வாஷிங்டன்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்ப டுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்டும் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. அடைக்கலம் கோரி அமெரிக்காவிற்குள் நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்துள்ளன. பெற்றோரை பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் அலறி துடிக்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளிவந்து, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியாவும் எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த நிலையில், சட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களை கைது செய்யும்போது, குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல், இரு தரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்கும் உத்த ரவு ஒன்றை அதிபர் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்தும் இந்த உத்தரவில் எதுவும் குறிப்படவில்லை.