இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜூலை மாதம் 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
342 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 2013-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நவாஸ்ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 166 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ்ஷெரீப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ்ஷெரீப் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.தற்போதைய அரசின் பதவி காலம் வருகிற 31-ந்தேதி முடிவடையும் நிலையில் தேசிய பொதுச் சபைக்கு (நாடாளுமன்றம்) தேர்தலை நடத்த பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
இதையடுத்து ஜூலை 25 மற்றும் ஜூலை 27 ஆகிய 2 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தேர்தலை நடத்த அனுமதிக்கும்படி ஜனாதிபதி ஹூசைனுக்கு பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் கடிதமும் எழுதியது. இதில் ஜூலை 25-ந்தேதியன்று தேர்தலை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தார். நாடாளுமன்ற தேர்த லுடன் பாகிஸ்தானில் உள்ள 4 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜூன் 1-ந்தேதி முதல் இடைக்கால அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இடைக்கால பிரதமராக தற்போதைய பிரதமர் அப்பாசியே தொடர்வதா? அல்லது வேறு யாரையும் நியமிக்கலாமா? என்பது குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலை வரான குர்ஷித் ஷா இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
இது தொடர்பாக 6 முறைக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான முடிவு எட்டப்படவில்லை. இடைக்கால அரசுதான் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சிக்கு கடும் போட்டியை பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஏற்படுத்துவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவருடைய தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை 3-வது இடத்துக்கு தள்ளிவிட்டு பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 342 தொகுதிகளில் ஆட்சியை கைப்பற்ற 172 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம் ஆகும். பாகிஸ்தானில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 10 கோடியே 59 லட்சம். இவர்களில் ஆண் வாக்காளர் 5 கோடியே 92 லட்சம். பெண் வாக்காளர் 4 கோடியே 67 லட்சம் பேர் ஆவர்.