img
img

ஊசலாடுகிறது ஒரு தமிழ்ப்பள்ளி.
திங்கள் 05 ஜூன் 2017 11:50:54

img

ஜெரம் ஏழு மாணவர்களுடன் இன்றோ நாளையோ என தள்ளாடிக் கொண்டிருக்கும் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிதாபத்திற்கு ஒரு சில மஇகா தலைவர்களின் சுயநலமே காரணம் என்று ஜெரம், புக்கிட் செராக்கா மஇகா கிளை வெளிப்படையாக குற்றம் சாட்டியது.ஊசலாடிக் கொண்டிருக்கும் அப் பள்ளியின் இன்றைய இக்கட்டான நிலைக்கு சம்பந்தப்பட்ட கிளைத் தலைவர்களே பொறுப்பு என்று புக்கிட் செராக்கா மஇகா கிளையின் தலைவர் பெ.வேலாயுதம் சாடினார். புக்கிட் ஈஜோக் தோட்டத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிட் மஹாங் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் அப் போதைய தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கிய இருபது விழுக்காடு வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளாதது பெரும் தவறாகும் என்று கூறிய அவர், வீடமைப்புத் திட்டத்தில் 300 வீடுகள் கட்டப்பட்டதாகவும் அவற்றில் 60 வீடுகள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் விவரித்தார். இந்தியர்களுக்கு 2005-இல் வழங்கப்பட்ட அந்த அரிய வாய்ப்பை சம்பந்தப்பட்ட கிளைத் தலைவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் 60 குடும்பங்கள் அங்கு வாழ்ந்திருக்கும். புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் புத்துயிர் பெற்றிருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அல்லது அம்மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தையொட்டியே அப்பள்ளியை இடம் மாற்றியிருக்கலாம். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் மேற்கொள் ளப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஒட்டு மொத்தமான கோரிக்கைகளை எழுப்புவதற்கும் அந்தக் கிளைத் தலைவர்கள் இணங்கவே இல்லை என்று அவர் வருத்தப்பட்டார். ஜெரம் சட்டமன்ற தொகுதியின் அப்போதைய உறுப்பினர் புவான் ஹஜ்ஜா மெஸ்ரா செலாமாட் மூலம் அம்மலிவு வீட்டிற்கான விண்ணப்பப் படிவங்கள் வட்டார இந்தியர்களிடையே பெருமளவு விநியோகிக்கப்பட்ட போதிலும் இந்தியர்களுக்கு அதில் வாய்ப்பு வேண்டாம் என்று புவான் மெஸ்ராவிடம் அக்கிளைத் தலைவர்கள் ஒரு தீபாவளி உபசரிப்பின் போது நேரடியாக மறுத்து விட்டனர் என்று வேலாயுதம் ஏமாற்றம் தெரிவித்தார். ஒரு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிழைக்க வேண்டும் என்றுகூட அவர்கள் அப்போது நினைக்கவில்லை என்பது வேதனையான நிகழ்வு என்று அவர் கூறினார். நூற்றாண்டு வரலாற்றை கொண்டதென நம்பப்படும் புக்கிட் ஈஜோக் (யானை மலைத் தோட்டம்) தோட்டத் தமிழ்ப்பள்ளி அத்தோட்ட முன்னாள் இரப்பர் ஆலையையொட்டி புழுதி படலம் நிறைந்த மேடு பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாண்டு அப்பள்ளியின் முதலாம் ஆண்டில் ஒரு மாணவன் மட்டுமே சேர்ந்துள்ளதாகவும் ஆறாம் ஆண்டில் ஒரு மாணவர் மட்டும் எனவும் தெரிய வருகிறது. மெர்போ தோட்டத்திலிருந்து மலாய் மாணவன் ஒருவன் உட்பட இருவர் அப்பள்ளிக்கு செல்வதாகவும் அறிய வருகிறது. மொத்தம் ஏழு மாண வர்கள், தலைமையாசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள். இடம் மாற்ற பரிசீலனை இதனிடையே புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியை சிப்பாங், சுங்கை பீலேக் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யும் திட்டத்தை பிரதமர் துறையின் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு பிரிவு பரிசீலித்து வருவதாக நம்பப்படுகிறது. சிப்பாங் மாவட்டத்தை ஒட்டியுள்ள கோலலங்காட் மாவட்டத்தில் மூடப்பட்ட புக்கிட் சீடிங் தேயிலைத் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமம் என்னவானது என்று கேள்வி எழுப்பிய வேலாயுதம் சுங்கை பீலேக்கில் புக்கிட் சீடிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியை கட்டுவது பற்றி அம்மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் முதலில் ஆய்வு நடத்த வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார். புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி உரிமத்தில் அம்மேம்பாட்டு பிரிவு கை வைப்பதற்கு முன் நீண்ட ஆய்வுகளை அது மேற்கொள்ள வேண்டும். அப் பள்ளியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புஞ்சாக் ஆலம் பகுதிக்கு அதை இடம் மாற்றுவது குறித்து அரசாங்கம் திட்டமிட வேண்டும் என்று அத்தோட்ட தொழிற்சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் பழனியாண்டி மலையாளம் (வயது 80) வலியுறுத்தினார். புஞ்சாக் ஆலம் பகுதியிலுள்ள சௌஜானா உத்தாமா, தாமான் ஆலம் ஜெயா, புக்கிட் செராக்கா பசுமை புரட்சி குடியேற்றத் திட்டம் ஆகிய பகுதிகளில் அதி கமான தமிழர்கள் வசித்து வருவதால் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி அங்கு புதிய தோற்றம் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் அப்பகுதியில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சௌஜானா உத்தாமாவில் மட்டும் 400க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருப்பதாக தெரிய வருகிறது. 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புக்கிட் செராக்கா பசுமை புரட்சி நிலத் திட்டத்தின் சுமார் 180 இந்தியக் குடும்பங்கள் வசிப்பதாகவும் வேலாயுதம் சுட்டிக் காட்டினார்.ஆகவே புக்கிட் ஈஜோக் தோட் டத் தமிழ்ப்பள்ளி இடம் மாற்றம் திட்டத்தில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பகுதி இந்தியர்களின் கருத்தை அறிவது சிறந்தது. சம்பந்தப்பட்ட பகுதியில் தமிழ்ப்பள்ளி இல்லாததால் தமிழ் மொழி பற்றாளர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு வழியின்றி தேசிய பள்ளிகளில் சேர்ப் பதாகவும் அவர் விவரித்தார்.புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி அமைந்துள்ளது. கோலசிலாங்கூர் நாடாளுமன்றம் - ஜெரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேர்தல் வாக்கு சாவடி என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் சுமார் 147 இந்திய வாக்காளர்கள் கடந்த பொதுத் தேர்தல்களில் வாக்களித்துள்ளனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img