சா ஆவில் நேற்று முன்தினம் வீசிய கடும் புயல் காற்றினால் அவ்வட்டாரத்தைச் சேர்ந்த 13 புது கிராமங்களில் 100க்கும் மேற் பட்ட வீடுகள் சேதமடைந்தன.
மாலை 4 மணியளவில் வீசிய கடுமையான புயல் காற்றால் சில வீடுகளின் கூரைகள் பறந்ததோடு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.
சில மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கூறப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற புயல் காற்றை தான் கண்டதில்லை என சா ஆவைச் சேர்ந்த முருகன் நண்பனோடு தொடர்புக் கொண்டு குறிப்பிட்டார்.
இடியுடன் மின்னலும் ஏற்பட்டு சா ஆ மக்களை அச்சுறுத்தியதாக தெரிவித்த அவர், சில இடங்களில் கடைகளின் அறிவிப்புப் பலகைகளும் பறந்து விழுந்ததை கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே நேற்று முன் தினம் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று அப்பகுதியை சுற்றிப் பார்த்த லாபீஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுவா தீ யோங் அந்த சம்பவம் தொடர்பில் தான் 67 புகார்களை பெற்றதாக தெரிவித்தார்.
அச்சம்பவத்தில் 289 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் சா ஆவிலுள்ள தமிழ்ப்பள்ளி, பள்ளி வாசலின் கூரைகள் கூட பறந்து சேதமடைந்ததாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருவதாக தெரிவித்த டத்தோ சுவா தீ யோங் பாதிக்கப்பட்ட இடங்களில் கம்போங் ஜாவா, கம்போங் ஜாவா பாரு, கம்போங் கங்கார், தாமான் ஸ்ரீ சா ஆ, தாமான் ஓர்க்கிட், சா ஆ பொது வீடமைப்புப் பகுதி, தாமான் டாமாய் ஜெயா ஆகியவையும் அடங்கும் என குறிப்பிட்டார்.