ரிச்சர்ட் கேரிங்டன் என்ற வானியல் ஆய்வாளர் 1859, செப்டம்பர் 1 அன்று தனது வான் ஆய்வகத்திற்கு வந்தார். ஆறு வருடங்களாக அவர் சூரியனை பொறுமையாக தொலைநோக்கி வழியே ஆராய்ச்சி செய்து வந்த அவருக்கு அன்று ஒரு இன்ப அதிர்ச்சி.
சூரியனின் மேற்பரப்பில் இரண்டு சிறிய திப்பி போல ஏதோ தெரிந்தது. அதன் அளவு பூமியின் குறுக்களவைவிட 10 மடங்கு பெரியது. அவர் அதை கவனித்துக்கொண்டிருக்கையிலேயே அது வெடித்து பெரும் தீ நாக்கு கிளம்பியது.
அதை இன்னொருவருக்கு காண்பித்து, தான் கண்டது நிஜம்தான் என்பதை உறுதி செய்ய உடனே வெளியே ஓடினார். ஒரு நிமிடத்திற்குள் அவர் திரும்பி வந்து தொலை நோக்கி வழியே பார்த்தபோது, அந்த ஜுவாலையின் சீற்றம் வெகுவாக தணிந்துவிட்டிருந்தது.
ஆனால், அவர் பார்த்த அந்த சூரிய புயல் (சோலார் பிளேர்) சீற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மின்காந்த அலைகளின் தாக்கம், பூமியை வந்தடைய 12 மணி நேரம் ஆனது. ஒரு வகையில் உலகமே தள்ளாடிப்போனது. இருட்டிலும் வானின் நிறம் மாறி பல வண்ணங்களில் ஒளிர்ந்தது. கப்பல் மாலுமிகள் மிரண்டுபோனார்கள். தந்தி கம்பங்கள் கோளாறு செய்தன.இதுபோன்ற சூரிய புயல்கள் அதன் பின் அவ்வப்போது நடந்திருக்கின்றன.