சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில், பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். அதுமட்டுமின்றி பெண்கள் திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்க்கவும் அனுமதித்தார்.சல்மானின் இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாம், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் வரவழைத்துள்ளது.
அதனால் இது குறித்து அல்கொய்தா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சியில் ஏராளமான மாற்றங்கள் வருகின்றன. மசூதிகள் அனைத்தும் சினிமா தியேட்டர்களாக மாறுகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள், இமாம்களுக்கு மாற்றுப் புத்தகங்கள் தரப்படுகின்றன. மேற்கத்திய மற்றும் கிழக்கு நாடுகளில் இருந்து ஆதிக்கவாதிகளும், மதச்சார்பின்மையாளர்களும் வந்து கருத்து களைப் பரப்புகிறார்கள். ஒழுக்கக் குறைவு ஏற்படவும், ஊழல் நடைபெறவும் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
புனித மெக்கா நகருக்கு அருகே அமைந்திருக்கும் கடற்கரை நகரான ஜெத்தாவில் டபிள்யு டபிள்யு இ எனப்படும் ராயல் ரம்பிள் மல்யுத்தப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியைப் பார்க்க வந்திருந்த முஸ்லிம் இளம் பெண்கள், ஆண்கள் மத்தியில் ஆண், பெண் போட்டியாளர்கள் தங்கள் உடலைக் காட்டிக்கொண்டும், மறைக்க வேண்டிய உடற்ப்பகுதிகளை மறைக்காமல் விளையாடினார்கள். இதைப் பார்வையாளர்களும் ரசித்தா ர்கள். இரவு நேரங்களில் இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. திரையரங்களும், சர்க்கஸ் காட்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஊழல்வாதி அரசு அதிகாரிகள் எதையுமே தடுக்கவில்லை. இது போன்ற மதத்துக்கு விரோதமான பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள் என்று அல்கொய்தா எச்சரித்துள்ளது.