கூட்டத்தில் மாநில துணை தலைவர் ஞானதேசிகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவை தங்கம், விடியல் சேகர், இளைஞர் அணி நிர்வாகி யுவராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ரூ.5 லட்சம் மதிப்பில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அரசு பள்ளிகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசியதாவது:- சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாவட்டந்தோறும் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகிறேன். இயக்க உணர்வோடு வருங்கால வெற்றிக்கு அடித்தளம் அமையும் வகையில் 24 மாவட்டங்களிலும், 9 ஆயிரம் வட்டார, நகர, ஊராட்சி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து விட்டேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை பெற்றோம். அதை பாடமாக கொண்டு வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற உழைக்கும் உயிரோட்டமான கட்சியாக த.மா.கா. உள்ளது. மற்ற கட்சியை விமர்சிக்கும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. இருப்பினும் சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லையே என்ற வருத்தம் உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு பஞ்சம் என்று மக்கள் நினைக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. பலமான இடங்களில் பலம் வாய்ந்த நிலையோடு போட்டியிடும். மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையில் அவசரம் காட்டக்கூடாது. நடுநிலையோடு கல்விக்கொள்கையை கொண்டு வர வேண்டும். கல்விக்கொள்கையை அமல்படுத்தும் முன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும். கல்வியை வணிக மயமாக்காமல் ஏழை, எளியவர்களுக்கு பயன்படும் வகையில் கல்விக்கொள்கையை கொண்டு வர வேண்டும். மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சனைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு காண வேண்டும். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மத்திய அரசு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற சுமூகமாக தீர்வு காண வேண்டும். த.மா.கா. மக்கள் விரும்பும் கட்சியாக உள்ளது. இந்த கட்சியில் இருந்து சிலர் சுய லாபத்துக்காக விலகி மற்ற கட்சியில் சேர்ந்துள்ளனர். இதனால் த.மா.கா.வுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பொதுமக்கள் மனநிலை மாறி பொது நலத்துக்காக, ஜனநாயகத்துக்காக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்