குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்த புகாரில், இங்கிலாந்து உள்துறை மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். அண்மையில், இவர் மீது முறைகேடு புகார்கள் எழுந்தன. பிரிட்டனில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய உள்துறை மந்திரியான ஆம்பர் ரூட், தனது பதவியில் இருந்து நேற்று விலகினார். இதுதொடர்பாக, பிரதமர் தெரசா மேவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். கடிதத்தை பெற்றுக் கொண்ட பிரிட்டன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ஆம்பர் ரூட்டின் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.