img
img

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ‘தாரக மந்திரம்’ இப்போது மாறி இருக்கிறது
புதன் 20 ஜூலை 2016 10:24:10

img

செம்மைத் தமிழில் முழுமையாகக் கிடைத்திருக்கும் முதலாவது தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியமும், அதன் வழிநூல் நன்னூலும் வகுத்துள்ள 10 இலக்கியக் குற்றங்களுள் ஒன்று ‘சென்று தேய்ந்து இறுதல்’என்பதாகும். இதன் பொருள் ஆமை-முயல் கதையில் முதலில் வேகமாக ஓடிப் பின்னர் தூங்கி மெதுவாகத் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து ஓடிய ஆமையிடம் இறுதியில் முயல் தோற்றுப் போனதைப் போன்று தொடக்கத்தில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தொடங்கியப் பிறகு போகப் போக சன்னங் சன்னமாக வேகத்தைக் குறைத்துக் கொண்டு இறுதியில் ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்’என்னும் நிலையில் ஓர் இலக்கியம் தரம் குறைந்து போகும் என்பதாகும். நம்முடைய மலேசிய இந்திய அல்லது தமிழ்க் குமுகாயத்தின் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் முதலியவற்றுள் பெரும்பாலானவை இலக்கியக் குற்றமான சென்று தேய்ந்து இரங்கல் என்பதைப் போலவே நன்றாகத் தொடங்கப்பட்டுப் போகப் போக நாளடைவில் நலிந்தும் மெலிந்தும் நசிந்தும் கசிந்தும் போவதைக் கண்கூடாகக் கண்டே வருகிறோம். ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றியும் தோய்வின்றியும் கூட்டுறவுக் காவலர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம், டத்தோ ப.சகாதேவன் இருவரின் தலைமைத்துவத்தில் சிறப்பாக இயங்கி வரும் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம், மேற்கண்ட இலக்கியக் குற்றமான ‘சென்று தேய்ந்து இரங்கல்’என்பதற்கு மாறாக ‘நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் பூப்படைந்த புதுப் பெண்ணைப்போல வளர்ச்சியை மேன்மேலும் கண்டு பீடு நடைபோட்டு வருகிறது என்பது மலேசிய இந்தியர் வரலாற்றுப் பொன்னேட்டில் பொன்னாலும் வைரத்தாலும் பொறிக்கப்பட வேண்டிய எழுத்துகள் என்றால் அது மிகையல்ல. அடியில் சிமிந்தியைக் கொண்டிருக்கும் பொம்மை எப்படிப்பட்ட முயற்சியாலும் தலை சாயாமல் எப்போதும் நிமிர்ந்து கொள்வதைப் போலவும் மெழுகுவர்த்தியை எவ்வாறெல்லாம் சாய்த்துப் பிடித்தாலும் அதன் ஒளி மேல் நோக்கியே ஒளிர்வதைப் போலவும், உலகப் பொருளாதாரம் பல சரிவுகளைக் கண்டாலும் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் தனது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டே போகிறது; அதன் முதலீடுகளும் கையிருப்பும் உயர்ந்து கொண்டே போகின்றன என்பதை அச்சங்கம் அண்மையில் நடத்தி முடித்த பேராளர் கூட்டத்தில் டான்ஸ்ரீ கே.ஆர்.எஸ் அவர்களால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் மெய்ப்பித்துள்ளன. சங்கத்தின் இந்த வளர்ச்சிக்குத் தொலைநோக்குப் பார்வை, ஆழமான சிந்தனை, வேகமான செயல்திறன் முதலியவற்றைக் கொண்டிருக்கும் டான்ஸ்ரீ சோமா, டத்தோ சகா இருவரின் சிறந்த புரிந்துணர்வு மிகுந்த தலைமைத்துவம்தான் முதன்மைக் கரணியம் என்றால் அது புனைந்துரையல்ல. அந்த வகையில் மேலே கூறப்பட்டது போலச் சென்று தேய்ந்து இரங்கலுக்கு இலக்காகமல் சங்கம் பீடுநடை நடை போடுகிறது என்பதும் உண்மை. கூட்டுறவுச் சங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் மட்டுமே உயர்வு காண வேண்டும் என்பதல்ல, அதையும் தாண்டி இயல், இசை, நாடகம் எனப் பண்டைத் தமிழர்கள் வகுத்தும் பகுத்தும் தந்திருந்தும் முத்தமிழ் வளர்ச்சிக்கும் தங்களால் முடிந்த அளவுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதும் கூட்டுறவுச் சங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை அறிந்து மலேசிய இந்தியர்கள்- குறிப்பாகத் தமிழர்கள் அடையும் அருமைக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் சங்கத்தின் முழு ஆதரவில் நடித்துக் காட்டப்பட்ட ‘சாணக்கிய சபதம்’நாடகம் உட்பட, வாரியத்தின் செயற்பாடுகள் மேற்கண்டவாறு கூற வைத்துள்ளன. டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா-டத்தோ சகா ஆகியோரின் முயற்சியாலும் முடிவாலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கலை, இலக்கிய அறவாரியம் தொடர்ந்து இந்நாட்டில் தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பும் அளப்பரியது. இந்த வகையிலும் சென்று தேய்ந்து இரங்கல் என்பதற்கு ஆட்படாமல் முத்தமிழ் வளர்ச்சிக்குச் சங்கம் பாடுபடுகிறது என்பது, கடந்த ஐந்து ஆண்டுப் பணிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘பொருளாதாரத்தோடு உயர்வோம்’என்பதுதான் சங்கத்தின் தாரக மந்திரமாகத் தொடக்க காலத்தில் இருந்தது. அதனை இப்போது ‘பொருளோடும் தமிழோடும், தமிழ்க் கலையோடும் இலக்கியத்தோடும் உயர்வோம்’என்று டான்ஸ்ரீ சோமா-டத்தோ சகா தலைமைத்துவம் மாற்றி அமைத்திருப்பதாகக் கூறுவது காலத்தின்-சங்கத்தின் பரிணாம வளர்ச்சிக்கு உகந்ததாகும் எனக் கூறி இந்தியக் குமுகாயம் மகிழ்கிறது; சங்கத்தை வாழ்த்துகிறது.

பின்செல்

தலையங்கம்

img
கடுமையான நடவடிக்கை அவசியம்!

முதல் குற்றத்திற்கு 250 வெள்ளியும் இரண்டாவது, மூன்றாவது குற்றங்களுக்கு 350

மேலும்
img
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ‘தாரக மந்திரம்’ இப்போது மாறி இருக்கிறது

செம்மைத் தமிழில் முழுமையாகக் கிடைத்திருக்கும் முதலாவது தமிழ் இலக்கண

மேலும்
img
அரசியல் சதுரங்கம்

நா ட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்

மேலும்
img
ஸ்ரீ சத்ய பாபாவின் அருள் மொழிகள்

ஒரே மதம் - அதுவே அன்பு ஒரே மொழி - இதயத்தின் மொழி ஒரே ஜாதி - மனித ஜாதி ஒரே

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img