img
img

இராணுவ கிளர்ச்சியை மக்களுடன் தகர்த்தெறிந்து மீண்டும் அதிபரானவரின் கதை...
வெள்ளி 29 ஜூன் 2018 15:39:29

img

துருக்கி நாட்டின் தற்போதைய அதிபராக இருக்கும் ரெஜெப் தையீப் எர்டோகன் மீண்டும் இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் பதவிக்காலம் அடுத்த வருடம் வரை இருக்கிறது. இருந்தாலும் 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இராணுவ சதி புரட்சி காரணமாக அதிபருக்கு மேலும் சில அதிகாரங்கள் வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூட்டிக்கொண்டார்.

அதன்படி அடுத்த வருடம் 2019 ல் நடக்க இருந்த தேர்தலை தனது அதிகாரத்தின் கீழ் இந்த வருடமே மாற்றினார். இதனால் துருக்கியில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பொது தேர்தலும், அதிபர் தேர்தலும் நடத்தப்பட்டது. நீதி மற்றும் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்தவர் அதிபர் எர்டோகன். இந்த தேர்தலில் மொத்தம் 99% வாக்குகள் பதிவானதில் எர்டோகன் போட்டியிட்ட கட்சி 53% வாக்குகள் பெற்றுள்ளது. எர்டோகனுக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று சொல்லப்பட்ட முகரம் இன்ஸின் மற்றும் அவர் போட்டியிட்ட கட்சியான மக்கள் குடியரசு கட்சி 31% வாக்குகளே பெற்றது. 

துருக்கியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு செலுத்துவதை வைத்துதான் அதிபர்கள் தேர்தெடுக்கப்பட்டு வந்தனர். 2014 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 91 ஆண்டுகளுக்கு பிறகு 2014ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய பதவியான அதிபர் பதவி மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது, அந்தத் தேர்தலில் அதிபராக தேர்தெடுக்கப்பட்டவர்தான் எர்டோகன். 2003 முதல் 2014 வரை எர்டோகன் துருக்கியின் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எர்டோகன்னின் ஆட்சியில் துருக்கி பல்வேறாக செதுக்கப்பட்டுள்ளது, நாடு வளர்ச்சி பாதையில் சருக்காமல் சென்றுகொண்டிருக்கிறது என்று செல்லப்பட்டுள்ளது. இப்படியெல்லாம்  ஒரு பக்கம் சொன்னாலும். மறு பக்கத்தில் அவர் ஒரு சர்வாதிகாரி என்று சித்தரிக்கப்படுகிறார். எர்டோகன் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக போட்டியாளர்களைப் பேசவிடாமல் செய்தார். பல்வேறு ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்தார். துருக்கிய அரசியலமைப்பையே மாற்றியமைத்தார். இது போன்ற காரியங்களைச் செய்ததனால் நடக்கப்போகும் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாது என்றார்கள், ஆனால் அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். 

துருக்கியில் இதுவரை ஐந்து முறை இராணுவம் ஆட்சியை அமைந்துள்ளது. இவரது ஆட்சிக் காலத்தில் 2016 ஆம் ஆண்டு இராணுவ சதி கிளர்ச்சி  ஏற்பட்டது. ஜூலை 15, 2016 ஆம் ஆண்டு துருக்கியின் பெரிய நகரான இஸ்தான்புல்லில் இருக்கும் பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள இரண்டு பாலத்தில் இராணுவ யுத்த டாங்குகளை கொண்டு இரவு 7:30 மணிக்கு ஆட்சி கவிழ்ப்பு முறையை தொடங்கியது இராணுவம். தலைநகர் அங்காராவிலும், இஸ்தான்புல்லிலும் திடீர் தாக்குதல் இராணுவத்தினர்களால் நடத்தப்பட்டது.

இராணுவ விமானங்கள் தாழ்வாக பறந்தன. அதைத் தொடர்ந்து அங்கு இராணுவ புரட்சிக்கான முயற்சி நடைபெறுவதாக பிரதமர் பினாலி யில்டிரிம் அறி வித்தார். இராணுவத்தில் உள்ள ஒரு பிரிவினர் புரட்சி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசு படைகள் பதிலடி தருவதற்கு அழைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார். 

ஒரு மணி நேரம் கழித்து இராணுவத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘நாட்டை அமைதிக்கான அமைப்பு வழிநடத்துகிறது. ஊரடங்கும், இராணுவ சட்டமும் அமல்படுத்தப்படும். அரசியல் சட்ட ஒழுங்கையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் நிலை நாட்டுவதற்காகத்தான் இந்த புரட்சி’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்மரிஸில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த எர்டோகன் கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து தனது கைபேசியின் மூலமாக நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பினார்.

இராணுவ தலைமையின் அங்கீகாரத்தை பெறாத ஒரு இராணுவ பிரிவு சதி புரட்சி செய்கிறது, மக்கள்தான் நாட்டுக்காக போராட்ட வேண்டும் என்றார். மக்களும் இஸ்தான்புல் போன்ற நகரங்களுக்கு திரண்டனர். இராணுவ கிளர்ச்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே சண்டைகள் மூண்டது, இருந்தாலும் நாட்டிற்காக பொதுமக்கள்  கிளர்ச்சியாளர்களை அடித்து துவம்சம் செய்தனர்.

ஆங்காங்கே மக்களிடமும், காவலர்களிடமும் கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். “இராணுவ கிளர்ச்சி முயற்சியினால் நடந்த மோதல்களில் 161 பேர் கொல்லப்பட்டனர், 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 3000 பேர் கைது செய்யப்பட்டனர்” என பிரதமர் யில்டிரிம் அறிவித்தார். இரண்டு நாட்கள்வரை சலசலப்பாகவே இருந்துள்ளது. சாலைகளில் துப்பாக்கிச்சூடுகள், விமான நிலையம் முன்பு யுத்தபீரங்கிகள் நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தன. இராணுவப்புரட்சி கைக்குள் கொண்டுவரப்பட்டவுடன் இராணுவப்படை தளபதிகள் மீண்டும் வேலைக்கு திரும்பினார்கள். இராணுவ கிளர்ச்சியில் முக்கியப்புள்ளியாக இருந்தவர்க ளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டன, சிலர் கொல்லவும் பட்டனர். 

இவ்வாறு எல்லாம் நடந்ததால் எர்டோகனுக்கு மக்களின் பலம் இந்த தேர்தலில் குறைந்திருக்கும், அவர் வெற்றிபெறுவதே சவால்தான் என்று கூறி வந்தனர். இறுதியில் அவர் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினார். இந்த வெற்றியைக்கூட ஊழல் செய்துதான் பெற்றிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து பேசிய எர்டோகன் கூறியதாவது, “என்னை அதிபருக்கான கடமையை செய்ய மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதிபருக்கான அதிகார சீர்திருத்தம் விரைவாக செயல்படுத்தப்படும். இந்த தேர்தல் மூலம் ஒட்டுமொத்த உலகத்திற்கே ஜனநாயகம் குறித்து துருக்கி பாடம் கற்பித்துள்ளது. இந்த நாட்டு மக்களான 8 கோடி பேரும் இதற்கு சொந்தக்காரர்கள்தான்". 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img