img
img

வெடிகுண்டா? 3 மலேசிய விமானங்களில் கடும் சோதனை
வியாழன் 12 ஜனவரி 2017 12:20:52

img

மும்பை, ஜன. 12- கோலாலம்பூருக்கு புறப்பட தயார் நிலையில் இருந்த மூன்று மலேசிய விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுப்பிரிவிலிருந்து ( சி.பி.ஐ.) கிடைக்கப்பட்ட உளவுத் தகவலை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை சத்திரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையம் மிகுந்த பரபரப்புக்கு ஆளானது. அந்தமூன்று மலேசிய விமானங்களிலும் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றுவதற்காக மோப்ப நாய்களுடன் அதிரடியாக சோதனையில் இறங்கியது இந்தியாவின் வெடிகுண்டு செயலிழப்பு மின்னல் பிரிவு. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுடன், அந்த மூன்று விமானங்களிலும் சுமார் 6 மணி நேரம் இடைவிடாது சோதனை நடத்தப்பட்டது. இதனால் அந்த விமானங்கள் மிகுந்த காலதாமதத்துடன் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலையில் மும்பையிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட அனுமதிக்கப்பட்டன. மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான இரண்டு விமானங்களும் மலிண்டோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானமும் இதில் சம்பந்தப்பட்டு இருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மும்பை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த மலேசிய விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து திங்கட்கிழமை இரவு அந்த மூன்று விமானங்களும் புறப்பாடுலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டன. இந்திய புலனாய்வு பிரிவு ( சி.பி.ஐ.), இந்திய உளவுத்துறை மற்றும் விமான பாதுகாப்பு சேவைப்பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளும் ஒரே சமயத்தில் வெடிகுண்டு தொடர்பான தகவலை கொண்டு இருந்ததால் அந்த மூன்று விமானங்களிலிருந்தும் 400 க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மறுபடியும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதேவேளையில் அந்த மூன்று விமானங்களிலும் இருந்த 500க்கும் மேற்பட்ட பயணப்பெட்டிகள் மறுபடியும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பயணப்பெட்டிகளுக்குள் இருந்த பொருள்கள், மதுபான போத்தல்கள், கைப்பைகள், உணவுப்பொருள்கள் என பயணிகள் வைத்திருந்த மற்றும் விமான சரக்கு பிரிவுக்குள் அனுப்பப்பட்ட ஒவ்வொரு பொருளும் மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்டன. கோலாலம்பூரை நோக்கி இரவு 11.15 மணியளவில் 140 பயணிகளுடன் புறப்படவிருந்த மலிண்டோ ஏர் விமானம் ஓ.டி. 216, இரவு 11.25 மணிக்கு 158 பயணிகளுடன் புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸில் எம்.எச். 195 விமானம், அதிகாலை 2 மணிக்கு 145 பயணிகளுடன் புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸின் எம்.எச். 187 விமானம் ஆகியவற்றில் இருந்த பயணிகளிடம் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகத்திற்கு இடமான தகவலை தாங்கள் பெற்று இருப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர் என்று அந்த பத்திரிகை செய்தி கூறியது. இதனை கேட்ட பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்; பதற்றப்பட்டனர். ஆனால், பாதுகாப்புக்காக இந்த சோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகளே தாங்களாகவே முன்வந்து பாதுகாப்பு சோதனைக்கு உட்பட்டார்கள் என்று விமான நிலைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த அதிரடி சோதனை இரவு 10 மணி முதல் தொடங்கி மறுநாள்காலை 6.23 வரையில் நடைபெற்றது. எந்தவொரு சந்தேகத்திற்குரிய பொருளையும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு மின்னல் பிரிவினர் இது வெடிகுண்டு புரளி என்று முடிவுக்கு வந்தனர். அதன்பின்னரே பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிறகு அந்த மூன்று மலேசிய விமானங்களும் கோலாலம்பூருக்கு புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன. ஏர் மலிண்டோ விமானம் செவ்வாய்க்கிழமை காலை 11.20 மணிக்கும், எம்.எச். 195 விமானம் காலை 11.35 மணிக்கும், எம்.எச். 187 விமானம் பிற்பகல் 1.56 மணிக்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கின. அண்மையில் இரண்டு விமான நிலையங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலையில் விமான நிலையங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெல்ஜியம், புருசெல்ஸ் விமான நிலையத்தில் இரண்டு வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அந்த நாட்டை உலுக்கின. அதேபோன்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
நாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி!

அமைச்சர் எம்.குலசேகரன்

மேலும்
img
இம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை!

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்

மேலும்
img
குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்

மேலும்
img
30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img