அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் ஹெர்வி மீதான குற்றச்சாட்டிற்கு பின் உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு பாலியல் வன்முறைகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றன. #MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசி வருகின்றனர். சினிமா துறை என்று சுருக்காமல் அனைத்து துறைகளில் பணிபுரியும் பெண்கள் தாங்கள் சந்தித்த கொடு மைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
#MeToo மூலம் பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் 36 வயதாகும் பாகிஸ்தானை சேர்ந்த பாடகி மீஷா ஷஃபி பாலியல் தொல்லை குறித்து டுவீட்டியுள்ளார்.பாகிஸ்தானை சேர்ந்த பாடகர் அலி ஜாபர் மீது தான் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,நான் பிரபலமாக இருந்தாலும் ஒரு பெண்ணாக சில விஷயங்கள் பற்றி பேசுவது மிகவும் கடினமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை. பிரபலமான பாடகியான எனக்கே இது நடந்தால் இந்த துறைக்கு வர விரும்பும் எந்த பெண்ணுக்கும் இது நடக்கலாம் என்பதே என் கவலை.
என் சக பாடகர் அலி ஜாபர் எனக்கு ஒன்று அல்ல பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது நான் இந்த துறைக்கு வந்த புதிதிலோ அல்லது இளம் பருவத்திலோ நடக்கவில்லை. நான் பிரபலமான பிறகு, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு நடந்துள்ளது.பாலியல் தொல்லைக்கு ஆளானது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மன வேதனையை அளித்துள்ளது. அலியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவருடன் சேர்ந்து நான் பல மேடைகளில் பாடியுள்ளேன். அவரின் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
இது போன்ற விஷயங்கள் நடந்தால் அமைதியாக இருக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நான் பேசியுள்ளேன். இதன் மூலம் என்னை பார்த்து இளம் பெண்களும் வாய் மூடி அமைதி காக்காமல் துணிந்து பேசுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் மீஷா.