img
img

தொடரும் கமலநாதனின் அலட்சியம்
வியாழன் 11 ஆகஸ்ட் 2016 12:42:27

img

நாட்டில், தமிழ்ப்பள்ளிக்கூட பிரச்சினைகள் முன்பு இல்லாத அளவிற்கு இப்போது அதிகமாகவே நம் சமுதாயத்தில் ஊடுருவி, சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது எனலாம். கல்வித் துறையில் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அதன் துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன். மலேசிய நண்பன் வாயிலாக எத்தனையோ தமிழ்ப்பள்ளிக்கூட பிரச்சினைகள் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால், இவை அனைத்தும் நடந்ததாகவே அவர் காட்டிக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதுதான் வெறுக்கத்தக்கச் செயலாக இருக்கிறது.இதில், தாம் என்னமோ ‘நல்ல பிள்ளை’ என்பதை காட்டிக்கொள்வதை போல ஜெஞ்சாரோம் தமிழ்ப்பள்ளிக்கூட நிகழ்வில் அவர் அண்மையில் பேசியிருக்கிறார். என்னடா, எப்படி அடித்தாலும் கமலநாதன் வாங்கிக்கொண்டு வாயைத் திறக்க மாட்டேன்கிறார். ஒரு வேளை அவர் ரொம்ப நல்லவர் போலும் என்று நாங்கள் நினைத்துக்கொள்வோமாம் - இவ்வாறு கமலநாதன் பேசியிருக்கிறார். கடந்த ஜனவரி தொடக்கம் இதுவரை, தமிழ்ப்பள்ளிகள், தமிழ் மொழி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட 12-க்கும் மேற்பட்ட பிரச்சினைகளை மலேசிய நண்பன் முன் வைத்துள்ளது. அவற்றுள் எத்தனை பிரச்சினைகளுக்கு கமலநாதன் தீர்வு கண்டுள்ளார், அல்லது தீர்வு காண உதவியுள்ளார் என்பதை ஆதாரப்பூர்வமாகக் காட்ட முடியுமா? சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களின் பெற்றோர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். குறிப்பாக, கறையான் அரித்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டல் ஏற்பட்டுள்ள சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, 9 மாணவிகள் வேற்று மொழி ஆசிரியரால் தொல்லைகளுக்கு ஆளான உலு சிலாங்கூர் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி, ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவை உட்கொள்ள மாணவர் கட்டாயப்படுத்தப்பட்டது, பக்கத்தில் உள்ள சீனப்பள்ளி கட்டுமானம் தங்கள் நிலத்தில் அத்துமீறியது போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கிய போர்ட்டிக்சன் செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி ஆகிய விவகாரங்களில் கமலநாதன் எம்மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். அது அவரின் கடமை. டத்தோ கமலநாதன் ஒரு கல்வி துணை அமைச்சராக தனது கடமைகளை முறையாகத்தான் செய்கிறாரா என்ற கேள்வி இந்திய சமுதாயத்தின் மத்தியில் இப்போது எழுந்துள்ளது. இந்திய மாணவர்கள், தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை அலட்சியம் காட்டி வரும் அவர், மற்ற இன பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது மட்டும் ஏன் என்று அவர்கள் வினவுகின்றனர். ஒழுக்கக்கேடான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று கமலநாதன் வீர வசனம் பேசியிருப்பது ஆங்கில நாளேடு ஒன்றில் அண்மையில் வெளியாகியுள்ளது. ஆபாச படத்தை பரப்பி வந்த கிளந்தானில் உள்ள சமய பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரின் அருவருப்பான செயலை கல்வி அமைச் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இணையத் தளத்தில் அருவருப்பான படங்களை பதிவேற்றம் செய்ததற்காக நிக் அடிட் நிக் மாட் (43) என்ற அந்த ஆசிரியருக்கு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு , ஈராண்டு சிறைத்தண்டனையையும் விதிக்கப்பட்டது. மற்ற ஆசிரியர்கள் இதனை ஒரு படிப்பினையாகக் கருத வேண்டும் என்று கூறியுள்ள கமலநாதன், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது பற்றி ஆசிரியர்கள் நினைக்கவே கூடாது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார். கமலநாதனா இப்படி கூறியிருக்கிறார்? இது மக்கள் கேட்கும் கேள்வி. பத்தாங் காலி தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் வேற்று மொழி ஆசிரியர் ஒருவர் 9 இந்திய மாணவிகளிடம் சில்மிஷம் புரிந்த செய்தி வெளியானது முதல் இது பற்றி வாயை திறக்காமல் இருக்கிறார் கமலநாதன். ஒரு பொறுப்புள்ள துணை அமைச்சர் இப்படித்தான் நடந்து கொள்வதா என்றும் அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்ட விஷயம் குறித்து மலேசிய நண்பன் அண்மையில் கமலநாதனிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்வது என்ன அவ்வளவு எளிதான காரியமா’ என்று ஓர் அலட்சியமான பதிலை கூறிய கமலநாதன், சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்று வரை மௌனம் சாதித்து வருகிறார். ஆனால், ஒரு ஆங்கில நாளேட்டிற்கு இதே போன்ற ஒரு சர்ச்சை குறித்து கருத்துரைக்கையில் ஒழுக்கக்கேடான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று எப்படி அவரால் சொல்ல முடிகிறது என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர்கள் முன் வைத்தனர். பத்தாங் காலி தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்வோம்: மே 11-ஆம் தேதி - சம்பவம் நடந்தது. பத்தாங் காலி தோட்ட தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த 9 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மலாய் மொழி போதிக்கும் அந்த வேற்று மொழி ஆசிரியர் பாட நேரத்தில் அம்மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். முத்தமிடுதல், முத்தமிட முயற்சித்தல், கட்டிப்பிடிக்க முயற்சித்தல், நெஞ்சு, உடலின் பின் பகுதியை தொடுவது, சுருட்டப்பட்ட புத்தகம் அல்லது கைகளினால் மாணவிகளை பின்னால் தட்டுவது போன்ற சேட்டைகளை அவர் புரிந்திருக்கிறார். மே 13-ஆம் தேதி - பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மஞ்சுளா, பள்ளியின் உதவியாளர், கட்டொழுங்கு ஆசிரியர் ஆகியோரின் உதவியுடன் பள்ளிக்கூட அளவில் விசாரணை மேற்கொண்டு, எழுத்துபூர்வமாக அறிக்கையை தயார் செய்தார். மே 15-ஆம் தேதி - இன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு மாவட்ட கல்வி இலாகாவில் இது பற்றி மஞ்சுளா புகார் செய்தார். மே 16-ஆம் தேதி - இப்புகார் பற்றி தங்களின் விசாரணையை மேற்கொள்வதற்காக காலை 8.00 மணிக்கு மாவட்ட கல்வி இலாகா புலன் விசாரணை அதிகாரி, உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகா ஆலோசகர், மாணவர் ஆலோசகர் ஆகியோர் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளிக்கூடம் சென்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அந்த வேற்று மொழி ஆசிரியர் தங்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து மாணவிகள் அதிகாரிகளிடம் விவரித்தனர். மே 18-ஆம் தேதி - இச்சம்பவத்தால் சினமடைந்துள்ள பெற்றோர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியரை காப்பாற்றும் நோக்கத்தில் கமாருல்சாமான் என்ற அந்த ஆசிரியர் உலுசிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகாவில் தற்காலிகமாக அமர்த்தப்பட்டார். மே 19-ஆம் தேதி - உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி அதிகாரி, இது பற்றிய மேல் விவரங்களை பெறுவதற்காக அந்த ஆசிரியரை தனது அலுவலகத்திற்கு அழைத்தார். இது பற்றிய தனது அறிக்கையை சிலாங்கூர் மாநில கல்வி இயக்குநரிடம் அவர் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையை தயார் செய்தது உலுசிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகா விசாரணை அதிகார்ரியான ஜஸ்னி பின் முகமட் சோடெக். இதனை பரிசீலனை செய்து, அங்கீகரித்தவர் உலுசிலாங்கூர் மாவட்ட கல்வி அதிகார்ரி ஜைனால் அபிடின் பின் மமுகமட் யூப். இவ்வளவு ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் கமலநாதனால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அந்த மலாய் மொழி ஆசிரியர் எங்கே என்பதுதான் இப்போதைய கேள்வி.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img