img
img

ஆஸ்ட்ரோ சேவை மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள்!
திங்கள் 17 ஏப்ரல் 2017 17:11:23

img

தமிழ் சார்ந்த நிகழ்ச்சி களைத் தமிழர்களுக்கு வழங்குகிறோம் என்ற போர்வையில் தரமற்ற நிகழ்ச்சிகளையும் தொடர் நாடகங்களையும் ஒளிப்பரப்பி வரும் தனியார் நிறுவனமான ஆஸ்ட்ரோ மீது பொதுமக்கள் பெரும் அதிருப்தியைக் கொண்டுள்ளனர். தற்போது இவ்விவகாரம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து மலேசிய நண்பன் பொதுமக்களிடையே மேற்கொண்ட சிறப்பு நேர்காணலை ஏற்படுத்தியது. ஆஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகள் குறித்தும் அவற்றில் இடம்பெறும் நிகழ்ச்சிகளின் தரம் குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சிறப்பு நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. பெரும்பான்மையானோர் நீண்ட காலமாக ஆஸ்ட்ரோ சேவை குறித்து பெரும் அதிருப் தியை கொண்டுள்ளதையும், ஆஸ்ட்ரோவின் பல விஷயங்களை மக்கள் கவலையாக கருதுவதையும் இந்த நேர் காணலின் வழி உணர முடிந்தது. ''ஆஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில் மீண்டும் மீண்டும் அதே திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறார்கள், அவற்றை ஓரிரு முறை பார்க்கலாம். ஒளிபரப்புகிறார்களே என்பதற்காக ஒவ்வொரு முறையும் பார்க்க முடியுமா? நமக்கும் அலுப்பு தட்டிவிடுகிறதே! அவற்றிலும் சில திரைப்படங்களை ஏன் ஒளிபரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என்கின்றனர் காயத்ரி, ரீனா, கவிதா, கௌரி ஆகியோர். சில சமயங்களில், குறிப்பாகச் சித்திரைப் புத்தாண்டு போன்ற பெருநாள் காலங்களிலும் அனைத்து நல்ல திரைப்படங்களும் ஒரே நேரத்தில் அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஆஸ்ட்ரோவிற்குக் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் நிலை என்ன? இது போன்ற சூழ்நிலைகளாலேயே இப்போது எல்லாம் ஆஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளைப் பார்ப்பது பொதுமக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது என அவர்கள் குறிப்பிட்டனர். ஆஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானோர் இந்த நாட்டு மக்கள்தான். இத்தகைய சூழ்நிலையில் நம் நாட்டு அல்லது சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே இடம்பெறுகின்றன. கண்ணாடி போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகள் மிகவும் அபூர்வமாகத்தான் ஒளிபரப்பப்படுகின்றன என டினேஸ்வரி, விஸ்வநாதன், நந்தகுமார், கோமதி, தேவி ஆகியோர் கூறினர். ஆஸ்ட்ரோவில் நமக்கென உள்ள அலைவரிசைகளில் இந்திய அலைவரிசைகள்தான் அதிகம் உள்ளன. அவற்றிலும் பயனுள்ள நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றனவா என்பது கேள்விக்குறியே. பணம் செலுத்துவது நாம். ஆனால், நம்மைச் சார்ந்த விஷயங்களும் உள்ளூர் நிகழ்ச்சிகளும் இடம்பெறுவது மிகக் குறைவாகவே உள்ளன. ஆஸ்ட் ரோவின் பிற அலைவரிசைகளில் உள்ளதைப் போன்று நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தோ விவகாரங்கள் குறித்தோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது. இப்படி இந்திய நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது தொடர்ந்துகொண்டே இருந்தால் நம்மவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் களத்தை எப்போது கொடுப்பது? இன்றைய காலத்தில் நம்மவர்களின் படைப்புகளின் தரமும் உயர்ந்துகொண்டு வருவதை அனைவரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குறிப்பிட்ட சில திரைப்படங்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் இந்தச் சமூகத்திற்கு என்ன பயன் விளையப் போகிறது? இந்தச் சூழ்நிலையில் ஆஸ்ட்ரோவின் கட்டணமும் அதிகமாக உள்ளது. செலுத்துகின்ற கட்டணத்திற்கு ஈடாக அவற்றின் நிகழ்ச்சிகள் தரமுற்றதாக இருக்கின்றனவா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் கூற இயலும். முடிந்தளவிற்கு நிகழ்ச்சிகளின் வகைகளை அதிகரிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இது மலேசிய தமிழர்களின் பன்னெடுங் காலமான கனவு. இந்த நாட்டில் தமிழுக்கென்று சிறப்புத் தனி அலைவரிசை; அதில் தமிழ், தமிழ் சமூகம் சார்ந்த செய்திகள் என பல காலம் கண்ட கனவு, இந்த நொடி வரையிலும் வெறும் கனவாக மட்டுமே இருந்து வருகிறது. ஆர்டிஎம்மில்தான் தமிழ்ச்செய்தி வாசிக் கப்படுகிறதே என்பது எல்லாம் யானை பசிக்குச் சோளப்பொரி போடும் கதைதான். தமிழ் சமுதாயத்திற்கு ஒரு நாளில் அரை மணிநேரத்திற்கு இடம் பெறும் செய்தித்துளிகள் போதுமானதா? இல்லை, எல்லாவற்றையும் அந்த அரை மணிநேரத்தில் சுருக்கிவிடத்தான் இயலுமா? ஆஸ்ட்ரோவில் தமிழ்ச் செய்தி இடம்பெறுவது இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும் என பொதுமக்களிடையே எதிர்பார்க்கப்பட்டதாகவும் இன்று வரையில் அது எதிர்பார்ப்பாகவே உள்ளது எனவும் யசோதா, சாமி, தயாளன், தேன்மொழி, வளர்மதி ஆகியோர் தெரிவித்தனர். நொடிக்கு நொடி இந்திய, தமிழகச் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் தொடர்நாடகங்களுக்காகவும் அத்தனை அலைவரிசைகள் ஆஸ்ட்ரோவில் இருக்கும்பட்சத்திலும் அவற்றைச் செயல்படுத்த முடிகின்ற வேளையிலும் மலேசிய தமிழர்களுக்கான அலைவரிசையை மட்டும் ஆஸ்ட்ரோவால் ஏன் செயல்படுத்த இயலாது என அவர்கள் கேள்வி எழுப்பினர். இன்றைய காலக் கட்டத்தில் நமது இந்திய சமூகத்தில் வீட்டில் உண்ண ஒருவேளை உணவு உள்ளதோ இல்லையோ, ஆனால் அங்கு ஆஸ்ட்ரோவின் சேவை கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்கும். அந்தளவிற்கு ஆஸ்ட்ரோ சமுதாயத்தை ஆக்கிரமிப்புச் செய்து வருகிறது. ஆஸ்ட்ரோவின் ஆக்கிரமிப்பு சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே நேர்காணலில் கருத்துகளை வழங்கிய பொதுமக்களின் ஒருமிக்கக் கருத்தாக உள்ளது. சமுதாயத்தைப் பயனுள்ள வழியில் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு உடைய ஆஸ்ட்ரோ, குறிப்பாகத் தமிழ்ப்பிரிவு வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு தரமான நிகழ்ச்சிகளை இடம்பெறச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img