இஸ்லமபாத்,
அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, கத்தார், சுவிட்சர்லாந்து என 5 நாடுகளில் ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சவுதி அரேபியா, கத்தார் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் நேற்று பாகிஸ்தான் சென்றார். இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸியை சந்தித்து பேசிய டில்லர்சன், இரு தரப்பு ஒத்துழைப்பு, பங்களிப்பு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், இந்த ஆலோசனையின் போது, பாகிஸ்தானுக்குள் இயங்கும் பயங்கரவாத செயல்பாடுகளை முற்றிலும் அழித்தொழிக்கும் முயற்சியை அதிகரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமரிடம் டில்லர்சன் வலியுறுத்தியதாகவும், இதற்கு பதிலளித்த அப்பாஸி, பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளதாகவும் தெரிவித்ததாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு பிறகு, டில்லர்சன் இந்திய தலைநகர் டெல்லிக்கு வருகிறார். இருதரப்பு ராணுவ கூட்டுறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்திய பசிபிக் வளம் குறித்து முக்கிய ஆலோசனையை இந்திய தலைவர்களுடன் டில்லர்சன் நடத்த உள்ளார்.