இஸ்லமபாத்
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள கைர்புர் என்ற இடத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில், பயணிகளுடன் சென்ற வேன் மீது நிலக்கரி ஏற்றிச்சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 20 பேர் பலியாகினர். காலைவேளையில் நிலவிய அடர் பனியே இந்த விபத்துக்கு காரணம் என்று சிந்த் மாகாண போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சுமையுடன் வந்த லாரி, வேனை முந்திச்செல்ல முற்பட்டதாகவும் அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது கவிழ்ந்தது என்றும் உள்ளூர் செய்தி சேனல்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மோசமான சாலைகள், அஜாக்கிரதையாக ஓட்டுதல், பழுதான வாகனங்கள் போன்ற காரணிகளால் பாகிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 9 ஆம் தேதி மலைச்சாலையில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகியது நினை விருக்கலாம்.