img
img

நாட்டை உலுக்கிய சோசிலாவதி கொலை வழக்கு!
வியாழன் 16 மார்ச் 2017 11:51:03

img

‘ஆசை, பேராசையாக மாறி, பேரலையாக பெருக்கெடுத்தால் ஆளை கொல்லக்கூட அது தயங்காது. அது ஒரு வகை பிசாசு. பண பேராசையால் ஏற்பட்ட வக்கிர புத்திதான் ஒரு வழக்கறிஞரான பத்ம நாபன் நல்லையன், தன் சகாக்களுடன் ஒரு கொலையாளி யாக மாறியுள்ளார்’ என்று அரசு தரப்பில் வாதத் தொகுப்பை முடிக்கும் போது, துணை பப்ளிக் பிராசிகி யூட்டர் சைபுல் இட்ரிஸ் ஜைனுடீன் ஷா ஆலாம் உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கிறார். ஒப்பனை நிறு வனத்தின் முதலாளி கோடீஸ்வரி சோசி லாவதி (வயது 47) , அவரின் கார் டிரைவர் கமருடீன் சம்சூடின் (வயது 44), வங்கி அதிகாரி நுர்ஹிஷாம் முகமட் (வயது 38), வழக்கறிஞர் அகமட் காமில் கரிம் (வயது 32) ஆகியோர் மிக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல் எரிக்கப்பட்ட பயங்கர கொலைச் சம்பவ வழக்கில்தான் இந்த உவமையை மேற்கோள்காட்டினார் துணை பப்ளிக் பிராசிகியூட்டர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கும் 9.40 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பந்திங் தஞ்சோங் சிப்பாட், ஜாலான் தஞ் சோங் லாயாங், காடோங்கில் ஒரு பண்ணை வீட்டில் இந்த நால்வரையும் கொலை செய்ததற்காக பந்திங்கை சேர்ந்த வழக்கறிஞர் பத்மநாபன் நல்லை யன் (வயது 44), தில்லைழயகன் (வயது 22) மதன் (வயது 23), ஆர். காத்த வராயன்(வயது 30) ஆகியோருக்கு கடந்த 2013 மே 23 ஆம் தேதி ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. சுமார் 2 மாத காலம் காப்பிக்கடை முதல் பட்டித் தொட்டி வரை யில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு நாட் டையே உலுக்கிய இப்படியொரு கொலை வழக்கை மலேசிய போலீஸ் துறை இதுவரையில் சந்திக்காததாகும். கொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களும் கிடைக்கவில்லை. அவை எரித்து சாம்பலாக்கப்பட்டு விட்டது. உடல்கள் இல்லாமல் குற்றஞ்சாட் டப்பட்ட நால்வருக்கும் தண்டனை பெற்று தருவது எளிதான காரியம் அல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரா, தாப்பாவில் வாகனம் பழுது பார்க்கும் பட்டறை வளாகத்தை கொண்ட ஒரு பலகை வீட்டில் நால்வர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப் பட்ட மெக்கானிக்கான ஓர் இந்தியர் மற்றும் அவரின் மகன் ஆகியோரை இன்று வரையில் நீதிமன்றத்தில் போலீசாரால் குற்றஞ்சாட்ட முடியவில்லை. கொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்கள் கிடைக்காததால் தந்தையையும் மகனையும் நீதியின் முன் நிறுத்துவது சிரமான ஒன்று கருதி அவர்கள், சிறப்பு சட்டத் தின் பேரில் சிம்பாங் ரெங்கம் சிறைச் சாலையில் அடைத்து வைக்கப்பட் டுள்ளனர். ஆனால், சோசிலாவதி மற்றும் இதர மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் எப்படி தண்டனை பெற்றுத் தர முடிந்தது? குற்றவியல் சட்டம் 302 பிரி வின் கீழ் கொலை வழக்கு களில் மூன்று எதார்த்தமான அம்சங்களை ஏற்றுக்கொள் வதற்கு நீதித்துறை அனு மதிக்கிறது. கொலையுண்ட வர்களின் உடல்கள் மீட்கப் பட்ட பின்னர் அந்த கொலைக்கு காரணமாக இருக் கின்றவர்கள் கைது செய்யப் படுகின்றனர். இதில் கொலையை பார்த்தவர்களின் சாட்சியங்கள் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுகிறது. மற்றொரு நடை முறையில் உடல்கள் கிடைக்காத நிலையில் சந்தர்ப்ப சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதற்கு நீதித்துறை அனுமதிக்கிறது. சோசிலாவதி கொலை வழக்கில் சந்தர்ப்ப சாட்சியங்களை அடிப்படையாக கொண்டே பத்மநாபன் உட்பட நால் வரும் குற்றவாளி என்று உறுதி செய்யப் பட்டு,தூக்குத் தண்டனை விதிக்கப் படுவதாக உயர்நீதிமன்றம் அறிவித் துள்ளது. பினாங்கில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் அருகில் புக்கிட் ஜம்புலில் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கு சரியான நபரை கோலாலம்பூரை சேர்ந்த சோசிலாவதி யும் காப் பார், செமந்தா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரஹ்மான் பாலி லும் தேடிக்கொண்டு இருந்த போது, பந்திங் கில் பத்மா அண்ட் பாட்னர் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக அவர்களுக்கு வழக்கறி ஞர் பத்மநாபன் அறிமுகமாகியிருக்கிறார். பினாங்கில் அந்தக்காலத்தில் செட்டி யார்கள் கைவிட்டு சென்ற நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்டெ டுக்கும் தரகர் வேலையை செய்து வந்த பத்மநாபன், சோசிலாவதியின் நிலத்திற் கும் ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். தன்னுடைய ஒப்பனை நிறுவனத்தை பங்கு சந்தையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற வேட்கையில் இருந்த சோசிலாவதி 2004 இல் 20 லட்சம் வெள்ளிக்கு வாங்கிய அந்த நிலத்தை ஒரு கோடியே 20 லட்சம் வெள்ளிக்கு விற்பனை செய்ய முடிவெடுத்தார். இதற்கு முன்பணமாக அந்த நிலத்தை வாங்க முன்வந்தவர் 40 லட்சம் வெள்ளியை சோசிலாவதியிடம் ஒப்படைப்பதற்கு ஏதுவாக பத்மநாபனின் வழக்கறிஞர் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், அந்தப் பணத்தில் பெரும் பகுதியை பத்மநாபன் செலவு செய்து விட்டதாக நம்பப்படுகிறது. எனவே சோசிலாவதியிடம் பணத்தை திரும்ப ஒப்படைப்பதில் பத்மநாபன் இழுத்தடிக்கும் போக்கை பல மாதங்களாக கடைப்பிடித்து வந்துள்ளார். சோசிலாவதியின் நச்சரிப்பு தாங்க முடியாத நிலையில் கடைசியாக அவர் 9-9-2010 என தேதியிடப்பட்ட 40 லட்சம் வெள்ளிக்குரிய ஒரு காசோலையை கொலை நடப்பதற்கு 30-8-2010 முன்னதாகவே சோசிலாவதியிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், அந்த தேதிக்குள் அவ்வளவு பெரியத் தொகையை திரட்ட முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியிருந்த வேளையில்தான் சோசிலாவதி மற்றும் அவரை சார்ந்த இதர மூவரையும் தீர்த்துக்கட்டும் முடிவுக்கு பத்மநாபன் ஆளானார் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் சைபுல் தனது வாதத்தில் முன்வைத்தார். * சோசிலாவதி உட்பட நால்வரும் சம்பவம் நிகழ்ந்த அன்று பத்மநாபனை பார்ப்பதற்காக பந்திங்கில் உள்ள அவரின் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு செல்வதாக தனது மகள் எர்னி டெக்ரியாவதியிடம் சோசிலாவதி கூறி விட்டுச் சென்றுள்ளார். * 10-9-2010 அன்று கொண்டாடப்படும் ஹரிராயாவிற்கு தனது நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காசோலைக்கு பதிலாக முன்கூட்டியே ஒரு பெரும் தொகையை பெறுவதற்காக பந்மநாபன் அலுவலகத்திடம் செல்கிறேன் என்று சோசிலாவதி தனது மகளிடம் கூறியுள்ளார். * சோசிலாவதியிடம் 30 லட்சம் வெள்ளி தருவதாக கூறி, அவரை பந்திங்கிற்கு வரச் சொன்ன பத்மநாபனின் அன்றைய 30-8-2010 வங்கி கணக்கில் 13 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மட்டுமே இருந்ததாக வங்கி அதிகாரி வோனி தியோங் குவாட் கூறியுள்ளார். சோசிலாவதியிடம் 30 லட்சம் வெள்ளி செலுத்தும் அளவிற்கு பத்மநாபனிடம் பணம் இல்லை என்று அந்த அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். * வழக்கறிஞர் அலுவலகத்தின் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் போடப்பட்ட பணத்தை தனது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றுவதற்காக சோசிலாவதி அனுமதி வழங்கியதைப் போல ஒரு கடிதத்தை பத்மநாபன் தயாரித்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கடிதத்தை கணினி தடயவில் போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் சுசானா, பத்மநாபன் அலுவலகத்திலிருந்து மீட்டுள்ளார். * சோசிலாவதியின் பணம், தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் சேர்ப்பதற்கு முன்னதாக பத்மநாபனின் கணக்கில் 313 வெள்ளி 35 காசு மட்டுமே இருந்துள்ளது. * அந்தப் பண்ணை வீட்டில் ஒரு தகரத்திலிருந்து மீட்கப்பட்ட சில எலும்புத்துண்டுகள், மனிதர்களுடையது என்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை யின் தடயவியல் நிபுணர் டாக்டர் நுர்லிசா உறுதி செய்துள்ளார். அவ்விடத்தில் படிந்திருந்த ரத்தக்கறை, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் மரபணு சோதனையில் ஒத்து இருந்தது. * கொலை நடந்த அன்று பத்மநாபனின் பண்ணை வீட்டில் வேலை செய்து வந்த இந்தோனேசியப் பெண் சித்தி ஹமிடா என்பவர், 30-8-2010 ஆம் தேதி இரவு ஒரு பெண் இரண்டு முறை பயங்கரமாக அலறினார் என்றும் அந்த சத்தம் அடங்கிய சிறிது நேரத்தில் பண்ணை வீட்டுப்பகுதியில் பெரும் தீ மூட்டப்பட்டுள்ளது. * அன்றைய தினம் மாலையில் சோசிலாவதி மற்றும் இதர மூன்று பேர் அந்தப் பண்ணை வீட்டிற்கு வந்ததையும் தாம் பார்த்ததாக அந்தப் பணிப் பெண் சாட்சியம் அளித்துள்ளார். பத்மநாபனுக்கு உதவியான அந்தப் பண்ணை வீட்டில் மதன், காத்தவராயன், தில்லையழகன் இருந்ததையும் அவர் பார்த் துள்ளார். * ஏற்கனவே ஓர் இந்தியப் பிரஜையான கந்தன் முத்துராஜா மற்றும் ஒரு வர்த்தகர் ஷபிக் தேவேந்திரன் அப்துல்லா ஆகியோர் அந்த பண்ணை வீட்டிற்கு வந்தப் பின்னர் அன்றிரவு இதேபோன்று தீயிடப்பட்டதையும் தாம் பார்த்தாக அந்தப் பணிப் பெண் சாட்சியம் அளித்துள்ளார். * வங்கி அதிகாரி நுர்ஹிஷாமின் மனைவி, சம்பவம் நிகழ்ந்த அன்று இரவில் கைத்தொலைபேசியில் அழைத்த போது, தாம் சோசிலாவதியுடன் நில விவ காரம் தொடர்பில் பந்திங்கில் இருக்கிறேன் என்றும் தாம் மறுநாள்தான் வர முடியும் என்று பயந்தவாறு தொலைபேசியின் தனது கணவர் பேசினார் என்று சாட்சியம் அளித்துள்ளார். * தொலைத்தொடர்பு அதிகாரிகள் தங்களின் சாட்சியத்தில் சோசிலாவதியின் மகள் மற்றும் வங்கி அதிகாரியின் மனைவி ஆகியோர் கைத்தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது, அந்த அழைப்பு பந்திங்கில் காடோங் பகுதிக்கு சென்று இருப்பதை உறுதி செய்துள்ளனர். * இதற்கு மேலாக சோசிலாவதிக்கு சொந்தமான விலை உயர்ந்த கைக்கடிகாரம், கைப்பை போன்றவற்றை இதர குற்றவாளிகள் ஆற்றில் வீசியுள்ளனர். அவற்றை முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. * ஆனால், இவற்றையொல்லாம் மறுப்பதற்கு குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் எதிர்வாதத்திற்கான சாட்சியங்கள் அல்லது நிபுணர்களை கொண்டு மறுப் பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியென்றால் இந்த கொலை நிகழும் போது நால்வரும் பத்மநாபனின் பண்ணை வீட்டில்தான் இருந்துள்ளனர் என்பதை உறுதி செய்கிறது. அவர்களின் உடல் கிடைக்கவில்லையென்றாலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது நால்வருமே இந்த கொலையை செய்துள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்கள் இல்லாமலேயே தேவையான அனைத்து சாட்சிப்பொருள்களையும் திரட்டிய அரச மலேசியப் போலீஸ் படை குறிப்பாக இந்த கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. முகமட் இஷாக்கிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பிராசிகியூஷன் தரப்பில் 108 சாட்சியகளும் எதிர்தரப்பில் 30 சாட்சிகளும் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 742 சாட்சியப் பொருள்களையும் கொண்டு நீதிபதி டத்தோ அக்தார் தாஹிர் முன்னிலையில் ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் 113 நாட்கள் இந்த கொலை வழக்கு நடைபெற்றது .6 ஆயிரம் பக்கங்களை உள்ளடக்கிய குறிப்பை கொண்ட இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பத்மநாபன் உட்பட நால்வர் செய்து கொண்ட மேல் முறையீடு அப்பீல் நீதிமன்றதில் நிராகரிக்கப்பட்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் கடைசி மேல்முறையீடு இன்று வியாழக்கிழமை காலையில் புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்தில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் முன் னிலையில் நடைபெற்றது. பத்திரிகைகளிலும் மின்னியல் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்த இவ்வழக்கில்ன் தீர்ப்பு மூவரை தூக்கில் இடுவதாக அமைந்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img