டப்ளின்,
அயர்லாந்து நாட்டில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண்ணான சவீதா ஹலப்பனாவர் (வயது 31) என்ற பல் மருத்துவர் 2012-ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தனது வயிற்றில் வளரும் 17 வார கருவை கலைக்க அயர்லாந்து அரசிடம் அனுமதி கேட்டார். சட்டப்படியும் போராடினார். ஆனால் இதற்கு பழமைவாதத்தை பின்பற்றி வரும் அயர்லாந்து அரசு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சவீதா கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டு பரிதா பமாக உயிரிழந்தார். இது அயர்லாந்து நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதைத் தொடர்ந்து கருவை கலைக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றிய பொது வாக்கெடுப்பை அயர்லாந்து அரசு கடந்த 25-ந்தேதி நடத்தி யது. இதில் பதிவான 35 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக 66.4 சதவீதமும், எதிராக 33.6 சதவீதமும் வாக்குகள் பதிவானது. கருக்கலைப்புக்கு அமோக ஆதரவு கிடைத்தி ருப்பதால் விரைவில் அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்படும். அதன்படி 12 வாரம் முதல் 24 வாரம் வரையி லான கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து நேரும் என்றால் அந்த கருவை கலைக்க அனுமதி கிடைக்கும்.
இதை வரவேற்றுள்ள சவீதாவின் தந்தை ஆன்டனப்பா யாலகி கூறுகையில், ‘எனது மகளின் மரணத்துக்கு அயர்லாந்து மக்கள் சரியான நீதியை வழங்கி இருக்கின்றனர்’ என்றார்.