img
img

உலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!
புதன் 14 மார்ச் 2018 19:00:45

img

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்புச் செய்தியை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

ஸ்டீபனின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர், பெரிய விஞ்ஞானி; அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர். 

 "வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" - ஸ்டீபன் ஹாக்கிங்

இயற்பியல் உலகம் போற்றும் தன்னிகரற்ற நம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து, பொக்கிஷப் பகிர்வு

மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை, வலது பக்கம் சாய்ந்திருக்கும். நெற்றியை அதிகம் மறைக்காத மயிர். கேமராவும் சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடைகொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்து போய்விட்டன. எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல். ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்துவரும் ஓர் அதி அற்புதன். இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும். உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு - அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்...

ஸ்டீபன் ஹாக்கிங்

அது, இரண்டாம் உலகப் போர் சமயம். மருத்துவம் படிக்கும் பிராங்கும், தத்துவம் படிக்கும் இசோபெல்லும் காதல் வயப்படுகிறார்கள். கல்யாணம் செய்துகொள்கிறார்கள். எங்கும் போர். பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கு மத்தியில், அந்தக் குழந்தையின் அழுகுரல் அத்தனை இன்பமானதாய் அவர்களுக்கு இருக்கிறது. கருவறை கடந்து பூமியை எட்டிப்பார்த்த அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் அண்டம் கடக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்ற எண்ணம் துளியளவும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அது 1942 -ம் ஆண்டு, ஜனவரி 8 -ம் தேதி. கலீலியோ பிறந்து சரியாக 300 ஆண்டுகள் ஆகியிருந்தது அப்போது.

ஸ்டீபன் ஹாக்கிங் வளரத் தொடங்குகிறார்.  பள்ளியில் ஒரு சராசரி மாணவன்தான். ஆனால், ஏன்? எப்படி? என்ற கேள்விகள் எதைப் பார்த்தாலும், எப்பொழுதும் அவனுள் எழுந்துகொண்டேயிருந்தது. அதற்கான விடைகளைத் தொடர்ந்து தேடத் தொடங்குகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உலகம் எப்படித் தோன்றியது என்ற பெரும் கேள்வி அவனுள் கனன்றுகொண்டே இருந்தது. 

1960 -களில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற குறைபாட்டு நோயால் பாதிக்க ப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி, அதை ஈடுசெய்து வந்தார். ஒரு கட்டத்தில், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், 'ஈக்வலைஸர்' என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு... இன்று கன்னத் தசைகளின் அசைவுகள்மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசி வருகிறார். 

ஸ்டீபன் ஹாக்கிங்

இது, இவரின் அறிமுகம். இவரின் அடையாளங்கள் அண்டவியல் ஆராய்ச்சிகள்தாம். டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" ( A Brief Histroy of Time) என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தி யுனிவர்ஸ் இன்  எ  நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள், இவரின் கோட்பாடுகளைத் தழுவியே எடுக்கப்படுகின்றன. 

கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி, ஜேன் வைல்டை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக்கொண்ட செவிலியர் எலைனுடன் காதல்கொண்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டு, பத்தாண்டுகள் அவரோடு வாழ்ந்தார். உடல் இச்சைகள் கடந்த அழகான காதலாக அந்தக் காதல் இருந்தது.

அதிதீவிர இடதுசாரி சிந்தனைகொண்டவர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து, இஸ்ரேலில் பங்கேற்கவேண்டிய மிக முக்கிய அறிவியல் கூட்டத்தைப் புறக்கணித்தார். வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு எனத் தன் வீல்சேரில் பயணித்தபடியே எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல்கொடுத்தார்.  ஏலியன், வேற்று கிரகம் என 75 வயதாகியும் தொடர்ந்து இயங்கிவரும் ஸ்டீபன், மனித சமுதாயத்திற்கு மிக முக்கிய எச்சரிக்கை மணியை அடிக்கிறார்... 

ஸ்டீபன் ஹாக்கிங்

" நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்தப் பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டி ருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது... நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் " என உறுதிபடக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!        

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img