img
img

அந்நிய நாட்டவர்களிடம் பறிபோகும் வர்த்தக வாய்ப்புகள்
வியாழன் 01 ஜூன் 2017 11:40:09

img

கோலாலம்பூர் உடல் வளைத்து உழைப்பை அள்ளிக் கொடுத்தால் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கும் நாடுதான் மலேசியா. இந்தக் கூற்றை உள்ளூர் வாசிகள் நாம் நன்கு உணர்ந்து இருக்கிறோமோ இல்லையோ, அண்டை நாட்டவர்கள் தெளிவாகவும் ஆழமாகவும் அறிந்து உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவு, பிழைப்பைத் தேடி இங்கு வந்தவர்களில் பலர் இன்று வியாபாரங்களைச் செய்யத் தொடங்கி முதலாளிகளாகத் தங்களை உயர்த்திக் கொண்டுள்ளனர். அண்டை நாட்டவர் இங்கு வந்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் அளவிற்கு சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பட் சத்தில் இங்குள்ள நம்மவர்களின் நிலை எந்த அளவிற்கு உள்ளது என்பது சிந்தனைக்குரியதே. அந்நிய நாட்டவர்கள் இந்த மண்ணில் முதலாளியாகும் அதே சூழ்நிலையில் நம்மவர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலை உள்ளது என்றால், அது நமது இயலாமையா? அல்லது விதிமுறையில் காணப்படும் பலவீனமா? அமலாக்க நடவடிக்கைகளா? அரசின் கொள்கையில் காணப்படும் தளர்வுகளா? அல்லது வாய்ப்புகளைத் தவற விடும் மக்களின் சிந்தனைப் போக்கில் உள்ளதா? தலைநகரில் சில வர்த்தகச் சந்தை பகுதிகள் இன்று மியன்மார், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, நேப்பாள், வங்காளதேசம், தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, செலாயாங் மார்க்கெட்டை மியன் மாரைச் சேர்ந்த வியாபாரிகளும் சௌவ் கிட்டை இந்தோ னேசிய வியாபாரிகளும் பிரிக்பீல்ட்ஸ், மஸ்ஜிட் இந்தியா மற்றும் செந்தூல் பசார் போன்ற இடங் களை இந்தியா மற்றும் வங்காளதேச வியாபாரிகளும் ஆக்கிரமிப்பு செய்வதை நாமே நேரிடையாகக் கண்டு கொண்டிருக்கும் உண்மை. இந்த நிலைமை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கோ அல்லது 10 ஆண்டுகளுக்கோ நீடித்தால் இன்னும் பெரும்பான்மையான இடங்கள் அவர்களின் வசம் சென்று விடுவதோடு பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஏனென்றால், கடந்த ஆண்டில் செலாயாங் பசார் போரோங்கில் நிகழ்ந்த அந்நியர்களின் அராஜ கத்தை நாம் இங்கு நினைவு கூர வேண் டும். பாசார் போரோங்கிலுள்ள உள்நாட்டு வர்த்தகர்க ளிடம் மியன்மார் நாட்டவர்கள் பிரச்சினையை மேற்கொண்டதுடன் இதில் ஒருவரின் உயிரும் பலியாகியது. அதன் பின்னர் இரு கும்பல்களுக்கும் இடையில் நிகழ்ந்த பிரச்சினையை களைய அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நிலைமையைச் சரிசெய்ய சுமார் 1 வாரம் போலீஸ் அதிகாரிகள் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வியாபாரிகளும் உள்ளே செல்ல அஞ்சினர். இந்தச் சம்பவம் செலாயாங் என்னும் சிறு பகுதியில் நிகழ்ந்ததாகும். இதுவே நாடு முழுவதும் நிகழ்ந்தால், அதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொடுத்தால் பொதுமக் களின் பாதுகாப்பும் நிச்சயம் பாதிக்கப்படும். உள்நாட்டவர்களின் வர்த்தக வாய்ப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கோலாலம்பூர் மாநகர் மன்றம் அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறையை அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இங்கு வியாபாரம் செய்ய விரும்பும் அந்நிய நாட்டவர்கள் தங்களின் வியாபாரத்தின் உரிமை கொள்கையில் 50 விழுக்காடு உள்ளூர்காரர்களுக்கு பங்கு இருக்க வேண்டும். அதே வேளையில், அந்த வியாபாரத்தில் 50 விழுக்காட்டினருக்கு உள்ளூர்காரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏறக்குறைய 10 இலட்சம் வெள்ளியை முதலீடாகப் போட முடிந்தால் மட்டுமே அந்நிய நாட்டவர்களால் இங்கு வியாபாரத்தைத் தொடங்க முடியும் என்பதே அந்தப் புதிய சட்டமாகும். இதற்கு முன்பு இங்கு வியாபாரம் செய்யும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக பல விதிமுறைகளைக் கொண்டு வந்த போதிலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. விதிமுறைகள் கொண்டு வந்தும் அவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதி கரிக்கிறது என்றால் அந்த விதிமுறைகளின் அமலாக்கம் முழுமை பெறவில்லை என்றுதானே சிந்திக்கத் தோன்றுகிறது என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இந்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டியே கோலாலம்பூர் மாநகர் மன்றம் இத்தகைய விதிமுறையை அமலுக்குக் கொண்டு வர முனைந்துள்ளது. இந்த விதிமுறை இங்கு சிறிய அளவில் வர்த்தகம் மேற்கொண்டிருப் பவர்களிடையே, குறிப்பாக இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் வழி அறிய முடிந்தது. இந்த விதிமுறை சரியான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்பட்டால் இங்குள்ள சிறு வியாபாரிகள் அதிகம் நன்மையடைய வாய்ப்புண்டு என சித்ரா, குணமோகினி (பூக்கடை வியாபாரிகள்), ராஜா (சிறு உணவக உரிமையாளர்), பாலம்மா (பூக்கடை உரிமையாளர்), ராஜன் (மளிகைக்கடை வியாபாரி), கிருஷ்ணவேணி (சிறு உணவக உரிமையாளர்)ஆகியோர் தெரிவித்தனர். தலைநகரில் சில முக்கிய பகுதிகளில் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இங்குள்ள சிறு வியாபாரிக ளுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தாது. மேலும், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குக் கீழ் வேலை செய்ய வேண்டிய நிலையும் ஏற் படலாம். இதுவரையில் அவர் களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் நம்மவர்களுக்குக் கொடுக்கப்படாமல் இருப்பது வேதனையை அளிக்கிறது. இங் குள்ள வாய்ப்புகளை நம்மவர்கள் பயன்படுத்தாமல் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களுக்குத் தகுந்த வழியை அமைத்துக் கொடுக்காமல் இருப்பதுதான் இங்குள்ளவர்கள் இதில் தொடர்ந்து காலூன்ற பெரும் தடையாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். அதிகமான அந்நிய நாட்டவர்கள் இங்கு சிறு வியாபாரங்களைத் தொடங்கி முதலாளிகளாகுவதற்கு நம்மவர்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். வியாபாரத்திற்கான உரிமத்தைப் பெறும் உள்ளூர்வாசிகளில் சிலர் அதை அந்நிய நாட்டவர்களிடம் விற்று விடுகின்றனர்; வாடகைக்குக் கொடுக்கின்றனர் அல்லது குத்தகைக்கு விடுகின்றனர். காலப் போக்கில் அவர்களே முதலாளிகளாகவும் மாறி விடுகின்றனர். உரிமம் பெற்ற உள்ளூர்வாசிகளுக்கு அவர்களிடமிருந்து மாதம் குறைந்தபட்சம் வெ.1,000 கிடைப்பதால் அவர்களும் இவ்விவகாரத்தை வெறுமனே விட்டு விடுகின்றனர். இங்கு அந்நிய நாட்டவர்கள் சிறு வியாபாரம் செய்வதால் இங்குள்ளவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகக் குறை கூறும் அதே வேளையில் இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடக் கூடாது.அவர்கள் இங்கு வந்து வெறுமனே காலாட்டிக் கொண்டு முதலாளிகளாகி விடுவதில்லை. அவர்களின் உழைப்பு சில சமயங்களில் நம்மையும் அசர வைத்து விடுகிறது. எடுத்துக்காட்டிற்கு, தரை விரிப்பு வியாபாரத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் மூட்டையாகச் சுமந்து வந்துதான் வீடு வீடாகச் சென்று விற்பார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு சைக்கிளில் பின் மோட்டார் சைக்கிளில் விற்கத் தொடங்குவார்கள். காலப் போக்கில் குறிப்பிட்ட இலாபத்தைப் பெற்ற பிறகு அங்கேயே கடையையும் தொடங்கி விடுகின்றனர். நம்மவர்களின் சிந்தனை பெரும்பாலும் இதற்கு மாறாகவே உள்ளது. விதைத்த மறுநாளே அறுவடை செய்யத் துடிக்கும் மனப்பான்மைதான் அதிகம் என அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண பல சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றை அமல்படுத்துவதுதான் மிகவும் முக்கியம் எனவும் அமலாக்கத்தைச் செயல்படுத்தும் வரையில் அவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இயலாது எனவும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் வீ.சண்முகநாதன் தெரிவித்துள்ளார். இங்கு சிறு வர்த்தகத் துறையில் அந்நிய நாட்டவரின் ஆதிக்கத்திற்குப் பலரும் ஏதோ ஒரு வகையில் காரணமாக உள்ளோம். எனவே, இவ்விவகாரத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் செயல்பாடு மட்டும் போதுமானதாக அமையாது. அனைவரும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் இணைந்து செயல்பட்டாலே தவிர இது சாத்தியமாகாது என்பதையும் உணர வேண்டும். அதே சமயம், அவர்களால் தர இயலும் உழைப்பை ஏன் நம்மவர்களால் கொடுக்க இயலவில்லை என்பதையும் நாம் சிந்தித்து ஆராய வேண்டும். கொட் டிக் கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் பயன்படுத்துபவர்களைக் குறை கூறினால் சூழ்நிலை சரியாகி விடுமா என்பதையும் யோசிக்க வேண்டும். எது எப்படியாயினும், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் இந்தப் புதிய விதிமுறை சிறு வர்த்தகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதன் முழு அமலாக்கத்தில்தான் வெற்றி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img