செபராங் பிறை,
பெண் வர்க்கம் அடுப்படியிலேயே அடிமையாகி, அவர்களின் வாழ்க்கை முடிந்து போகும் காலம் மலையேறி விட்டது. இப்போது சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைக்க முடியும் என்ற நிலையில் காலம் கனிந்து விட்டது.
அம்மாதிரியான சிறந்த எடுத்துக்காட்டுதான் தன் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வரும் ஜோதி சுப்பிரமணியம் (56).இல்லத்தரசியாக இருந்து இலக்கிய பாதையை தன் வசமாக்கி, சுவாரஸ்யமான வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கும் இவரின் சாதனைகள் ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மகுடம் சூட்டியதற்கு சமம்.
தற்போது இவர் குடியிருப்பது பினாங்கு, நிபோங் திபாலில் உள்ள தாமான் கோவீன் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்தது பேரா, துரோலாக் எனுமிடத்தில். சுப்பிரமணியம்-அஞ்சலை தம்பதியரின் ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளையாய் பிறந்தவர்.
துரோலாக் தோட்டத்து மண்ணின் மடியில் தவழ்ந்த இவர், தமது தொடக்க கல்வியை துரோலாக் தமிழ்ப்பள்ளி யில் தொடங்கினார். ஆறாண்டுகள் தமிழ் அன்னையை நேசித்த ஜோதிக்கு அப்போதுதான் பாலுக்குள் மறைந்தி ருக்கும் நெய்யைப் போல தமக்குள் மறைந்திருக்கும் பேச்சாற்றலை அறிந்ததாக மலேசிய நண்பனுடனான நேர்காணலில் கூறினார்.
ஜோதி சுப்பிரமணியம் தமது நேர் காணலில் மேலும் கூறியது:
்தமிழ் மணம் எனக்குள் முற்றாக பரவிக்கிடந்தது. பள்ளியில் நடைபெறும் புதிர் போட்டி, நாடகம், பேச்சுப் போட்டி போன்றவற்றில் மிகவும் உற்சாகமாக பங்கெடுத்து பரிசுகளைக் குவித்தேன்.
ஒன்பது வயதிலேயே வாசிக்கும் பழக்கம் என்னுள் வேரூன்றி இருந்தது. வார, மாத இதழ்கள், நாளிதழ்கள், கதை நூல்கள், நாவல்கள் என நிறைய வாசிப்பேன். அது எனக்குள் ஒரு வேட்கையாக மாறிவிட்டிருந்தது. அந்த சமயத்தில் புத்தகங்கள்தான் எனக்கு உற்ற தோழியாக விளங்கின.
தோட்டத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு ஒரு தந்தையால் எத்தனை குழந்தைகளை படிக்க வைக்க முடியும்?
ஆனாலும், என் பெற்றோர் ஒன்பது பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். ஏழ்மை யிலும் பிள்ளைகளின் அறிவுக் கண்களை திறந்து வைத்த பெற்றோரை இவ்வேளையில் என்னிரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இடைநிலைப்பள்ளியில் படிவம் நான்கோடு கல்விக்கு முற்று புள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். மூத்த பிள்ளை என்பதால் குடும்பச் சுமைகளை தோளில் சுமக்க வேண்டிய கட்டாயம். அந்த குடும்பச் சூழ்நிலையை மனதில் சுமந்து, அதிகாலையிலேயே தோட்டத்தில் பால் மரம் சீவும் வேலைக்கு சேர்ந்தேன்.
பால் மரம் சீவும் களைப்பு ஒரு புறம் இருந்தாலும், தமிழின் பால் கொண்ட காதல் காரணமாக வாசிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. நாளிதழ்களுக்கு எழுதினேன். வாசகர் கேள்வி-பதில், சொந்த கருத்து, கவிதை, கட்டுரை, கதை என என் இலக்கிய பாதையில் பயணம் தொடர்ந்தது.
பிறகு திருமணம் என்று வந்ததும், மற்ற பெண்களைப் போலவே எழுத்துலகைப் பற்றி சிறிது காலம் மறந்து போனேன். கணவர், குடும்பம், பிள்ளைகள் என என் வாழ்க்கையின் வட்டம் பெரிதானது. இப்படியாக 25 வருடங்கள் ஓடி மறந்தன. நான்கு ஆண் மக்களைப் பெற்றெடுத்து அவர்களுக்கு தமிழரசன், தேனமுதன், கவிபிரியன், செல்லபிரியன் என அழகாய் தமிழில் பெயர் சூட்டினேன். அப்போதுதான் என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. மலேசிய தமிழ் இலக்கிய கழகம் நடத்தி வந்த தமிழ் இலக்கிய பட்டையக் கல்வியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு கிடைத்தது.
அழைப்பை விடுத்தவர் நிபோங் திபால் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஐயா பொ.தண்ணீர்மலை. நிபோங் திபால் நகரிலே இலக்கிய கல்வியை போதிக்கலாம் என அவர் முடிவு செய்த போது முதலில் அவருக்கு நான்தான் நினைவுக்கு வந்தேன்.
இதை அவரே என்னிடம் கூறினார். என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
அவர் கொடுத்த உற்சாகத்தில் வகுப்பில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே பயம் தெளிந்தது. மூன்றா ண்டுகள் பட்டயக் கல்வியை முடித்துவிட்டு தமிழ் இலக்கியத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றேன். அதன் பிறகு, கழகத்தின் தலைவர் தமிழ்ப்புனல் மணி வெள்ளையனின் வேண்டுகோளுக்கு இணங்க இளங்கலை பட்டமும் பெற்றேன்.
என் தமிழ் ஆர்வத்தை உணர்ந்த ஆசிரியர், என் அன்புக் கணவர் இருவரும் அளித்த உற்சாகத்தில் தமிழில் முதுகலை பட்டமும் பெற்றேன் என்று ஜோதி தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்க்கல்வியில் இவரின் சாதனைகள்:-
* 2009-இல் மலேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் குமரனின் திருகரங்களால் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
* 2011-இல் இளங்கலை பட்டம்.
* 2015-இல் முதுகலை பட்டம் பெற்றார்.
தொடர்ந்து 2016 -இல் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் வாயிலாக திருக்குறள் கற்றுக்கொடுக்கும் அரிய வாய்ப்பு தேடி வந்ததாக ஜோதி கூறினார்.
2006 ஆம் ஆண்டில் மலேசிய தமிழ் வானொலி மின்னல் பன்பலை நடத்திய பொங்கல் பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசை தட்டிச் சென்றார் ஜோதி சுப்பிரமணியம்.
வணக்கம் மலேசிய நிறுவனம் நடத்திய கருத்து விவாத நிகழ்ச்சியில் ஐந்து பருவங்களிலும் கலந்து கொண்டுள்ளார். வணக்கம் மலேசிய நிறுவனத்தால் ஆஸ்தான பேச்சாளர் என்று அன்பாகவும் அழைக்கப்ப டுகிறார். அது மட்டுமா, 2010 தொடங்கி 2013 வரை திண்டுக்கல் ஐ லியோனி, கு.ஞானசம்பந்தன் போன்ற தமிழ்ப்பேச்சாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
தமது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போன இல்லத்தரசி ஜோதி சுப்பிரமணியம் தற்போது வீட்டில் தமிழ் வகுப்பு, இலக்கிய வகுப்பு, திருக்குறள் வகுப்புகளை நடத்தி வருகிறார். தமது பேச்சாற்றலையும் படைப்பாற்ற லையும் அவ்வப்போது வெளி கொணர்ந்து வரும் இவர், இல்லத்தரசியாக இருந்தாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைக்க முடியும்!