img
img

யாருக்காக பொன்முட்டை இடுகிறது ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம்?
திங்கள் 13 நவம்பர் 2017 16:18:49

img

மலேசியாவின் வரலாற்றில் நம்பியே ஏமாந்த சமூகம் என்ற முத்திரையைப் பெறத் தகுதியான ஒரே சமூகம் இந்திய சமூகமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை யாராலும் மறுக்கவே முடி யாது. மலேசியாவின் 60 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் சமூகப்பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய சமூகமாகவும் உரிமைகளை முழுமையாக இழந்திருக்கும் சமூகமாகவும் உருவெடுத்திருப்பதற்கு யாரை நாம் கைநீட்டி குற்றவாளி ஆக்குவது என்பதற்கான பதில் பிறந்த குழந்தைக்கும் தெரியும் என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது.

கடந்த 60 ஆண்டு காலத்தில் மலேசிய இந்தியர்களின் நலன்களைப் பேணுவதாக முரசு கொட்டி வரும் மஇகாவின் செயல்பாடுகளினால் மலேசிய இந்திய சமூகம் நன்மைகள் பெற்றுள் ளதா என்ற கேள்வியை முன் வைத்தால் கருத்துகளை விட சாபங்களையே அதிகமாக கேட்க நேரிடும் என்பதை மறுக்க முடியுமா? மலேசிய இந்தியர்களின் நலன்களை முழுமையாகக் காக்க வேண்டிய கடமையி லிருந்து அரசியல் தாய்க்கட்சி விலகியுள்ளதா என்பதற்கான தெளிவுகள் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். 

* மலேசிய இந்திய சமூகத்திற்கு மைக்கா ஹோல் டிங்ஸ் நிறுவனத்தின் வழி ஏற்பட்ட காயங் கள் இன்னமும் ஆறவே இல்லை.

* மஇகா யூனிட்  டிரஸ்ட் நிதியின் வழி பட்ட காயங்களும் இன்னும் மாறவே இல்லை.

* இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடுகளுக்காக வழங்கப்பட்ட மானியங்கள் மாயமாகிப்போன சுவடுகளும் இன்னமும் மறையவில்லை.

* ஏழை இந்தியர்களின் பொருளாதார விடியலுக்காக வழங்கிய நிலத் திட்டங்களின் வழியிலான உதவிகளும் அபகரிக்கப் பட்ட வேதனையும் மறையவில்லை.

* விவசாய பயிற்சிகளுக்காக வழங்கிய அரசாங்க மானியங்களும் பயனற்றுப்  போன விவகாரம் இன்னமும் தீரவில்லை!

என இன்னமும் அடுக்குவதற்கு நிறைய சம்பவங்கள் இருந்தாலும் ஏழை இந்தியர்களின் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தை மாற்றியமைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு மாற்றான் வீட்டு பணக்காரப் பிள்ளைகளின் உயர்கல்வித் தளமாக மாறி வரும் ஏய்ம் ஸ்ட் பல்கலைக்கழக விவகாரம் மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகவே ஏவுகணை கருதுகின்றது.

மாஜு கல்வி நிதியும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும்!

மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வழி மலேசிய இந்தியர்களின் ஏழ்மையை ஒழித்து விடுவதாக மார்தட்டிய சாதனைத் தலைவர் இறுதியாக ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கும் விவகாரத்திற்கு அடுத்தபடியாக மலேசிய இந்தியர்களின் ஏமாளித் தனத்தால் கோடிக்கணக்கான சொத்துக்களை உள்ளடக்கிய மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனத்தினை முழு மையாக மஇகாவி டமிருந்து ஆக்கிர மித்துக் கொண்டி ருக்கும் முன்னாள் சாதனைத் தலைவரின் செயல்பாடுகளினால் நம்பி மோசம் போன சமூகம்" எனும் இரண் டாம் கட்ட ஏமாற் றத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவே ஏவுகணை கருதுகின்றது.

* கெடா மாநிலத்தில் செமெலிங்கில் (ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் நிலம்) 228 ஏக்கர் நிலம் துன் டாக்டர் மகாதீரால் மலேசிய இந்தியர்களின் சார்பில் வழங்கப்பட்டது.

* துன் டாக்டர் மகாதீரின் வழி இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காக வெ. 150 மில்லியன் மானியம் பெறப்பட்டது.

* துன் அப்துல்லா அகமட் படாவியின் வழி  மலேசிய இந்திய சமூகத்தின்  உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்ய வெ. 220 மில்லியன் பெறப்பட்டது.

* மஇகா கிளைகளின் வழி வெ. 11,000 வசூலிக்கப்பட்ட தொகை ஏழை இந்திய சமூகத் திடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையாகும்.

* மாஜு கல்வி மேம்பாட்டு நிதிக்காக அதிர்ஷ்டக்குலுக்கு டிக்கெட்டுகளை வாங்கியவர்களும் ஏழை இந்திய சமூகமே

* சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழங்கிய மானியங்களை முழுமையாக அபகரித்துக் கொண்டு சாதனைத் தலைவரிடம் ஒப்படைத்த தொகையினை அளவிட முடியாது.

* தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பெறப்பட்ட மானியங்களை சாமர்த்தியமாக திசை திருப்பிய தொகையையும் கணக்கிட முடியாது.

ஆக மொத்தத்தில் மலேசிய இந்திய சமூகத்திடமிருந்து சுமார் வெ. 500 மில்லியன் தொகையினை வசூலித்துக் கொண்டு தனியார் பல்கலைக்கழகத்தின் வழி  மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் ‘தனியார் துறையினர்’ மலேசிய இந்திய சமூகத்திற்குப் ‘பட்டை நாமம்’ போட்டிருப்பதை இன்னமும் அறியவில்லையா?

வெ. 500 மில்லியன் தொகையினை இலவசமாகப் பெற்றுக் கொண்டு தனது ஏழு தலைமுறைக்கும் உறுதியான வருமானத்தினை தயார் செய்திருக் கும் சாமர்த்தியத்திற்கு மலேசிய அப்பாவி இந்தியர்களைத் தவிர வேறு யாரால் முடியும்?

மஇகாவிற்கு தொடர்பே இல்லையா?

மஇகாவின் 30 ஆண்டு கால தலைமைத்துவத்தினை அலங்கரித் திருந்த காலக்கட்டத்தில்தான் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதாரம் மிகவும் பின்ன டைந்தது என்பதை யாராவது மறுத்துக் கூறுவார்களா? மலேசிய இந்தியர்களிடமிருந்து சொத்துகளையும் அப கரித்த சூழல் உருவாக்கவில்லையா? இந்திய சமூகம் பிற சமூகத்திற்குச் சமமாக  வாழும் என்ற நம்பிக்கையை விதைக்கவில்லையா?

மஇகாவின் மூலமாகவே மாஜு கல்வி மேம்பாட்டு  நிறுவனத்திற்காக அனைத்து வசூல்களும் நடத்தப்பட்டதையாவது மறுப்பார்களா? மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனம் (Maju Institute For Education Development - MIED) பின்வரும் துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது:

* ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் (AIMST University)

* டேப் கல்லூரி (Tafe Collage)

* எம்.ஐ.இ.டி. கெப்பிட்டல் சென். பெர்ஹாட் (MIED Capital Sdn. Bhd.)

* எம்.ஐ.இ.டி. புரோப்பர்ட்டி மேனேஜ்மெண்ட் (MIED Property Management)

* எம்.ஐ.இ.டி. டிரேய்னிங் (MIED Training)

மேற்காணப்படும் மாஜு கல்வி  மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் அத்தனையும் மஇகாவின் கீழ் செயல்படுகின்றதா என்பதற்கான தெளிவான விளக்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மஇகாவின் மூலம் மலேசிய இந்தியர்களின் மானியங்களின் வழி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் தொடர்பில் சில கேள்விகளை ஏவுகணை முன் வைக்கின்றது.

* ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மஇகாவின் வழி நிர்வகிக்கப்படுகின்றதா?

* மஇகாவின் வழி நிர்வாகம் செய்யப்பட்டால் சாதனைத் தலைவரின் பிடிமானம் ஏன் இன்னமும் முன்னிலையில் உள்ளது?

* ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஏழை இந்திய மாணவர்களின் உயர்கல்விக்கு உறுதுணை புரிகின்றதா?

* வசதியுள்ளவர்களும் பண வசதி படைத்தவர்களும் மட்டுமே பிள்ளைகளை மருத்துவராக்க ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கின்றதா?

* ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்படும் மில்லியன் கணக்கிலான லாபத்தினை யார் பெறுவது?

* மஇகாவிலிருந்து பதவி ஓய்வு பெற்றவர்களும் உளுத்துப் போன தலைவர்களும் மட்டுமே நிர்வாகப் பொறுப்பில் இருப்பது ஏன்? 

* மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனத்திற்கு  அரசாங்கம் வழங்கியிருக்கும் மானியத் தொகை எவ்வளவு?

* மஇகாவின் தற்போதைய தலைமைத்துவ பலவீனத்தால் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மூன்றாம் தரப்பினருக்குப் பொன் முட்டை இடுகின்றதா?

* மைக்கா ஹோல்டிங்ஸ் போன்று எம்ஐஇடியும் மஇகாவிடமிருந்து விடை பெறுமா?

* ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து குத்தகைகளுக்குப பின்னால் மஇகாவின் தலைவர்கள் இருப்பது உண்மையா?

* இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்  வருமானத்திற்காக தடம் மாறியுள்ளதா?

போன்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கு மஇகாவின் தலைமைத்துவம் பதில் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? நாளை தொடர்வோம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img