யோங்யாங்
அமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வந்தது. இதனால் வடகொரியா, தென்கொரியா இடையேயான மோதல் போக்கை, அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பலை நிறுத்துவது, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சி ஆகியவற்றை அமெரிக்கா மேற்கொண்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் இடையே கடும் வார்த்தை போர் நீடித்தது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க விரும்புவதாக, அங்கு சென்ற தென்கொரிய தூதரக குழுவிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அதனை டிரம்பும் ஏற்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 27-ல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார்.
இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஜூன் 9-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக அமெரிக்க கைதிகளையும் வடகொரியா விடுவித்தது. இதற்கு அமெரிக்கா, வடகொரியாவுக்கு பாராட்டும் தெரிவித்தது. டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக அணு ஆயுத மையங்களை மூடுவதாக வடகொரியா அறிவித்து இருந்தது.
இவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் சுமூகமான சூழல் நிலவி வந்த நிலையில், திடீரென வடகொரியா மீண்டும் முரண்டு பிடித்துள்ளது. வடகொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ அணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா முழுமையாக கைவிட வற்புறுத்தக்கூடாது. அமெரிக்கா அவ்வாறு வற்புறுத்தினால் அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம். அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டு அதற்கு மாற்றாக அமெரிக்கவுடன் பொருளாதார உறவிலும் ஈடுபட மாட்டோம்” என தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த திடீர் மிரட்டலால், திட்டமிட்டபடி டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடைபெறுமா? என்பது கேள்வி க்குள்ளாகியுள்ளது.