img
img

கலகத் தடுப்பு போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கிடையே ம.இ.கா. சிறப்பு பொதுப்பேரவை
திங்கள் 30 மே 2016 13:17:43

img

சுபாங் ஜெயா, மே 30- கட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு பேராளர்களின் அங்கீகாரத்தை பெறும் பொருட்டு நேற்று இங்கு நடத்தப்பட்ட ம.இ.கா. சிறப்பு பொதுப்பேரவை, டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு ஆதரவாளர்களிடையே நிகழ்ந்த கடுமையான வாக்குவாதத்தின் மத்தியில், கலகத் தடுப்புப் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மிகவும் அநாகரிகமான முறையில் இரு தரப்பிலும் வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டாலும், கலகத் தடுப்புப் போலீசாரை மீறி இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது. எனினும், தண்ணீர் பாட்டில்கள் அங்குமிங்கும் பறப்பதை போலீசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பேரவை மாநாடு நடைபெறும் மண்டபத்திற்குள் நுழைய பழனிவேல் தரப்பினர் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியும், சுப்ரா தரப்பினர் அதற்கு இணங்கவில்லை. காலை 11 மணிக்கு பேரவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் பழனிவேலின் ஆதரவாளர்கள் அங்கு குவியத் தொடங்கினர். பழனிவேலின் தீவிர ஆதரவாளரான ஏ.கே.ராமலிங்கம் 100 பேருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வரவிருப்பதாக தகவல் கிடைத்ததும் பேரவை நடைபெறும்ஒன் சிட்டி, கிரெண்ட் பால்ரூமின் ஐந்தாவது மாடியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டது. கலகத் தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். காலை 11.42 மணிக்கு ராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் ஐந்தாவது மாடிக்கு வந்ததும் அங்கு பதற்ற நிலை நிலவியது. அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ள தாங்கள் இங்கு படையெடுத்திருப்பதற்கான காரணத்தை ராமலிங்கம் விவரித்தார். இன்று (நேற்று) நடத்தப்படும் பேரவை சட்டவிரோதமானது என்று கூறிய அவர், பேரவை நடத்தப்பட வேண்டுமானால் நாங்களும் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும், எங்கள் கருத்துகளும் செவிமடுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார். காலை 11.59 மணிக்கு சுபாங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துவான் அஸ்லி, ராமலிங்கம் தரப்பினரை அணுக, அவர்கள் தங்கள் நோக்கத்தை தெரிவித்தனர். உள்ளே சென்று அனுமதி கேட்டு வருவதாகச் சென்ற அவர் 30 நிமிடங்களுக்குப் பிறகு ராமலிங்கம் தரப்பில் எவரும் உள்ளே நுழைவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். மாநாட்டு மண்டப நுழைவாயிலில் சுப்ரா தரப்பில் சில இளைஞர்கள் காவலுக்கு நிற்க, அடுத்த முனையில் பழனி தரப்பினர் கூட்டமாக நின்றிருந்தனர். இடையே கலகத் தடுப்புப் போலீசார் தங்கள் கடமையைச் செய்தனர். காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு கொச்சை வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டன. தண்ணீர் பாட்டில்கள் பறந்தன. பகல் 12.23 முதல் 12.32 மணி வரை வாக்குவாதம் வலுத்தது. பகல் 12.38 மணிக்கு ராமலிங்கம் முன்னிலையில் சென்று மண்டபத்திற்குள் நுழையும் முயற்சியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் முடியாமலே போனது. அவர்களுக்கு மாநாட்டு மண்டபக் கதவுகள் திறக்கப்படவே இல்லை. வெளியே இவ்வளவு பதற்ற நிலைக்கும் இடையே உள்ளே மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனிடையே, பகல் 12.10 மணிக்கு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக வெளியே தகவல் கிடைத்ததும் ராமலிங்கம் தரப்பினர் மண்டபத்திற்குள் நுழையும் தங்கள் முயற்சிகளை கைவிட்டனர். எங்கள் நோக்கமே தீர்மானம் நிறைவேற்றத்தை தடுத்து நிறுத்துவதுதான். இனி, பயனில்லை என்று ராமலிங்கம் பிறகு நிருபர்களிடம் தெரிவித்தார். குறிப்பாக, வரும் 14-ஆவது பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கத்தில், கட்சித் தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பான மத்திய செயலவை முடிவுக்கு பேராளர்களின் அங்கீகாரத்தை பெறும் தீர்மானத்தையே அவர் குறிப்பிட்டுச் சொன்னார். இந்த ஆண்டு கட்சித் தேர்தல்களை நடத்தியாக வேண்டும். டாக்டர் சுப்பிரமணியம் அவற்றை தள்ளி போடுவதற்கான உள் நோக்கம் என்ன என்று அவர் வினவினார். பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img