img
img

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் ஜொகூர் மக்களின் வாழ்க்கைப் போராட்டம்
ஞாயிறு 02 ஜூலை 2017 12:16:51

img

எம்.கே.வள்ளுவன் ஜொகூர்பாரு, சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்லும் மலேசியர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. குறித்த நேரத்தில் பணியிடத்தில் இருப்பதை உறுதி செய்வதற்கு மலேசியர்கள் குறிப்பாக ஜொகூர்பாரு வாசிகள் அன்றாடம் சுங்க மற்றும் குடிநுழைவுச்சாவடிகளை கடந்து சிங்கப்பூர் செல்ல அதிகாலை யிலேயே கண்விழித்து பல மணி நேரம் வரிசையாக நின்று அந்த சின்னத்தீவுக்குள் நுழைவதற்கு நடத்தும் போராட்டம், படும்பாடு சொல்லி மாளாது. 1963 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்துக் கொண்டு ஒரே நாடாக விளங்கிய வேளையில் தலைவர்களிடையே நிலவிய கருத்து வேறு பாட்டினால் மூன்றே ஆண்டுகளில் 1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தீவு தனியாகப் பிரிந்தாலும் இன்று அந்த நாட்டை நோக்கி இலட்சக்கணக்கான வெளி நாட்டினர் வேலையை தேடி அந்நாட்டிற்கு படையெடுத்துள்ளனர். சின்னத் தீவு ஒரு நாடாக உருவாகிய நிலையில் அந்த நாட்டின் நாணய மதிப்பு மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதால் வேலை தேடிச் செல்லும் மலேசியர்களின் எண்ணிக்கையும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று வர கேலாங் பாத்தா குடி நுழைவு சோதனை சாவடியும், ஜொகூர் பாரு குடிநுழைவுச் சோதனை சாவடியும் அமைந்துள்ளன. ஜொகூர் பாலம் வழியாக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் ஒரு புறமிருக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிளோட்டிகள் தங்களது உயிரை பணயம் வைத்து வேலைக்கு சென்று வருவதைக் காண முடிகின்றது. தூக்கம் பற்றாக்குறையால் இவ்வாண்டு கடந்த ஆறு மாத்ங்களில் குறைந்தது ஆறு இந்திய இளைஞர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு தங்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் போது விபத்திற்குள்ளாகி மரண மடைந்த செய்திகளை கேள்விப்பட்டிருக்கின்றோம். விபத்து மரணங்களில் பெரும்பாலும் தூக்கமின்மையால் ஏற்படும் மரணங்கள் என கூறப்படுகின்றது. குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குச் சென்று வர மோட்டார் சைக்கிளே வசதி என அவர்கள் கருதுகிறார்கள். அது நியாயமாக இருந்தாலும் தங்கள் அன்புக் குரியவர்கள் தினமும் சிங்கப்பூருக்கு வேலைக் குச் சென்று திரும்பும் வரை வீட்டில் கண் விழித்து காத்திருக்கும் பெற்றோர்கள், குடும்பத் தலைவிகள், பிள்ளைகள் மன நிலையையும் கொஞ்சம் ஆராய்ந்தால் அவர்களும் பதட்டத்துடனேயே காணப்படுவதை காண முடிகிறது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளோட்டிகளின் ஆபத்தான பயணத்தைக் கண்டவர்களில் அதனில் பயணிக்க விரும்பாமல் பொது போக்கு வரத்தை பயன் படுத்தி தினமும் வேலைக்கு சென்று வரும் ஒரு சிலர் அதன் மூலம் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் கருத்துரைத்தனர். டி.விஜயன் (வயது 46) கடந்த 18 ஆண்டுகளாக சிங்கப்பூர் பி.எஸ்.ஏ துறை முகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் பெர்லிங்கைச் சேர்ந்த டி.விஜயன் மோட்டார் சைக்கிளின் ஆபத்தை உணர்ந்து தினமும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். தினமும் இரவு 7.30 மணி வேலைக்கு பிற்பகல் 3 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறும் டி.ராஜன் மறு நாள் காலை 7.30 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பும் போது காலை 11 மணி சில வேளைகளில் நண்பகல் 12 மணியாகிவிடும் என்றார். இந்நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 3 மணி நேரமே தூங்க முடிவதாக குறிப்பிட்ட அவர் இரு குடி நுழைவாயில்களிலும் நெரிசலைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களேயானால் எங்களுக்கு குறைந்தது மேலும் 3 மணி நேரம் நெரிசலிலிருந்து விடு பட முடியும் என டி.ராஜன் குறிப்பிட்டார். பி.விவேகானந்தன் (வயது 30) தம்போய் பெர்லிங்கைச் சேர்ந்த பி.விவேகானந்தன் சிங்கப்பூரில் தொழில் நுட்பளாரக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றுகிறார். இரவு 8 மணியி லிருந்து காலை 8 மணி வரையில் இவரது பணியாக இருந்தாலும் மாலை 4 மணிக்கே வேலைக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். ஜொகூர்பாரு, உட்லண்ட்ஸ் சோதனை சாவடிகளைக் கடக்க மட்டும் சில வேளைகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிறது என குறிப்பிட்ட பி. விவேகானந்தன் மோட்டார் சைக்கிள் விபத்துக்களை அடிக்கடி பார்த்து தான் நெரிசலில் சிக்கினாலும் பொது போக்கு வரத்தையே பயன் படுத்திக் கொள்ள முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டார். தனது சகோதரர்கள் ஐவர் தினமும் சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று வரும் வேளையில் ஏற்கெனவே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பயம் ஏற்பட்டதால் வேலைக்கு தற்போது பஸ்ஸையே பயன் படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். எஸ்.முருகன் (வயது 34) சிங்கப்பூர் புக்கிட் தீமாவிலுள்ள நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாண்டானைச் சேர்ந்த எஸ்.முருகன் கடந்த எட்டு ஆண்டுகளாக வேலைக்கு பொது போக்கு வரத்தையே பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். சோதனை சாவடிகளிலும் போக்கு வரத்திலும் ஏற்படும் பெரும் நெரிசலை குறைக்க முடிந்தால் வேலைக்கு சென்று வருவோரின் நேரம் மிச்சமாகும். ஆனால் தற்போது சாவடிகளில் கூடும் கூட்டத்தைப் பார்த்தால் எந்தக் காலத்திலும் இந்த நெரிசலை குறைக்க முடியாது என தனது மன வருத்தத்தை வெளி படுத்திய எஸ். முருகன் நல்ல வேளை நல்ல சம்பளம் காரணமாகவே எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று வருவதாக குறிப்பிட்டார். எனினும் தற்போது வேலை பெர்மிட் இருக்கின்ற காரணத்தால் சிங்கப்பூரிலேயே பெரும்பாலும் தங்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர் சாதாரண வேலைக்காக மலேசிய இந்தியர்கள் சிக்கப்பூருக்கு வேலை தேடி வருவதை தான் விரும்பவில்லை எனவும் எஸ்.முருகன் குறிப்பிட்டார். ஜி.சிவசங்கர் (வயது 41) ஸ்கூடாயில் வாழும் ஜி.சிவசங்கர் சிங்கப்பூர் ஊட்லண்ட்சிலுள்ள மினி மார்க்கெட்டில் பணியாற்றி வருகின்றார். இரு சோதனை சாவடிகளில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க அடிக்கடி பாலாத்தை நடந்துச் சென்றே கடப்பதாக குறிப்பிட்ட ஜி.சிவசங்கர் தனது குடும்பம் பினாங்கில் இருப்பதாக குறிப்பிட்டதோடு தான் மட்டும் தனியாக இங்கிருந்த குடும்பத்திற்காக வேலை பார்த்து வருவதாக குறிப்பிட்டார். சோதனை சாவடிகளில் விடுமுறைக் காலம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக நெருக்கடி ஏற்படும் வேளையில் சிங்கப்பூரில் தன்னைப் போன்று தினமும் வேலைக்கு சென்று வருவோரின் நிலையை அறிந்து அவர்களுக்கு தனி வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஜி.சிவசங்கர் கேட்டுக் கொண்டார். எம்.மதன் ராஜ் (வயது 23) கடந்த ஐந்தாண்டுகளாக சிங்கப்பூர் தஞ்சோங் பகாரில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் எம்.மதன் ராஜ் இரவு 8 மணியிலிருந்து மறு நாள் கலை 8 மணிவரை தனது வேலை நேரம் என குறிப்பிட்டதோடு தனது பணிக்காக மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுவதோடு மறுநாள் காலை 11 மணிக்கு மேல் தான் வீடு திரும்ப முடியும் என குறிப்பிட்டார். தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரமே தனது தூக்கம் என்ற அவர் சோதனை சாவடிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க இரு நாட்டு அரசாங்கங்களும் ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ச.தேவன் (வயது 45) சிங்கப்பூர் அங்கமோக்கியாவில் பாதுகாவலராக பணியாற்றும் ச.தேவன் குடும்பத்தை கரை சேர்க்கும் பொருட்டு பேராக்கிலிருந்து வேலை தேடி இங்கு வந்ததோடு கடந்த ஐந்தாண்டுகளாக ஜொகூர் பாருவில் தங்கி சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாக குறிப்பிட்டார். முடிந்த அளவு சோதனை சாவடி களிலுள்ள அனைத்து முகப்பிடங்களும் திறந்து விடுவதன் மூலம் சோதனை சாவடிகளில் ஏற்படும் நெரிசலை குறைக்க முடியும் என்ற அவர் போக்கு வரத்து நெரிசலை குறைக்க சாலை போக்கு வரத்து அதிகாரிகள் பாலத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். டி.விக்னேஸ்வரன் (வயது 25) கூலாயை சேர்ந்த டி.விக்னேஸ்வரன் தான் தோக் செங் மருத்துவமனையில் துப்புரவு பணி அதிகாரியாக பணியாற்றும் வேளையில் போக்கு வரத்து நெரிசல்கள் காரணமாக பல வேளைகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைக்கு செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை பகிர்ந்துக் கொண்டார். எம்.தியாகு (வயது 28) டி.விக்னேஸ்வரன் போன்று அதே பணியை மேற்கொண்டுள்ள ஜொகூர் பாருவின் எம்.தியாகு வேலைக்கு போய் வருவதே ஒரு போராட்டமாகி விட்டதாக குறிப்பிட்டார். எம்.கேசவன் (வயது 28) சிலாங்கூர் ரவாங்கைச் சேர்ந்த எம்.கேசவன் நான்காண்டுகளாக பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வருவதாக குறிப்பிட்டார். தினமும் 12 மணி நேர வேலை ஆனால் தூங்கும் நேரம் சுமார் 4 மணி நேரம் தான் அரசாங்கம் மக்களின் சுமையை கண்டு போக்கு வரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.கேசவன் கேட்டுக் கொண்டார். பேட்டி கண்டவர்களில் பெரும் பாலோர் அரசாங்கம் முன்பு அறிவித்தது போல் சிங்கப்பூர் ஜொகூருக்கான எல்ஆர்டி ரயில் சேவையை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதே போல் தற்போது உட்லண்ட்ஸ் வரையிலான ரயில் சேவையை மேலும் அதிகரிப்பதுடன் 5 வெள்ளி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அது மட்டுமின்றி அனைத்து முகப்பிடங்களும் எப்போதும் திறந்து வைப்பதுடன் சிங்கப்பூர் ஜொகூர் பாலத்தை மேலும் விரிவு படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மூன்றாவது பாலத்தை உருவாக்க இரு நாடுகளும் முடிவு செய்ய வேண்டும் எனவும் சிலர் கேட்டுக் கொண்டனர். நல்ல வருமானத் திற்காக சிங்கப்பூரில் வேலை செய்வது ஒரு புறம் இருந்தாலும் மன உளைச்சலும் அவர்களை தாக்கவே செய்துள்ளதை காண முடிந்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img