(சுகுணா முனியாண்டி)
ஆரியமாலா குணசுந்தரம் - மலேசியாவின் பிரபலமான பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.
தாய்க்குத் தாயாக, தமிழுக்குச் சேயாக இருந்து வாழ்நாள் முழுவதும் இலக்கிய சமூகப் பணிகளில் தன்னை பிணைத்துக் கொண்டவர். அவரின் எழுத்துப்பணி 1970-இல் தொடங்கியது. எழுத்துலகில் பிரகாசிக்கும் பெண்களில் பலருக்கும் அவர்களின் குடும்பமும் குடும்பச் சூழலும் ஒரு தடையாக விளங்குவதுண்டு. ஆனால், ஆரியமாலாவின் எழுத்தாற்றலுக்கு ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் ஊட்டி அவரின் வளர்ச்சிக்கு காரணமானவரே அவ ரின் கணவர் குணசுந்தரம்தான்.
தம் இளம் வயதில் மலேசிய வானொலிக்கு கட்டுரைகளும் துணுக்குகளும் எழுதத் தொடங்கியவர், பிறகு, 1972-இல் ‘நம்பிக்கை வாழட்டும்’ என்ற தலைப் பில் தன் முதல் சிறுகதையை எழுதினார். ம.தி க வெளி யிட்ட மாத இதழில் இது இடம்பெற்றது.மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் திருச்சுடர் கே. ஆர். இராமசாமி ‘புரட்சி மலர்’ என்ற புனைப் பெயரை இவருக்குச் சூட்டினார். இவரின் முதல் கதையே இந்த புனைப் பெயரில்தான் வெளியானது.
1951-ஆம் ஆண்டு, பேரா மாநிலம் பத்து காஜாவில் சின்னையா -முனியம்மா தம்பதியருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் செலாமா, ஹோலிருட் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கினார்.பேருந்து நிறுவனமொன்றில் பணியாற்றிய குணசுந்தரத்தை 1973-ஆம் ஆண்டு திருமணம் செய்த பின்னர் பட்டர்வொர்த்வாசியாக மாறிய இவர் பட்டர்வொர்த் ஆரியமாலா என்று பிரபலம் அடைந்தார்.
த.மு. அன்னமேரி இவரின் நெருங்கிய தோழி. அவரின் மூலமாக செபராங் பிறை தமிழ் எழுத்தாளர் சங்கம், பினாங்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் உறுப்பியம் பெற்று சங்க நடவடிக்கையோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
அக்காலகட்டத்தில் த.மு.அன்னமேரி, செபராங் பிறை தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப் பேற்றிருந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் சமூகத்தில் பல சேவைகளாற்றி, பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறார். ஆரியமாலா தமது கடந்த கால அனுபவங்கள் பற்றி மலேசிய நண்பனுடன் பகிர்ந்து கொள்கிறார்:-
‘பத்து, 11 வயதிருக்கும் போதே வாசிப்பதில் எனக்கு அதிக ஆர்வம். புத்தகமும் கையுமாகத்தான் இருப்பேன். என் கையில் எது கிடைத்தாலும் அது வாசிப்பு நூலாக மாறிவிடும். உனக்கு புத்தகப் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று அம்மா அடிக்கடி திட்டுவார்.
ஆரம்ப காலத்தில் தோட்டத்தில் வசிக்கும் போது ஸ்டைலுக்காக ஆங்கிலம் அதிகம் பேசுவேன். எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ‘கந்தசாமி மாமா’ அந்த காலத்தில் வெளிவந்த பெரும்பாலான புத்தகங்களை வாங்கி வாசிப்பார். எனக்கும் வாசிக்கக் கொடுப்பார். அப்படித்தான் எனக்கு வாசிப்பதில் ஈடுபாடு ஏற்பட்டது.
ஆனந்த விகடன், குமுதம், அம்புலி மாமா போன்ற இதழ்களையும் நாளிதழ்களையும் எனக்கு வாங்கி கொடுக்கும் ஒரே மனிதர் அவர்தான். பிறகு, தமிழில் பேசவும் தமிழின் மேல் பற்று ஏற்படுவதற்கும் அவரே காரணமாக இருந்தார். எனக்கு 12 வயது இருக்கும் போது அவர் இறந்து விட்டார். அவரின் இறப்பு எனக்கு பேரிழப்பாக இருந்தது. என் எண்ணத்திற்கு முதலில் வந்தது-இனி எனக்கு யார் தமிழ்ப் புத்தகங்களை வாங்கித்தருவார்கள் என்பதுதான்.
எழுதத் தொடங்கினேன்
அதன் பிறகு அதிகமாக எழுதத் தொடங்கினேன். முதலில் சின்ன சின்ன கட்டுரைகளை எழுதினேன். பேட்டிகள் எடுத்து எழுதி அனுப்பினேன். முதலில் உதயம், பின்னர் வானம்பாடி, வானொலி, சிங்கப்பூர் வானொலிக்கு நாடகங்கள், கொள்கை முரசு நாளிதழுக்கு கதை, நாடக வசனங்களை எழுதுவது, அதன் பிறகு தொடர்ந்து சிறுகதை, கவிதை போன்றவற்றுடன் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேடை நாடகங்களையும் எழுதினேன்.
பல போட்டிகளில் எனக்கு பரிசுகளும் குவிந்தன. இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட கதைகளையும் பல்வேறு எழுத்துப்படிவங்களையும் படைத்தி ருக்கிறேன் என்றார் ஆரியமாலா. பெரியார் பாசறையில் வளர்ந்த ஆரியமாலா, சமூக சீர்திருத்த சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்புகளிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். இவரது படைப்புகள் வராத மலேசிய தமிழ் நாளேடுகளே இல்லை எனலாம்.
தன் கணவர் குணசுந்தரம் வழங்கிய ஆதரவைப் பெரிதாக நினைக்கின்றார். தனது எழுத்துலக வளர்ச்சிக்கு அவர் வழங்கி வரும் ஆதரவு அளப்பரியது என்றார். இவருக்கு ஹேமாவதி, கணேஷ், கனிமொழி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
செபராங் பிறை தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம், பினாங்கு முத்தமிழ்ச் சங்கம் ஆகியன விருது வழங்கி சிறப்பித்துள்ளன. 2011-இல் பினாங்கு ஆளுநர் பிறந்த நாளை முன்னிட்டு பி. ஜே. எம். விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2002-இல் மலேசிய தேசிய எழுத்தாளர் தின நிகழ்வின் பொது பாரதி தாசன் பேரியக்கத்தின் படைப்பிலக்கிய ஜோதி எனும் விருது இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 2013-இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவ ருக்கு முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியம் விருது வழங்கி சிறப்பித்தது. 2014-இல் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப்பதக்கம், பவுன் பரிசு வழங்கப்பட்டது.
தன் சிறுகதைகளைத் தொகுத்து நம்பிக்கை வாழட்டும், செடியை வீழ்த்திய மலர்கள் ஆகிய நூல்களை இவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.