தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்டத்தில், ரேசன்கடை ஊழியர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அங்குள்ள ஏ 485 பெரியகுளம் கூட்டுறவு பண்டக சாலைக்கு சொந்தமான 15 எண் கொண்ட ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், இவர் ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, ரமேஷை காப்பாற்றி, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேஷ் பணியாற்றும் ரேஷன் கடை செயல்படும் கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், அதனால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மூட்டை ரேஷன் அரசி மழையில் நனைந்து சேதம் அடைந்துவிட்டதாகவும், ஆனால் அந்த அரிசியை விநியோகம் செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரி மனோகரன் உத்தரவிட்டதாகவும், இதனால் மன உளச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ரமேஷ் எழுதிய அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மழையில் நனைந்த அரிசியை ரமேஷ் அப்புறப்படுத்திவிட்டதாகவும், ஆனால், ரமேஷ் தவறான கணக்கு எழுதியதாகவும், இதனை சோதனையின்போது கண்டுபிடித்து மனோகரன் தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.