும்ப கொண்டுவர முடியவில்லை என்றுகூறப்பட்டது.

 

* 2017- அல்தான்துயாவின் 15 வயது மகன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தொடுத்தவழக்கிலிருந்து அச்சிறுவனின் பெயர் நீக்கப்படுகிறது.

 

* 2018- 14 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அரசாங்கம் மாறுகிறது. ஆட்சி மாற்றமும் நிகழ்கிறது. அல்தான்துயாவின் தந்தை ஷரிபு ஸ்டீவ் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸையும் பிரதமர் துன் டாக்டர் மகாதீரையும் சந்தித்து காவல் துறையில் புகார் செய்து தமது மகளின்படுகொலையில் மறுவிசாரணை வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார்,

மறுவிசாரணை நடைபெறும் என காவல்துறை பதிலளிக்கிறது.

 

 * 2019- இம்மாதம் டிசம்பர் 16 ஆம் தேதி காஜாங் சிறையிலிருக்கும் அஸிலா ஒரு சத்தியப்பிரமாண வாக்குமூலத்தை வெளியிடுகிறார்.  அல்தான்துயாவை கொலை செய்து தடயம் இல்லாமல் அவரை அழித்து  விட வேண்டும் என்று அவர் தம்மை கேட்டுக் கொண்டதாக கூறுகிறார். தாம் காரணம் கேட்டதற்கு அல்தான்துயா ஒரு ரஷ்ய உளவாளி, அவர் இருந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று  கூறினார். அவர் சொன்னதை செய்தேன். எனக்கு எதிரான மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டுமென அவர் கூறியிருக்கிறார்.

நஜீப் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறார். இது திட்டமிட்டு என்மீது சுமத்தப்படும் ஒரு கொலைப்பழி. மரண தண்டனையிலிருந்து தப்பிக்க அஸிலா நடத்தும் நாடகம் என்கிறார்.இதற்கு எதிராக பள்ளிவாசலில் சத்தியம் செய்வேன் என்கிறார்.அஸிலாவின் சத்தியப்பிரமாண வாக்குமூலம்தொடர்பான விசாரணை வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் என கூட்டரசு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img